உடலே மருத்துவர்

நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 1

நோய் தொந்தரவுகள் அதிகமாகி மருத்துவரை சந்தித்து நோய்க்கான காரணங்களை அறிந்து சிகிச்சை பெற்று குணமடைகிறோம். ஆனால் அதற்கு முன்னதாகவே ஒரு மருத்துவர் நோய்களின் தொடக்க நிலையிலேயே நமக்கு அறிவிக்கிறார். பெரும்பாலான நேரங்களில் குணப்படுத்தவும் செய்கிறார். அவர் சொல்வதைக் கேட்டு வாழ்வியலை ஒழுங்குபடுத்தும்போது நோய் வராமல் தடுக்கவும் வந்த நோய்களை விரட்டவும் செய்யலாம். அவர் தான் நம் உடல் எனும் மருத்துவர்.

நம் வாழ்வியல் இயற்கையோடு இணைந்து இருக்கும்போது உடல் உறுப்புகள் சீராக இயங்குகிறது. எந்த நோய்களும் ஏற்படுவதில்லை. இயற்கை விதிகளை மீறும்போது அதை நமக்கு உடல் அறிவிக்கிறது. அதை உணர்ந்து சரி செய்யும் செயல்களில் ஈடுபடாமல் தொடர்ந்து இயற்கை விதி மீறலில் ஈடுபடும்போது உடல் சீர்கேடு அடைகிறது. உடல் நம்மோடு உரையாடும் மொழியை உணர்ந்து வாழ்வியலை சரி செய்யும்போது நோய்களிலிருந்து மீள முடியும்.

எது உடலின் மொழி

நம் உடலானது நலமுடன் இயங்கத் தேவையான ஆற்றலைப் பெற உடல் நம்முடன் பேசும் மொழிகள் பசி, தாகம், தூக்கம், ஓய்வு ஆகியவையே.

  • உணவிலிருந்து ஆற்றல் தேவை ஏற்படுகிறபோது பசி எனும் உணர்வு மூலமாக உடலானது நமக்கு ஆற்றல் தேவையை அறிவிக்கிறது
  • உடலுக்கு நீர் தேவை ஏற்படுகிற போது தாகம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
  • தொடர் உழைப்பின் மூலமாக ஆற்றல் இழப்பு ஏற்படுபோது அதை சரி செய்யும் விதமாக ஓய்வைக் கேட்கிறது.
  • உடல் தன்னைப் புதுப்பிக்கும் விதமாக வளர்ச்சிக்கு தேவையான தூக்கத்தை அறிவிக்கிறது.

உடலின் இந்த அறிவிப்புகளை மறுக்கும்போது உடலின் சீரான இயக்கம் பாதிக்கிறது.உடலில் நோய் ஏற்படுகிறது.

உடலின் இந்த அறிவிப்புகளை மறுப்பது இயற்கை விதி மீறல்கள் ஆகும்

  • பசிக்கும்போது உணவு உண்ணாமல் இருப்பது
  • பசிக்காமல் உண்பது
  • பசி அளவை விட அதிகமாக உண்பது
  • தாகம் ஏற்படும்போது தண்ணீர் குடிக்காமல் இருப்பது
  • தாகம் இல்லாத போது அதிகப்படியான நீர் அருந்துவது
  • இரவு தூங்காமல் கண் விழிப்பது
  • பகலில் அதிகம் உறங்குவது

பசி

 மிகினும் குறையினும் நோய்செய்யும்

பசிக்கும் போது உணவு உண்ணாமல் இருக்கும்போது உடலிற்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல் போவதோடு, சிறு நோய்களைக் கூட எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றலைப் பெற இயலாமல் போகிறது. இந்த உடல் உயிருடன் வாழ்வதற்கும் இயங்குவதற்கும் அடிப்படையான உணவு கிடைக்காத சூழல் ஏற்படுபோது பசி எனும் உணர்வு பிணியாக உருவெடுக்கிறது. தன் நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவக்கும் உணவு கிடைக்கச் செய்வது அரசின் பொறுப்பு.

 குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் 2019 புள்ளி விவரப்படி சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் 117 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 102-வது இடத்திற்கு சென்றுள்ளது (0 என்பது பசியோடு வாழும் மக்கள் இல்லை என்பதைக் குறிக்கும். எணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதிக எண்ணிக்கையிலான மக்கள் பசியோடு வாழ்கிறார்கள் என்று பொருள்). பகை நாடு என்றும், தீவிரவாத நாடு என்றும் இந்தியாவால் குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானை விட 8 வது இடத்தில் பின்னோக்கி உள்ளது இந்தியா. இந்த நிலையில் ரேசன் கடைகள்தான் ஏழை எளிய மக்களுக்கு உணவுப்பொருட்களை அளிக்கிற முக்கியமான மூலமாக இருக்கிறது. ரேசன் கடைகளை மூடப்படும் பட்சத்தில் இந்த பட்டியலில் இன்னும் கடைசி இடத்திற்கு இந்தியா சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.

எப்படி பசிக்கும்போது உண்ணாமல் இருப்பது நோயினை உண்டாக்குமோ, அதேபோல பசிக்காமல் உன்ணுவதும் நோயினை உண்டாக்கும். உடலுக்கு ஆற்றல் தேவை ஏற்படுபோது பசி என்ற உணர்வை அறிவிக்கிறது. இந்த நிலையில் உணவை செரிப்பதற்கான அமிலம் இரைப்பையில் சுரந்து தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் உணவானது வாயில் உமிழ்நீரோடு நன்கு மெல்லப்பட்ட நிலையில் இரைப்பைக்குள் நுழையும்போது செரிமானம் நல்ல முறையில் நிகழ்கிறது. இதன் மூலமாக உடலுக்குத் தேவையான ஆற்றலை உடல் இன்னும் பிற உறுப்புகள் மூலமாகவும் உடலெங்கும் எடுத்துச்செல்கிறது.

பசியற்ற நிலையில் இரைப்பையில் செரிமானத்திற்கு தேவையான அமிலங்கள் சுரப்பதில்லை. இந்த நிலையில் உண்ணும் உணவானது இரைப்பையிற்குள் விழும்போது செரிமானத்திற்குரியதாக இல்லாமல் கழிவாக மாறுகிறது. ஏனெனில் பசியற்ற நிலையில் செரிமானத்திற்குத் தேவையான பொருட்கள் இரைப்பையில் சுரப்பதில்லை.

இன்றைய அவசரகால பொருளாதார தேடல் நோக்கிய வாழ்க்கை ஓட்டத்தில் பசியைக் கவனித்து உண்ணும் முறை என்பது மாறி, நேரம் கிடைக்கும்போதோ அல்லது உணவு கிடைக்கும்போதோ உண்பது எனும் நிலை உள்ளது. வறுமையின் காரணமாக பசிக்கும்போது உணவு உண்ண முடியாத நிலையும் பணிச்சுமை காரணமாக உணவு உண்ண முடியாத சூழலும் உடலுக்குத் தீங்கானதே.

நோயில்லாமல் வாழ திருக்குறள் கூறும் நெறி

பெரும்பாலான நோய்களுக்கு தொடக்கமாக இருப்பது முறையற்ற செரிமானமே. நோயில்லாமல் வாழ்வதற்கு உலகப்பொதுமறை திருக்குறள் கூறும் கருத்துகள்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்று எதுவுமே வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர்.

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

 உண்ட உணவு செரித்ததையும், உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும்

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து

உண்டது செரித்ததா என்பதை உணர்ந்து, நன்கு பசியெடுத்த பிறகு உடலுக்கு ஒத்து வரக்கூடிய உணவை அருந்த வேண்டும்

திருவள்ளுவர் ’அருந்தியது என்று குறிப்பிடும் காலமானது, இன்று நாம் உண்ணும் பசுமைப் புரட்சி என்ற பெயரில் புகுத்தப்பட்ட வேதி உரங்களால் நஞ்சாய் மாறிப்போன உணவும், கேடு விளைவிக்கும் பல ரசாயனங்கள் கலக்கப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பால், மைதா போன்ற உணவுப்பொருட்களும் பயன்படுத்தப்பட்ட காலம் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான உணவு முறையின் போதே, பசித்து மட்டுமே உண்ண வேண்டும் என்கிறார். மேலும் நன்கு செரித்ததை அறிந்த பின்னரும் கூட அளவரிந்து நன்கு பசியெடுத்த பிறகு உண் என்று பசித்து உண்ண வேண்டிய முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். மருந்து என்ற அதிகாரத்தில் முழுக்க பசித்து உண்ணுவதையே முக்கியத்துவப்படுத்தியிருக்கிறார். திருக்குறள் மட்டுமல்ல தமிழிலக்கியங்கள் பலவற்றிலும் உடல் நலம் குறித்து குறிப்பிடும்போது பசித்து உண்பதைக் கூறுகிறது.

மீதூண் விரும்பேல்-ஆத்திச்சூடி 

சர்க்கரை என்று சொல்லப்படுகிற நோய்க்கு முக்கிய காரணமே முறையற்ற செரிமானம்தான். பசியற்ற நிலையிலேயே தொடர்ந்து உண்ணும்போது ஆற்றலாக மாற்றப்பட வேண்டிய உணவு கழிவாக மாறுகிறது. எனவே செரிமானத்தின் இறுதியில் கிடைக்கும் குளுக்கோசானது(சர்க்கரை) தரமற்றதாக உடலால் ஏற்றுக்கொள்ள இயலாததாக மாறி சிறுநீராக வெளியேறுகிறது

சரியான செரிமானத்திற்கு செய்ய வேண்டியவை

  • எப்போது சாப்பிடுவது – பசிக்கும்போது
  • எவ்வளவு சாப்பிடுவது – பசி அளவிற்கு தகுந்தாற்போல்
  • என்ன சாப்பிடுவது – செயற்கை ரசாயனங்கள் அதிகமில்லாத பிடித்த உணவு
  • இரவு நேரங்களில் லேசான பசி உணர்வு உள்ளபோது பழங்களை மட்டும் சாப்பிடுவது சிறந்தது. இதனால் இரவு உடலில் ஆற்றலானது செரிமானத்திற்கு செலவிடப்படுவது குறைந்து உடலின் புதுப்பித்தல், கழிவு நீக்கம், நச்சு நீக்கம் உள்ளிட்டவைகளுக்கு பயன்படும்.
  • சாப்பிடும்போது பேசுவது, தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகம் படிப்பது, தொலைபேசி பயன்படுத்துவது உள்ளிட்டவைகளை செய்யாமல் உணவில் மட்டும் கவனம் செலுத்துவது.
  • உணவு உண்ணும் விடயத்தில் அதிக பாதிப்பிற்குள்ளாவது பெண்களே. பசிக்கும் நேரத்தை தள்ளிப்போட்டு.வீட்டில் உள்ள அனைவருக்கும் உணவு பரிமாறிவிட்டு கடைசியில் சாப்பிடுவார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் இப்படி குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்ட பிறகு தாமதமாக சாப்பிடுவது உடல் நலத்தை பாதிக்கும். இரவு நேர உணவானது செரிமானத்திற்கு எளிமையானதாகவும் மிகவும் முன்னதாகவே ஏழு மணிக்குள்ளாகவும் அமைய வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் பழங்கள் மட்டும் எடுத்துக்கொள்வது முறையான செரிமானத்திற்கு வழிவகுக்கும்.

இப்படி உடல் அறிவிக்கும் பசி எனும் உணர்வை அறிந்து உண்ணும்போது உடலில் கழிவு தேங்காமல் அரோக்கியமாக இயங்குகிறது.

இக்கட்டுரையின் தொடர்ச்சியைப் படிக்க:
நோய்களைத் தடுத்திட உடலே முதல் மருத்துவர் – பாகம் 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *