Tablighi Jamaat

பிளாஸ்மா கொடை கொடுக்க இணைந்த தப்லிக் ஜமாத் அமைப்பினர்

மூன்று மாதத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் கொரோனா பரவியதற்கு தப்லிக் ஜமாத்தை சார்ந்தவர்கள்தான் காரணம் என்று பெருமளவிலான வெறுப்பு பிரச்சாரங்கள் நடத்தப்பட்டன. பின்நாட்களில் அது பொய் என்று வெளிப்படையாக நிரூபணமானது. 

கொரானா பாதிப்பில் இருந்து மீண்ட தப்லிக் ஜமாத்தை சார்ந்தவர்களும், அவர்களது குடும்பத்தினரும் இலவசமாக பிளாஸ்மா தானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிகமோசமாக பாதிப்படைந்துள்ள கொரானா நோயாளிகளுக்கு தங்கள் பிளாஸ்மாவை கொடையாகக் கொடுத்து பல உயிர்களை காப்பாற்ற உதவி வருகின்றனர். 

பிளாஸ்மா கொடை என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்கள் மட்டுமே அளிக்க முடியும். சென்னை புது கல்லூரியைச் சேர்ந்த ஹமீதுதீன் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் Dr.எம்.ஏ.ஜியாஉல்லா கான், சமீர் ஆகியோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளுக்கு, தப்லிக் ஜமாத் அமைப்பினரை ஒருங்கிணைத்து பிளாஸ்மா கொடை அளித்து வருகின்றனர்.

“20-க்கும் அதிமானவர்கள் இதுவரை பிளாஸ்மா கொடை அளித்துள்ளனர். ஏறத்தாழ 5000-க்கும் அதிகமான தப்லிக் ஜமாத் குடும்பத்தினர் கொரோனா நோயில் இருந்து மீண்டுள்ளனர். யாருக்கு தேவைப்பட்டாலும், தப்லிக் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக பிளாஸ்மா கொடை அளிக்க வேண்டும் என தப்லிக் மதத்தலைவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

“கொரானா நோயில் இருந்து குணமடைந்து 28 நாட்களாவது நிறைவடைந்தவர்கள் மட்டும்தான் பிளாஸ்மா கொடை அளிக்க முடியும். அதேபோல் வாழ்க்கையில் இரண்டுமுறை மட்டும்தான் இந்த பிளாஸ்மா கொடை அளிக்க முடியும். குறிப்பாக Immunoglobulin-G (IgG) எனும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மட்டும்தான் இக்கொடையில் ஈடுபட முடியும்” என்று மருத்துவர் கான் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் “பிளாஸ்மா கொடை குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. எனவே சினிமா நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் வைத்து பொதுமக்களுக்கு பிளாஸ்மா கொடை குறித்தான முக்கியத்துவத்தை விளம்பரப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்.

“கொரோனா நோயில் இருந்து மீண்டவர்களின் விபரம் வெளிப்படையாக கிடைக்காததால் பிளாஸ்மா கொடை தடைபடுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் மக்கள் கொடை கொடுக்க முன்வராதது கவலையளிக்கிறது“ என்று புழலில் வசிக்கும் சமுக செயல்பாட்டாளர் சமீர் கூறுகிறார். 

சாதாரணமாக கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ஒருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை தேவைப்படும்போது, அதற்கான கொடையாளி கிடைப்பதென்பது சாதாரண விடயம் கிடையாது. பல நேரங்களில் பிளாஸ்மா கொடையாளிகள் கிடைப்பதில்லை. இந்த நிலையில் தப்லிக் ஜமாத்தினர் இந்த கொடைக்கு முன்வந்திருப்பது மிக அவசியமான ஒன்றாகும்.

பல்வேறுபட்ட சிகைச்சை முறைகளை கையாண்டுவரும் மருத்துவமனைகளில் தீவிர நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை கைகொடுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில் தப்லிக் ஜமாத்தை சார்ந்தவர்களின் முன்னெடுப்பு பாராட்டத்தக்கது. யாரைக் குறிவைத்து இசுலாமியோபோபியா எனும் இசுலாமிய வெறுப்பைப் பரப்பினார்களோ, இன்று அவர்கள் மிக முக்கியப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தப்லிக் ஜமாத்தை குறிவைத்து இசுலாமியர்களை குற்றவாளிகளாக சித்தரித்தவர்கள், மதத்தைக் காட்டிலும் மனிதமே நிரந்தரமானது என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *