varavara rao

உயிருக்கு ஆபத்தான நிலையில் வரவர ராவுக்கு சிகிச்சை மறுப்பதா? – செயல்பாட்டாளர்கள்

மும்பை தலோஜா (Taloja Jail) சிறையில் இருக்கும் கவிஞர் வரவர ராவின் உடல்நிலை மிக மோசமடைந்து வருகிறது. அவருக்கு உரிய மருத்துவ சேவை புரியவேண்டும் என்று  வரலாற்று ஆய்வாளர் ரொமிலா தாப்பர் மகாராஷ்டிர அரசுக்கும், தேசிய புலனாய்வு அமைப்புக்கும் கோரிக்கை வைத்துள்ளார். அவருடன் சேர்ந்து பிரதாப் பட்நாயக், தேவகி ஜெயின், மஜ்ஜா தருவாலா மற்றும் சத்தீஸ் தேஸ்பாண்டே(Prabhat Patnaik, Devaki Jain, Maja Daruwala, Satish Deshpande) போன்ற அறிவுஜீவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பீமா கொரேகான் வழக்கில் ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட  கவிஞர் வரவர ராவ் இரண்டு ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார். 81 வயதான அவரின்  உடல்நிலை மிக மோசமடைந்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். முழு சிகிச்சை நிறைவடைவதற்கு முன்பே அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு முறையான மருத்துவ சிகிச்கை வழங்கப்படுவதில்லை என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். 

அரசின் சிறைக்காவலில் உள்ள ஒருவருக்கு, அவரது உயிருக்கு ஆபத்து இருகிறது என்று தெரிந்தும், போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க மறுப்பது, என்கவுன்டருக்கு சமமானதாகும் என்றும், இது சட்டத்தை மீறிய தண்டனை என்றும் ரொமிலா தாப்பர் உள்ளிட்ட அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அரசு உடனடியாக அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவரது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வரவர ராவ் மிகச் சிறந்த தெலுங்கு இலக்கிய விமர்சகர். 40 ஆண்டுகள் நவீன இலக்கியங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருபவர். சுருஜனா (Srujana) எனும் தெலுங்கு இலக்கிய வட்டத்தை 1966-ம் ஆண்டு துவங்கியவர். நவின இலக்கிய உலகில் மிக பரபரப்பாக செயல்பட்டவர். அவருடைய கவிதைகள் 15 தொகுதிகளாக வெளிவந்துள்ளது. இடதுசாரி சிந்தனையாளர். அவருடைய முற்போக்கு  கவிதைகளுக்காக பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார்.

1973-ம் ஆண்டு அன்றைய ஆந்திர அரசால் MISA சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பின் ஒரு சில நாட்களிலேயே ஆந்திர உயர்நீதிமன்ற தலையீட்டால் விடுதலை செய்யப்பட்டார். அவருடைய கவிதைகள் வன்முறையைத் தூண்டியதாக குற்றம்சாட்டி 1975-ம் ஆண்டு செகந்திராபாத் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். பின் அந்த வழக்கில் இருந்து 1989-ம் ஆண்டு  நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். 

1975 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் மீண்டும் ஆந்திர அரசால் கைது செய்யப்பட்டார். அவர் மீது அரசு வன்முறைத் தாக்குதல்களும் நடத்தியுள்ளது. அவர் தொடர்ந்து விளிம்புநிலை மனிதர்களுக்காக குரல்கொடுத்தவர். கவிதை எழுதுவதைத் தாண்டி களத்தில் மக்களுக்காக போராடியவர் என்று முற்போக்கு எழுத்தாளர்கள் கூறுகின்றனர். 

கடந்த ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு பீமா கொரேகான் வழக்கில் தொடர்புடையவர் என்று குற்றம்சாட்டி புனே காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின் அவர்மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அவருடன் சேர்த்து சுதா பரத்வாஜ், ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா (Sudha Bharadwaj, Anand Teltumbde, Gautam Navlakha) உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

2020 ஜனவரி 24-ம் தேதி பீமா கொரேகான் வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து புனே சிறையில் இருந்து தலோஜா (taloja) சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். கடந்த மே மாதம் அவருக்கு உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டதால் தலோஜா சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின் மே மாதம் 28-ம் தேதி அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானதால் மும்பை JJ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத போதும், மருத்துவர்களின் முழுமையான ஒப்புதலும் இன்றி மூன்றே நாட்களில் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதனால் இவரது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ளது என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜீலை 11-ம் தேதி வரவர ராவ் மயக்கமடைந்து சுயநினைவவை இழந்ததால் அவருடன் இருந்த சக சிறைவாசி வரவர ராவின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்தார். கடந்த 22 மாத சிறை வாழ்க்கை நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளதாக PUCL தலைவர் ரவிகிரண் ஜெயின் தெரிவிக்கிறார். 

அரசு சிறை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாத போதும் அவரை அங்கேயே வைத்து சிகிச்சை அளிப்பது உயிருக்கே ஆபத்தாக முடியும். இது திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதுபோல்தான் பேராசிரியர் சாய்பாபா மற்றும் அகில்கோகி இருவரும் சிறையில் வதைக்கப்பட்டனர் என்று ரவிகிரண் ஜெயின் தெரிவிக்கிறார். 

இதுபோன்ற பெருந்தொற்று காலக்கட்டங்களில் சிறைவாசிகளுக்கு உரிய மருத்துவ பாதுகாப்பு தரவேண்டும். வரவர ராவை உடனடியாக சிறந்த மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் அதேபோல் அவருடைய குடும்பத்தினர் அவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று PUCL தலைவர் ரவிகிரண் ஜெயின் மற்றும் ரொமிலா தாப்பர் போன்ற அறிவுஜீகள் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் அவரது உடல் நிலையை கணக்கில் கொண்டு அவருக்கு உடனடியாக பிணை வழங்கிட வலியுறுத்தி உலகின் முக்கிய அறிஞர்களான நோம் சாம்ஸ்கி, ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் உள்ளிட்ட 100 பேர் அறிக்கை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *