அமெரிக்க நிறுவனமான குவால்காம், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் ரூ.730 கோடி முதலீடு செய்து, அதன் 0.15 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரோனா தொற்று தொடங்கிய பின் ஜியோ நிறுவனத்தில் நடக்கும் 13வது முதலீடாகும். கடந்த 4 மாதங்களில் மட்டும் தனது 25.24 சதவீத பங்குகளின் மூலம் 1,18,000 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய முதலீடுகளை குவித்துள்ளது ஜியோ நிறுவனம். தனது நிறுவனத்தின் நான்கில் ஒரு பங்கினை வெளிநாட்டு நிறுவனங்களின் கையில் கொடுத்திருக்கிறது.
அமெரிக்க டிஜிட்டல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களான Facebook, Intel நிறுவனங்களை தொடர்ந்து Qualcomm நிறுவனமும் ஜியோவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. Facebook நிறுவனம் ஜியோ-வின் 10% பங்குகளை வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் என்பது இந்தியாவின் மளிகை-காய்கறி சந்தையினை குறிவைத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே Madras Radicals இணையத்தில் ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதனைப் கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.
இந்தியாவின் சிறு வணிகத்தை குறிவைக்கும் ஜியோ-ஃபேஸ்புக் ஒப்பந்தம்
“Qualcomm நிறுவனம் வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் புதுமைகளை கொண்டுவரும் முன்னணி நிறுவனம்” என்றும் “5G தொழில்நுட்ப சேவையின் உருவாக்கத்தின், விரிவாக்கத்தின் பின்னுள்ள உந்துசக்தி” என்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
’திடமான, பாதுகாப்பான வயர்லெஸ் மற்றும் டிஜிட்டல் நெட்வொர்க் உருவாக்குவதன் மூலம் அனைத்தையும் இணைக்கும் நோக்கத்தையும்; அதன் பலன்களை இந்தியாவில் உள்ள அனைவருக்கும் விரிவாக்கும் நோக்கத்தையும் இரு நிறுவனங்களும் கொண்டுள்ளதாக’ அம்பானி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப ஆதிக்க சக்தியாக மாற முயற்சிக்கும் ஜியோ
இந்த முதலீடுகள் அனைத்தும்; ஜியோ ஒரு தொலைத்தொடர்புத் துறை நிறுவனம் என்பதை மாற்றி, இந்தியாவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பெரும் ஒற்றை ஆதிக்க சக்தியாக உருவெடுக்க முயலும் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதி என்றே கொள்ளலாம். Facebook நிறுவனத்தினுடனான ஒப்பந்தத்தின் மூலம் ‘ஜியோமார்ட்’ என்ற பெயரில் மளிகை, அத்தியாவசிய பொருட்களின் ஆன்லைன் வியாபாரத்தை ஜியோ தொடங்கியுள்ளது. மேலும் ‘சாவன்’ (Saavn) எனும் இசை மற்றும் பாடல்கள் ஒலிபரப்பும் செயலி நிறுவனத்தையும் ஏற்கனவே வாங்கியுள்ளது. அதுபோலவே ‘எம்பைப்’ (embibe) எனும் கல்வி தொழில்நுட்ப நிறுவனத்தையும் வாங்கியுள்ளது.
இவ்வாறு தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, கல்வி, அத்தியாவசிய பொருட்களின் ஆன்லைன் வியாபாரம் என அனைத்தையும் ஜியோ என்னும் ஒற்றை குடையின் கீழ் சேர்த்து ஒரு ‘SuperApp’ ஆக, தொழிநுட்ப ஆதிக்க சக்தியாக ஜியோ-வை மாற்ற அதன் தாய் நிறுவனமான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடுகளை குவித்து வருகிறது.
இது இந்த துறைகளை அம்பானியின் ரிலையன்ஸ் எனும் நிறுவனம் கைப்பற்ற முயலும் முயற்சியாக மட்டுமே பார்க்க முடியாது. ரிலையன்ஸ் ஜியோ-வின் வழியாக இந்தியாவின் அத்தியாவசியத் துறைகள் அனைத்தும் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் செல்கிறது என்பதுதான் இங்கு முக்கியமான விடயம். இந்த அந்நிய முதலீடுகள் நேரடியாக அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ் கூட வராமல், அம்பானி எனும் கார்ப்பரேட் முதலாளியின் வழியாக நடக்கிறது என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.
அந்நிய முதலீடு விவரங்கள்
கடந்த சில மாதங்களில் மட்டும் ஜியோவில் முதலீடு செய்துள்ள சில நிறுவனங்கள் விவரம் கீழ்வருமாறு
நிறுவனம் பெயர் | நாடு | முதலீடு தொகை |
Facebook/Whatsapp | அமெரிக்கா | ரூ.43,574 கோடி |
Silverlake | அமெரிக்கா | ரூ.10,148 கோடி |
Vista Equity Partners | அமெரிக்கா | ரூ.11,367 கோடி |
General Atlantic | அமெரிக்கா | ரூ.6,598 கோடி |
KKR | அமெரிக்கா | ரூ.11,367 கோடி |
Mubadala | ஐக்கிய அரபு அமீரகம் | ரூ.9,093 கோடி |
Abu Dhabi Investment Authority | ஐக்கிய அரபு அமீரகம் | ரூ.5,683 கோடி |
TPG | அமெரிக்கா | ரூ.4,547 கோடி |
L Catterton | அமெரிக்கா | ரூ.1,895 கோடி |
Qualcomm | அமெரிக்கா | ரூ.737 கோடி |
இது தவிர்த்து ஜியோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் சவுதி அரபியா வின் ஆரம்கோ நிறுவனம் ரூ.1,12,000 கோடி முதலீடு செய்யவுள்ளதும் குறிப்பிடதக்கது.
உலகின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு காரணமாக உலக பொருளாதாரமே சரிந்து, சிறிய, பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தத்தளிக்கும் இந்நிலையில், ஜியோ இத்தனை லட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடுகளைப் பெற்றுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் தனது கடன்களை திருப்பி எடுக்கும் ஒரு முயற்சியாக இந்த முதலீடுகள் சொல்லப்படுகிறது.
தகவல் தொடர்புத் துறையில் அந்நிய முதலீடு ஒரு பாதுகாப்பு விடயமே
ஒரு தகவல் தொடர்பு நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட ஒன்றாகும். அதிலும் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 38.75 கோடி தொலைபேசி சந்தாதாரர்களைக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஜியோ-வின் Jio Payments Bank நிறுவனத்துடன் டிஜிட்டல் Payment Banking-ற்கு 30:70 என்ற விகிதத்தில் ஒரு ஒப்பந்தத்தினை போட்டிருக்கிறது. இரண்டும் இணைந்து YONO(You Only Need One) என்ற பரிவர்த்தனைக்கான செயலியையும் இயக்கி வருகின்றன.
இதன் மூலமாக ரிலையன்ஸ் நிறுவனம் SBI-ன் தரவுதளத்தினை அணுகும்(Database access) வாய்ப்பினையும் பெற்றிருக்க முடியும். தற்போது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் Facebook மற்றும் Whatspp நிறுவனத்துடன் போட்டிருக்கிற ஒப்பந்தத்தினால், அந்த அந்நிய நிறுவனமும் இந்த தரவுத்தளங்களை Access செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. அவர்களின் ஒப்பந்தங்களிலும் இந்த விவரங்கள் தெளிவாக இல்லை.
FDI விதிகள் பின்பற்றப்பட்டதா?
2017-ம் ஆண்டு இந்திய அரசின் Foreign Investment Facilitation Portal, அந்நிய முதலீடுகளுக்கான பல்வேறு விதிமுறைகளை வரையறுத்து அளித்தது. தகவல்தொடர்புத் துறை அதில் முக்கியமானதாகும். தகவல் தொடர்புத் துறையில் அந்நிய முதலீடுகள் நடக்கும் போது, தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துடன் மட்டும் இல்லாமல் உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றிலும் Security Clearance பெற்று அனுமதி பெற வேண்டும் என்பது முக்கியமான விதி.
மேற்குறிப்பிட்ட 13 அந்நிய நிறுவனங்களிடமிருந்து 1,18,000 கோடி முதலீட்டினைப் பெறுவதற்கு இந்த அமைச்சகங்களிடம் இருந்து ரிலையன்ஸ் நிறுவனத்தால் முறையான அனுமதி பெறப்பட்டதா என்பதற்கான விவரங்கள் வெளிப்படையாக இல்லாமல் இருக்கிறது.
கொரோனா ஊரடங்கில் இந்தியாவின் மொத்த சிறு, குறு, நடுத்தர வணிகர்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டும் தகவல்தொடர்பு நிறுவனத்தில் அந்நிய முதலீடுகளை குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த டிஜிட்டல் யுகத்தில், நாட்டின் பாதுகாப்பும், இந்தியக் குடிமக்களின் தனிநபர் சுயவிவரங்களின் பாதுகாப்பும் இந்த முதலீடுகளினால் அந்நிய நிறுவனங்களிடம் அடகு வைக்கப்படுகிறதா என்ற கேள்வி எழவே செய்கிறது.