உசிலம்பட்டி பாறை ஓவியங்கள்

உசிலம்பட்டியில் கிடைக்கும் பழங்கால வேட்டைச் சமூகத்தின் குறியீடுகள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் நடுகற்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கண்டுபிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வாளர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

உசிலம்பட்டி அருகே சில நாட்களுக்கு முன், நள்ளிதேவன் மொட்டைமலையில் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்ட மிகப்பெரிய நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலிக்குத்தி நடுகல் என்று இதனை அழைக்கின்றனர். 

முதன்முறையாக 8 அடி உயர நடுகல் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் இது மிகப்பெரியதாகும்.

மானூத்து மற்றும் பாறைப்பட்டி குகைகளில் பழங்கால கற்குவியல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. 4,000 ஆண்டு பழமையான கற்காலத்தைச் சேர்ந்த கற்கள், வட்டக்கல் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. 

படம்: நன்றி தினகரன்

தொடர்ச்சியாக பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு அரிய பொருட்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், இரும்பு ஆயுதங்கள், இரும்புத் துண்டுகள், சுண்ணாம்புக் குவியல்கள், முதுமக்கள் தாழிகள் கூட இந்த பகுதியில் கிடைத்து வருகின்றன.

அதேபோல பேரையூர் அருகில் கி.மு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரும்பு உருக்கு ஆலை இருந்ததற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனருகே மூன்று சதி கற்களும் கண்டுபிடுக்கப்பட்டன.

தற்போது உசிலம்பட்டி குறிஞ்சி நகர் பகுதியில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (குறிஞ்சி நகர் பாறை ஓவியங்களின் படம் கட்டுரையின் முதன்மை படமாக மேலே இணைக்கப்பட்டுள்ளது)

வேட்டை சமூகத்தின் குறியீடான ஓவியங்கள்

இது குறித்து மெட்ராஸ் ரேடிகல்ஸ்(Madras Radicals)-லிருந்து பாறை ஓவியங்களின் நிபுணர் காந்திராஜன் அவர்களிடம் பேசிய போது, 

காந்தி ராஜன்

இந்த பகுதிகளில் 3 பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த மூன்று ஓவியங்களும் வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவை எனவும்,  இந்த தொன்மையான பாறை ஓவியங்களின் காலகட்டம் கிமு 4000 முதல் 3000 ஆண்டுகளில் இருக்கலாம் எனவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் கிடைக்கும் கற்கால சிற்பங்கள் பெரும்பாலும் இக்காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கும் என்றும் காந்திராஜன் கூறினார். 

”இந்த ஓவியங்கள் வேட்டை சமூகத்தின் குறியீடுகளுடன் தான் இருக்கின்றன. 

வேட்டைச் சமூக மக்கள் வைகை, குண்டாறு போன்ற நதிக்கரை ஓரங்களில் பத்தாயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்ததற்கான அடையாளங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய தாழி பானைகள், கல் குடுவைகள், இரும்பை உருக்கி பயன்படுத்தும் சிறு பட்டறைகள் மலையடிவாரங்களில் பல ஊர்களில் கிடைப்பதாக தெரிவித்தார். கீழடி போன்ற அகழ்வாய்வு இடங்களில் பழைய இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளது நாம் அறிந்ததே. ஆனால் அந்த இரும்பு பொருட்கள் எங்கே செய்யப்பட்டன என்கிற கேள்வி எழுகிறது.  இதுபோன்ற பட்டறைகளில் செய்யப்பட்டிருக்கலாம்”

என தெரிவித்தார். 

“ஏனென்றால்  இரும்பு போன்ற கனிமங்கள் கிடைக்கும் இடங்களுக்கு அருகாமையில் தான் இந்த பொருட்கள் செய்யப்படுகிற பட்டறைகள் இயல்பாக  அமையும். இரும்பு காலம் என்பது 3000 ஆண்டு காலங்களில் இருந்து துவங்குகிறது.” என்றார், மேலும் இச்சூழலில் இப்பகுதியில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர் வேட்டைச் சமூகமாகவும், ஒரு பகுதியினர் கால்நடை மேய்ப்பு சமூகமாகவும், இன்னொரு பகுதியினர் உழவு வேலைகளில் ஈடுபடத் தொடங்கியதாகவும், குறிப்பாக இவை பேரரசுகள் தோன்றுவதற்கு முன்னுள்ள காலங்களாக இருக்கும் என தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் சிறிய அளவிலான அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

இந்த ஓவியங்களை வரைய எதைப் பயன்படுத்தினர், என்ன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன, வண்ணங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது போன்ற தரவுகள் கண்டுபிடிக்கப்படுவது இந்த சமூகம் அடைந்த வளர்ச்சி நிலையைக் காட்சிப்படுத்த உதவும் என்றும் அவர் கூறினார்

மேலும் கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களில் பெரிய அளவிற்கான அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், பெரிய அளவிற்கான அகழ்வாய்வைப் போல தமிழகம் முழுவதும் சிறிய அளவிற்கான அகழ்வாய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *