ஷாஹி இத்கா மசூதி

மதுராவில் இருக்கும் மசூதியை அகற்ற ’குழந்தை கிருஷ்ணன்’ சார்பில் தொடரப்பட்டுள்ள வழக்கு

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் இருக்கும் கிருஷ்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ‘ஷாகி இத்ஹா’ மசூதியை (Shahi Idgah Mosque) அகற்றக்கோரி  நீதிமன்றத்தில் ’குழந்தை கடவுள்’ கிருஷ்ணன் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் மற்றும் ஷாகி இத்ஹா அறங்காவல் குழுவையும் எதிர் மனுதாரராக இவ்வழக்கு சேர்த்துள்ளது.

லக்னோவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி மற்றும் கிருஷ்ண பக்தர்கள் என்ற பெயரில் 6 பேர் பதிவு செய்துள்ள இவ்வழக்கில் கோயிலைச் சுற்றியுள்ள 13.37 ஏக்கர் நிலத்தை மீட்டுத்தரக் கோரியுள்ளனர். முகலாய மன்னரான ஒளரங்கசீப் ஆட்சியில் மதுராவில் கிருஷ்ணர் கோயில் இடிக்கப்பட்டதாகவும், அந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

குழந்தை கிருஷ்ணன் 18 வயதுக்கு உட்பட்டவர் என்று அவர் சார்பாக வழக்கு

“இந்த கடவுளானவர் 18 வயது பூர்த்தி ஆகாதவர் என்றும், அவர் நீதித்துறையின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் எனவும், அவர் அறங்காவலர் மூலமாகவும், அவர் இல்லாத நிலையில் அடுத்த நண்பர் மூலமாகவும் வழக்குத் தொடரலாம். இந்த கடவுளானவர் சொத்தை சொந்தமாக பெறலாம் மற்றும் வைத்திருக்கலாம். மேலும் நீதிமன்றத்தில் பொருத்தமான தீர்வைப் பெறுவதன் மூலம் சொத்தைப் பாதுகாப்பதற்கும், மீட்கவும் எல்லா உரிமையும் உள்ளது” 

என அவ்வழக்கில் கோரியுள்ளனர்..

ஷாகி இத்ஹா மசூதி அமைந்துள்ள பகுதிக்கு கீழேதான் கிருஷ்ணர் பிறந்த இடம் இருப்பதாகவும், மசூதியின் அறங்காவல் குழு கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து மசூதியை கட்டியெழுப்பி உள்ளதாகவும், மேலும் கிருஷ்ணர் கோயிலை நிர்வகிக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மஸ்தன் சேவா சன்ஸ்தன் அமைப்பு கோவில் நிலத்தை ஆக்கிரமிக்கும் வகையில் ஷாகி இத்ஹா மசூதி அறங்காவல் அமைப்புடன் சட்டவிரோத ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாகவும் வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

மசூதியின் அமைப்பில் மாற்றம் கூடாது என ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த ஜூலை 20, 1973-ம் ஆண்டு இதே போன்றதொரு வழக்கில் மதுரா நீதிமன்றம், மசூதி கட்டப்பட்டுள்ள அமைப்பில் இதற்கு மேல் எந்த வித மாற்றமும் ஏற்படுத்த கூடாது என்று தீர்ப்பை வழங்கியிருந்தது. தற்போது அந்த தீர்ப்பினை ரத்து செய்ய வேண்டும் என இந்த வழக்கில் கோரியுள்ளனர்.

கிருஷ்ணருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து மசூதி கட்டியுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனவும் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஹரி ஷங்கர் ஜெயின் மற்றும் விஷ்ணு ஷங்கர் ஜெயின் ஆகிய வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அனைத்து மத வழிபாட்டு தளங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் 1991 சட்டம்

1991-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிபாட்டுத் தளங்கள் சிறப்பு சட்டத்தின்படி (places of worship special provision), இந்திய சுதந்திரத்தின் காலத்திற்கு முன்பு வரை இருந்துவரும் அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் இந்த சட்டம் பாதுகாப்பு வழங்குகிறது(அயோத்தி வழக்கு தவிர). அதாவது ஒரு கோயில் மசூதி ஆகவும் அல்லது மசூதியை கோவிலாகவும் இடித்துக் கட்டுவதற்கு இந்த சட்டம் தடை விதிக்கிறது. 

இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து கோயில்களை இடித்து மசூதியாக மாற்றியதாக  அடிப்படை ஆதாரங்கள் இல்லாமலேயே தொடர்ச்சியாகக் கூறி, இந்து மதவாத அமைப்புகள் மசூதிகள் அமைந்திருக்கும் நிலத்தை தொடர்ந்து கையகப்படுத்த முயற்சித்து வரும் நிலையில், அதற்கு தடையாக இருக்கும் இந்த 1991-ம் ஆண்டின் சட்டத்தினை நீக்கக் கோரி ஏற்கனவே இந்துத்துவ அமைப்பு ஒன்று வக்கீல் விஷ்ணு சங்கர் ஜெயின் மூலமாக வழக்கு தொடர்ந்துள்ளது. 

தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படும் மசூதிகள் மற்றும் தேவாலயங்கள்

அயோத்தியில் பாபர் மசூதி வழக்கில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததற்குப் பின்னர், தொடர்ச்சியாக இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நாட்டிலுள்ள பல்வேறு மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் நிலங்கள் இந்து கோயில்களுக்கு சொந்தமானவை என்று பேசி வருகிறார்கள். இந்நிலையில் மதுராவில் இருக்கும் மசூதி கிருஷ்ணர் கோயிலுக்கு சொந்தமானது என்ற சொல்லி கிருஷ்ணரின் சார்பாகவே இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். 

ஏற்கனவே அயோத்தியில் ராமஜென்ம பூமி முழக்கத்தினை எழுப்பி பாபர் மசூதி வலதுசாரி தீவிரவாதிகளால் இடிக்கப்பட்டதன் காரணமாக நாட்டின் மத ஒற்றுமை கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்தது. தற்போது கிருஷ்ண ஜென்ம பூமி என்ற பெயரில் மதுரா மசூதியை அகற்றக் கோரியிருக்கும் இந்த கோரிக்கையானது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *