நிர்மலா சீத்தாரமன்

மாநிலங்களுக்கு சேர வேண்டிய 47,242 கோடி GST பணத்தை சட்டத்தை மீறி மாற்றிய ஒன்றிய அரசு – சி.ஏ.ஜி அறிக்கை

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய GST வரி இழப்பீடு பணத்தினை ஒன்றிய அரசு சட்ட விதிகளை மீறி வேறு விடயங்களுக்கு பயன்படுத்தி இருப்பதாக சி.ஏ.ஜி (Comptroller and Auditor General – CAG) அறிக்கை தெரிவித்திருக்கிறது. 47,272 கோடி ரூபாய் பணத்தினை மாநிலங்களுக்கு அளிக்காமல் ஒன்றிய அரசு விதி மீறியுள்ளதாக குற்றச்சாட்டு வெளிவந்திருக்கிறது.

2017-18 மற்றும் 2018-19 நிதி ஆண்டுகளில் இந்த விதிமீறலை ஒன்றிய அரசு செய்திருப்பதாக சி.ஏ.ஜி அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விதிமீறலின் காரணமாக நாட்டின் வருவாய் கணக்கு அதிகமாகவும், நிதிப் பற்றாக்குறை மதிப்பு குறைவாகவும் காட்டுவதற்கு வழிவகுத்திருப்பதாக சி.ஏ.ஜி ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டத்திற்கு இது எதிரானது

2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ’ஜி.எஸ்.டி இழப்பீடு சட்டத்திற்கு’ முற்றிலும் முரணான ஒரு செயலினை ஒன்றிய அரசு செய்திருக்கிறது. மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையினை மீறியிருக்கிறது.

2018-19 நிதி ஆண்டிற்கான கணக்குகளை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் செப்டம்பர் 23 அன்று சி.ஏ.ஜி அறிக்கையாக தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் வாயிலாகத்தான் இத்தகவல்கள் தெரிய வந்திருக்கிறது.

தொடர்ந்து கேள்விக்குள்ளாகும் ஜி.எஸ்.டி விவகாரம்

கடந்த பல மாதங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க, ஜி.எஸ்.டி இழப்பீட்டு பணத்தினை முறையாக அளிக்கக் கோரி ஒன்றிய அரசினை தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன. ஆனால் ஒன்றிய அரசு அதனை அளிக்காமல் இழுத்தடித்து வந்து, ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ”ஜி.எஸ்.டி இழப்பீட்டு பணத்தினை மாநிலங்களுக்கு தர முடியாத நிலை உள்ளது” என்று தெரிவித்துவிட்டது. நிதிச் சிக்கலை சமாளிப்பதற்கு மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடம் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்க எந்த சட்டமும் இல்லை என்று தெரிவித்தார். இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இந்த சூழலில் ஜி.எஸ்.டி இழப்பீடுக்கு அளிக்க வேண்டிய நிதியை வேறு பணிகளுக்கு ஒன்றிய அரசு பயன்படுத்திய விதிமீறல் வெளிவந்திருக்கிறது. மாநிலங்களுக்கு சேர வேண்டிய பணத்தினை ஒன்றிய அரசு வேறு பணிகளுக்கு செலவழித்து விட்டு, மாநிலங்களுக்கு இல்லை என்று சொல்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு முற்றிலும் எதிரான செயலாகும்.

ஜி.எஸ்.டி இழப்பீடு எந்த பணத்தில் கொடுக்கப்படுகிறது?

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை கொண்டு வரப்படும்போதே, அது மாநிலங்களின் வருவாயினை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ளும் செயல் என்று சொல்லி கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பு கொண்டுவரப்பட்டதன் காரணமாக பல மாநிலங்கள் தன் வருவாயை இழந்துள்ளன. மாநிலங்களுக்கு ஏற்பட்ட இந்த வருவாய் இழப்பினை ஈடுசெய்ய 2022-ம் ஆண்டு வரை மாநிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை ஒன்றிய அரசு அளிக்கும் என்று ஜி.எஸ்.டி இழப்பீட்டுச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மாநிலங்களுக்கான இந்த இழப்பீட்டினை கொடுப்பதற்காகத் தான் ஒன்றிய அரசு விலையுயர்ந்த பொருட்களின் மீது தனியாக செஸ்(CESS) என்ற ஒன்றை வசூலிக்கிறது. 

வசூலிக்கப்பட்ட செஸ்(CESS) தொகையானது மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படாமல், சட்டத்தை மீறி ஒன்றிய அரசே வேறு பணிகளுக்கு செலவழித்துள்ளதுதான் இப்போது குற்றச்சாட்டாக மாறியிருக்கிறது. 

2018-19 நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு அளிக்க வேண்டிய தொகை செஸ் (CESS) மூலமாக 95,081 கோடி வசூலானதாகவும், அதில் 54,275 கோடி மட்டுமே மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டதாகவும் சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது. 

ஜி.எஸ்.டி இழப்பீடு பணம் முறையாக மாநிலங்களுக்கு அனுப்பப்படாததை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டதாகவும், வரும் ஆண்டில் அதனை அனுப்பி விடுவதாகவும் கூறியுள்ளதாக சி.ஏ.ஜி ஆடிட்டர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் கணக்கு மேலாண்மை நடைமுறைகளையும் ஒன்றிய அரசு மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உதவியல்ல உரிமை: கணக்கு மேலாண்மை நடைமுறையிலும் விதிமீறல்

அதாவது ”Other fiscal services” என்ற நடைமுறையின் படி தான் ஜி.எஸ்.டி இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் ஒன்றிய அதனை ’Transfer of Grants in aid to States’ என்ற நடைமுறையின்படி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை என்பது மாநிலங்களுக்கு உரிமைப்பட்ட பணமாகும். அது ஒன்றிய அரசு அளிக்கும் உதவிப் பணம் அல்ல. ஆனால் உதவிப் பணம் என்ற நடைமுறைப் பிரிவின் கீழ்தான் கணக்கை ஒன்றிய அரசு நிர்வகித்து வருவதாக சி.ஏ.ஜி தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஜி.எஸ்.டி பணம் தரும் நிலையில் ஒன்றிய அரசு இல்லை, கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்று நிர்மலா சீத்தாராமன் தெரிவித்ததற்கே பல மாநில அரசுகள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றன. இப்போது ஜி.எஸ்.டி இழப்பீடு அளிப்பதற்காக வசூலிக்கப்பட்ட பணத்தையும் ஒன்றிய அரசு தராமல் தடுத்திருக்கும் செய்தி மாநில அரசுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 

இதையும் படிக்க: ஜி.எஸ்.டி இழப்பீடு – மாநிலங்களின் தலையில் கடனை திணிக்கும் ஒன்றிய அரசு

ஜி.எஸ்.டி பணத்தில் இழப்பீடு தர முடியாது என்று சொல்வதற்கு கொரோனா நெருக்கடியை பாஜக அரசு பயன்படுத்திக் கொள்கிறதோ என்ற சந்தேகமும் எழ ஆரம்பித்துள்ளது. ஜி.எஸ்.டி என்பதே கூட்டாட்சிக்கு முரணானது என்ற கடுமையான விமர்சனம் இருக்கும்போது, அதற்குள்ளாக இழப்பீடும் கொடுக்காமல் சட்டவிரோதமாக ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளும் செயல்கள் அரசியல் சாசனத்தினை கேள்விக்குள்ளாக்கும் செயலாக அமைந்து விடுகிறது.

மாநிலங்களின் உரிமையைப் பறிப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரான செயலாகும். இதற்காகத்தான் மேற்கு வங்கம், கேரளா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்கள் நிர்மலா சீத்தாரமானின் ஜி.எஸ்.டி குறித்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. ஜி.எஸ்.டி இழப்பீட்டுக்கு பதிலாக மாநிலங்கள் கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என சொன்ன போது, ஒன்றிய அரசுதான் கடனைப் பெற்று மாநிலங்களுக்கு பிரித்துத் தர வேண்டும் என்று இந்த மாநிலங்கள் கூறின.  ஒன்றிய அரசு மாநிலங்களுடனான உறவை சீராக பாதுகாக்க வேண்டுமெனில், மாநிலங்களின் உரிமைகளுக்குள் தலையிடுவதனை நிறுத்திட வேண்டும் என்பதே ஜனநாயகவாதிகளின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *