கொரோனா காலத்தில் ஆன்லைன் கல்வியின் தேவைக்காக ‘டிஜிட்டல்’ திறன்களை மேம்படுத்த தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் இருப்பதால், தீவிர சோர்வு ஏற்பட்டு ஆற்றல்கள் வற்றிப் போவதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் போன்ற கல்வி நிலையங்கள் எல்லாம் லாக் டவுன் நடவடிக்கை காரணமாக மூடப்பட்டன.
பின்னர் உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனால் கொரோனா பரவல் வீரியம் குறையாத நிலையில் தொடர்ந்து பெரும்பான்மையான கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வந்தன.
1700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வு
ஃபேக்கல்டி அகாடமிக் ரிவியூ ஃபார் எக்சலன்ஸ் (Faculty Academic Review for Excellence ) எனும் பெயரில் 2020-ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் நாடு முழுவதிலுமிருந்து 1,700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் முடிவில் சுமார் 45 சதவீதத்திற்கும் மேலான இந்திய உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் காரணத்தினால் தீவிர சோர்வு ஏற்படுவதாகவும், ஆற்றல்கள் வற்றிப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பெங்களூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமான IGAUGE இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இது லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் செயல்படும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை மதிப்பிட்டு உலகளாவிய பல்கலைக்கழக தரவரிசைகளுடன் வெளியிட்டு வருகிறது.
புதிய முறை கற்பித்தலில் உள்ள சவால்கள்
முற்றிலும் அறிமுகமில்லாத புதிய முறையில் கற்பிக்கும் போது ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பலவற்றை இந்த ஆய்வில் தெரிவித்துள்ளார்கள். இதில் குறிப்பாக கற்பவர்களை ஈடுபடுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்படுவதாகவும், வகுப்பு நடைபெறும் பொழுது ஆர்வமாக பதிலளிக்கச் செய்து ஒத்துழைக்க வைப்பது என்பது மிகவும் சவாலான வேலை எனவும் ஆசிரியர்கள் தெரிவித்து இருப்பதாக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் ஆசிரியர்கள் இந்த முறையில் கற்பவர்களை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருப்பது அவசியமாவதோடு, அனைவரையும் இணைய உலகில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளதகாவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஆசிரியர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்
ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்களில் 52 சதவிகிதத்தினர் தங்களுக்கு ஏற்படும் பதட்டத்தின் அளவு மிதமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் 9 சதவிகிததினர் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் என இரண்டின் அளவுகளும் கூர்மையான அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
17.4 சதவீத ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் காரணமாக மாணவர்களுடனான நல்லுறவு மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி சக ஊழியர்களுடனான நல்லுறவு மோசமடைந்துள்ளதாக 8 சதவீதத்தினரும், நிர்வாகத்துடனான நல்லுறவு மோசமடைந்துள்ளதாக 9.9 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளார்கள்.
“இறுதியாக உடல் மற்றும் உளவியல் ஆரோக்கியம், வேலை பாதுகாப்பின்மை, நிதிச்சுமை போன்ற பல கவலைகளுக்கு இடையில் ஒரு நிச்சயமற்ற தன்மைக்கான உணர்ச்சியை ஆன்லைன் வகுப்புகளின் வழியாக அதிகரித்து ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது” எனவும், மேலும் “பலருக்கு விரும்பத்தகாததாக ஆன்லைன் கற்பித்தல் முறை இருக்கிறது” எனவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கர்நாடகா மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் அசீம் பிரேம்ஜி பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் ஆன்லைன் கல்வி பெரிதாக பயனைத் தரவில்லை என்றும், பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஆன்லைன் கல்வி ஆசியர்களுக்கும் சுமையாக இருப்பதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து மாற்று ஏற்படுகளை செய்ய வேண்டுமென ஆசிரியர்கள் நல சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர்.