மார்கழியில் மக்களிசை

மார்கழியில் மக்களிசை – பா.ரஞ்சித் ஒருங்கிணைப்பில் களைகட்டப்போகும் இசைவிழா

மார்கழி என்றாலே கர்நாடக இசைக்கானது என்பதாகவே கடந்த பல ஆண்டுகளில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் எந்த பக்கம் திரும்பினாலும் சபாக்களில் எல்லாம் கர்நாடக இசை ஒலிக்கும் என்ற அளவுக்கு ஒரு தன்மையை உருவாக்கியிருக்கிறார்கள். மிகச்சிறிய எண்ணிக்கையிலான மக்களால் ரசிக்கப்படும் இந்த நிகழ்ச்சிகளை சென்னையின் அடையாளமாகவே காட்டி அரங்குகள் இங்கே கட்டமைக்கப்பட்டு வந்தன. 

ஆனால் சென்னையின் ரியல் இசைக்கும், இவர்கள் இசைக்கும் சங்கீதத்திற்கும் பெரிதாக பாரம்பரியத் தொடர்பு இருந்ததில்லை. சென்னையின் பெரும்பான்மை மக்களுக்கு நெருக்கமானதாகவும் இந்த இசை இருந்ததில்லை. ஒரு குறிப்பிட்ட உயர்சாதியினரே பெரும்பான்மையாகப் பாட, அவர்களைச் சார்ந்தவர்களே பெரும்பான்மையாக ரசிக்க குறுகிய வட்டத்துக்குள்ளான விழாவாகவே இந்த விழாக்கள் இருந்தன. ஊடக வெளிச்சங்களே இந்த விழாக்களை ஊதிக் காட்டின. சென்னையை வளர்த்தெடுத்த அடித்தட்டு உழைக்கும் மக்கள் இந்த விழாக்களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களைப் போலவே காட்சியளித்தார்கள். 

ரியல் மெட்ராசின் இசை

இந்த நடைமுறைக்கு மாற்றாக, மார்கழியில் உண்மையான உழைக்கும் மக்களின் மக்களிசையை ஒலிக்க விடும் விழாவினை நீலம் பண்பாட்டும் மையம் ஒருங்கிணைத்திருக்கிறது. டிசம்பர் 24-ம் தேதி துவங்கி டிசம்பர் 31-ம் தேதி வரை 8 நாட்கள் இந்த மக்களிசை விழா நடைபெற இருக்கிறது. 

சென்னையில் வாணி மகால், மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ், ராஜா அண்ணாமலை அரங்கு ஆகிய அரங்கங்களில் இந்த விழா நடைபெற இருக்கிறது. நாட்டுப் புறப் பாடல்கள், சென்னை கானா, ஹிப் ஹாப், தெம்மாங்கு, நையாண்டி என்று உழைக்கும் மக்களின் இசை ஒரு வாரம் முழுதும் சென்னையில் களைகட்டப் போகிறது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இப்போதுதான் மார்கழியில் ரியல் மெட்ராசின் இசை ஒலிக்கப் போகிறது. 

நிகழ்ச்சி விவரங்கள்

  • முதல் நாள் டிசம்பர் 24 அன்று வாணி மகாலில் வி.எம்.மகாலிங்கள் மற்றும் ஆதிமேளம் பறை இசைக் குழுவினரின் இசை நிகழ்சியும், சேலம் சுந்தரம் நாட்டுப்புறப் பாடல்களும் இடம்பெறுகிறது. 
  • இரண்டாம் நாள் டிசம்பர் 25 அன்று வாணி மகாலில் தலித் சுப்பையா, ரோஜா ஆதித்யா, கலை நன் மணி எம்.எஸ்.பி.தங்கவேல் பறை இசைக் குழுவின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • மூன்றாம் நாள் டிசம்பர் 26 அன்று வாணி மகாலில் சென்னையில் உள்ள கானா பாடகர்களின் கானா இசை நிகழ்ச்சியும், துடும்பாட்டம் மற்றும் நியூட்டன் குழுவினரின் நிகழ்ச்சியும் நடைபெறும்.
  • நான்காம் நாள் டிசம்பர் 27 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் வேடன், ப்ளாக் பாய்ஸ், எம்சி டெபெஸ், விஜே விஜய், கல்கி, ஷாந்தினி ஆகியோரின் ஹிப் ஹாப் நிகழ்ச்சியும், சியென்னாரின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.
  • ஐந்தாம் நாள் டிசம்பர் 28 அன்று மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கில் ’பேசு ஜேகே’ குழுவினரின் சட்டி பறை ஒப்பாரி நிகழ்ச்சி நடைபெறும். 
  • ஆறாம் நாள் டிசம்பர் 29 அன்று ராஜா அண்ணாமலை அரங்கத்தில் ஆந்தக்குடி இளையராஜாவின் பாடல்களும், சேலம் சக்தியின் பம்பையாட்டமும், த.மு.எ.க.ச நடத்தும் அறிவொளி நிகழ்ச்சியும் நடைபெறும்.
  • ஏழாம் நாள் டிசம்பர் 30 அன்று ராஜா அண்ணாமலை அரங்கத்தில் சித்தன் ஜெயமூர்த்தியின் தெம்மாங்கு பாடல்களும், கார்யபட்டி சேகர் கூட்டிசை குழுவினரின் நையாண்டி நிகழ்ச்சியும் நடைபெறும்.
  • எட்டாம் நாள் டிசம்பர் 31 அன்று Casteless Collective நிகழ்ச்சியும், திருவண்ணாமலை முனுசாமி குழுவின் பாப்பம்பட்டி ஜம்பா பெரிய மேளம் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். இதற்கான இடம் மட்டும் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.  

நிகழ்வு முன்பதிவிற்கு

அரங்கங்களில் இருக்கைகளுக்கு முன்பதிவு தொடங்கியிருக்கிறது. இந்த நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை கீழ்காணும் இணைப்பில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நீலம் பண்பாட்டு மையம் அறிவித்திருக்கிறது. 

https://www.townscript.com/v2/e/margazhi-makkal-isai-2020-201204/booking/tickets

ஒரு நாளுக்கான டிக்கெட் 100 ரூபாயாகும், மொத்த சீசனுக்கான கட்டணம் 700 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது

கலை மக்களுக்கானது, அதை மக்களிடமே கொண்டு செல்வோம் எனும் முழக்கத்துடன் அரங்கேறப் போகும் இந்த மக்களிசை நிகழ்ச்சியால் சென்னை களைகட்டப் போகிறது. 

கல்யாணியும், காம்போதியும், ஆலாபனைகளும் ஒலித்த இடங்களில் தெம்மாங்கும், கானாவும், ஒப்பாரியும் ஒலிக்கப் போகிறது. வேத விற்பன்னர்களுக்கான இடங்களைப் போல மட்டுமே திகழ்ந்த சபாக்களை மக்களிசை கலைஞர்கள் அலங்கரிக்கப் போகிறார்கள். மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று. எல்லாம் மாறட்டும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *