மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு
ஆய்வறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் நாள் பிறந்தார்.
வேங்கடசாமி அவரது அண்ணன் கோவிந்தராஜனிடம் ஆரம்பப் படிப்பை படித்தார். அதன்பின் மகா வித்வான் சண்முகர் மற்றும் பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார்.
நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்கு சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.
படித்தது பள்ளி ஆசிரியர் பயிற்சி என்றாலும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு இணையாக இவர் ஆய்வுப் பேரறிஞராகத் திகழ்ந்தார்
தொல்லியல் துறையில் ஆற்றிய பணி
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார்.
தொல்காப்பியர் காலத்தால் முற்பட்டவர் என்பதை நிரூபித்தார்
தொல்காப்பியர் காலத்தால் பிற்பட்டவர் என்று பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை கூறியபோது அவரின் வாதத்தை முற்றிலும் நிராகரித்தார் மயிலையார். பிராமி எழுத்து வருவதற்கு முன்பே தமிழ் எழுத்து வழக்கில் இருந்ததை சான்றுகளுடன் நிறுவி காலத்தால் முற்பட்டவர் தொல்காப்பியர் என்றார்.
சமண, பெளத்த ஆய்வுகள்
வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். களப்பிரர் காலம் குறித்த இவரது ஆய்வும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கி.பி 5 முதல் 9-ம் ஆண்டு வரையிலான தமிழ்நாட்டின் வரலாற்றை ஆய்வு செய்து வெளிக்கொண்டு வந்ததில் வேங்கடசாமி அவர்களின் பங்கு முக்கியமானது.
மணிமேகலை, சம்பாபதி, தாராதேவி ஆகிய பௌத்த சிறு தெய்வங்களை இன்று காளி, பிடாரி, திரௌபதி அம்மன் ஆகிய பெயர்களில் இந்து தெய்வங்களாக மாற்றிவிட்டார்கள் என்ற வரலாற்று உண்மைகளைத் தன் ஆய்வின் மூலம் பதிவு செய்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
எழுதிய நூல்கள்
இரண்டு முறை சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். பழங்காலத் தமிழ் வாணிகம்,கொங்கு நாட்டு வரலாறு,களப்பிரர் ஆட்சியில் தமிழகம் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை எழுதியுள்ளார்.
1936 – கிறித்தவமும் தமிழும்
1940 – பௌத்தமும் தமிழும்
1943 – காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு)
1944 – இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு)
1948 – இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்
1950 – மத்த விலாசம் – மொழிபெயர்ப்பு, மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 – பௌத்தக் கதைகள்
1954 – சமணமும் தமிழும்
1955 – மகேந்திர வர்மன், மயிலை நேமிநாதர் பதிகம்
1956 – கௌதம புத்தர், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
1957 – வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 – அஞ்சிறைத் தும்பி, மூன்றாம் நந்தி வர்மன்
1959 – மறைந்துபோன தமிழ் நூல்கள், சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 – புத்தர் ஜாதகக் கதைகள்
1961 – மனோன்மணீயம்
1962 – பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 – உணவு நூல்
1966 – துளு நாட்டு வரலாறு, சமயங்கள் வளர்த்த தமிழ்
1967 – நுண்கலைகள்
1970 – சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 – பழங்காலத் தமிழர் வாணிகம், கொங்குநாட்டு வரலாறு
1976 – களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1977 – இசைவாணர் கதைகள்
1981 – சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள்
1983 – தமிழ்நாட்டு வரலாறு: சங்ககாலம் – அரசியல் இயல்கள் 4, 5, 6, 10 – தமிழ்நாட்டரசு வெளியீடு
பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி (சிறு வெளியீடு – ஆண்டு இல்லை)
அவரது மொத்த ஆய்வுகளையும் தொகுத்து ’மயிலை சீனி வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்’ என்ற பெயரில் 20 தொகுதிகளை பேராசிரியர் வீ.அரசு வெளியிட்டுள்ளார்.
சுயமரியாதை இயக்கம்
திராவிடன், குடிஅரசு, செந்தமிழ், செந்தமிழ்ச் செல்வி, தமிழ்ப்பொழில், ஆராய்ச்சி, ஊழியன், இலட்சுமி போன்ற இதழ்களில் ஏராளமான ஆய்வுகட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.
குடியரசு கட்டுரை ஒன்றில் ”வேதம், புராணம், கடவுள், கோயில், விதி, வினை என்று சொல்லிக்கொண்டு நாளுக்கு நாள் முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் வழக்கத்தை விட்டுவிட்டு எந்த விசயத்தையும் பகுத்தறிவு- கொண்டு ஆராயும் படி கேட்டுக்கொள்கிறேன்” என்று எழுதிய பகுத்தறிவாளர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள்.
வேங்கடசாமியை பாராட்டிய பாவேந்தர்
அதனால் தான் மயிலை சீனி.வேங்கடசாமியை,
”தமிழையே வணிக மாக்கி
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்ப தற்கு
தலைமுறை தலைமு றைக்கும்
தமிழ்முத லாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்சீ னிவேங்க டத்தின்
கால்தூ சும்பெறா றென்பேன்!
– என்று போற்றிப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
ஆய்வுப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் 1981-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி தன் ஆய்வை நிறுத்தி, மரணத்தின் மூலம் ஓய்வு எடுத்துக் கொண்டார்.