மஹாரஷ்டிர மாநிலம் மும்பையில் மத்திய அரசின் நிறுவனமான இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIT-Bombay; IIT-B) உள்ள 26 துறைகளில், 11 துறைகளில் 2015 மற்றும் 2019க்கு இடைப்பட்ட கல்வி ஆண்டில் பழங்குடியினர் (ST) பிரிவில் இருந்து ஒரு ஒற்றை பிஎச்டி (Ph.d) வல்லுனரும் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக (RTI) தெரியவந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில், 1.8% மட்டுமே பழங்குடியினர் (ST) பிரிவில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்; தாழ்த்தப்பட்டவர் (SC) பிரிவில் இருந்து 10.7% மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) 21.8% பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் கிட்டத்தட்ட 50% இடங்கள் தாழ்த்தப்பட்ட /பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், 2015 மற்றும் 2019 க்கு இடைபட்ட ஐந்து ஆண்டுகளில் IIT-B யில் Ph.d பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 30% க்கும் குறைவானவர்களே இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
IIT-B யின் 26 துறைகளில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் Ph.d படிப்பினில் சேர மொத்தம் 82,277 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 2,874 பேரில்
பொது பிரிவு(General Catogory) – 71.6% பேரும்
பழங்குடியினர் (ST) – 1.6% பேரும்
தாழ்த்தப்பட்டவர்கள் (SC) – 7.5%
மற்றும்
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்(OBC) – 19.2% பேரும் ஆவர்.
இந்த ஐந்து ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களில், 1.8% மட்டுமே ST பிரிவில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதே போல் SC பிரிவில் 10.7% மற்றும் OBC பிரிவில் இருந்து 21.8% பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் IIT-B யில் உள்ள மாணவர் அமைப்பான அம்பேத்கர் பெரியார் புலே வாசகர் வட்டம் (A.P.P.S.C) சார்ந்த மாணவர் தாக்கல் செய்த தகவல் அறியும் விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு விதிமுறைகளின் படி IIT யின் ஒவ்வொரு துறையிலும்
EWS மாணவர்களுக்கு 10% இடங்களும்;
OBC மாணவர்களுக்கு 27% இடங்களும் ;
SC மாணவர்களுக்கு 15% இடங்களும் ;
ST மாணவர்களுக்கு 7.5% இடங்களும்; மற்றும்
மாற்று திறனாளி மாணவர்களுக்கு 5% இடங்களும் ஒதுக்கப்பட வேண்டும்.
ஆனால், IIT-B யில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் மூலம் 2015 மற்றும் 2019 க்கு இடைப்பட்ட காலத்தில் மொத்தம் உள்ள துறைகளில் ஒரே ஒரு துறையில் மட்டுமே 10 க்கும் மேற்பட்ட ST மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்(மொத்த ஐந்து ஆண்டு காலத்தில்). இதே போல் இதே காலகட்டத்தில் 10க்கும் மேற்பட்ட மாணவர்ககளின் சேர்க்கை, SC பிரிவில் 11 துறைகளிலும், OBC பிரிவில் 14 துறைகளில் மட்டுமே நடைபெற்றுள்ளது.
மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு
இது தொடர்பாக APPSC (அம்பேத்கர், பெரியார், பூலே வாசகர் வட்டம்) வெளியிட்டுள்ள தங்கள் அறிக்கையில், “சேர்க்கைக்கான Cut-off மதிப்பெண்கள் விஷயத்தில் ஒன்றிய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் என்ன என்பதை நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. IIT களில் இடஒதுக்கீடு கொள்கை மற்ற நிறுவனங்களை விட மிகவும் தாமதமாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. கட்-ஆஃப் (Cut-off) மதிப்பெண்கள் விடயத்தில் அடிப்படை தகுதிக்கு மேலதிகமாக செயல்படுத்தபடுகின்றன. இது ST, SC மற்றும் OBC மாணவர்கள் நிறுவனத்தில் சேருவதைத் தடுக்கும், அம்மாணவர்களை விலக்குவதற்கான ஒரு நவீன முறையான நடைமுறை நாடு முழுவதும் உள்ள அனைத்து IIT-களிலும் நடக்கிறது . இந்த கூடுதல் Cut-off நீக்கப்பட வேண்டும் என்றும் இட ஒதுக்கீடு கொள்கையை அதன் உண்மையான உணர்வோடு பின்பற்ற வேண்டும் என்றும் நாங்கள் கடுமையாக கோருகிறோம்.” என்று கூறியுள்ளது.
IIT-BOMBAY யில், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர் உட்பட 12 பதவிகளுக்கும் ஆண்டுக்கு இரண்டு முறை Ph.d சேர்க்கை நடத்தப்படுகிறது. சேர்க்கைக்கான விளம்பரம் IIT-BOMBAY இணையதளத்தில் வெளியிடப்படுவதாகவும், விண்ணப்பதாரர்கள் இணைய வழியில்(Online) விண்ணப்பிக்க வேண்டும் என்றும் இதன் தலைவர் அமிதாவே தே கூறுகின்றார். “விண்ணப்பதாரரின் கல்வி நிலை, தகுதி தேர்வு மற்றும் நேர்காணல் அல்லது இரண்டும் இணைந்த தேர்வு முறையின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்” என்கிறார் அமிதாவே தே. ஐந்தாண்டு காலத்தில் (2015-2019) ஆராய்ச்சி படிப்பிற்கு(Ph.d) விண்ணப்பித்தவர்களில் மொத்தத்தில், 3.5% மட்டுமே வெற்றி பெற்று தேர்வுசெய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கிறார்.
மேலும், மற்ற பிரிவினரிடம்(SC, ST & OBC) இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை பொது பிரிவினரை விட குறைவாக இருப்பதாகவும். விண்ணப்பித்த 54,021 பொது பிரிவினரில், 3.8% பேரும், SC பிரிவில் 2.4% பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ST மற்றும் OBC பிரிவில் இந்த விகிதம் 3.1% ஆகும். அடிப்படையில் இது சமுக நீதிக்கு எதிரான கருத்தாகும்.
விண்ணப்பித்த மாணவர்களை தேர்ந்தெடுக்கவில்லை
IIT-Bombay யின் கணிதத் துறையில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் ST பிரிவில் 43 விண்ணப்பங்களைப் பெற்றது, ஆனால் எதுவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. SC பிரிவில் பெற்ற 220 விண்ணப்பங்களில், ஒரே காலகட்டத்தில் ஏழு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். 607 OBC விண்ணப்பதாரர்களில், 19 பேர் மட்டும் தேர்வாகியுள்ளனர்.
பல்கலைகழக மானிய குழுவின் முன்னாள் தலைவரும், “சாதியால் ஒடுக்கப்பட்டோர்: நவீன இந்தியாவில் பொருளாதார பாகுபாடு மற்றும் சமூக விலக்கல்(Blocked By Caste: Economic Discrimination and Social Exclusion in Modern India) என்ற புத்தக ஆசிரியர் கூறுகையில், “ஆரம்பத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போது அதிகமான விண்ணப்பங்கள் வருவதால், இப்போது நிலைமை மேம்பட்டுள்ளது. விண்ணப்பங்களின் எண்ணிக்கையின் பின்னணியில் பிரதிநிதித்துவத்தின் பற்றாக்குறை புரிந்து கொள்ளப்பட வேண்டும். IIT-B-யில் மற்ற பிரிவினரின் பிரதிநிதித்துவம் இன்மை என்பது வருந்ததக்கதே”
ஆனால், காலியாக உள்ள இடங்களுக்கான கல்வி அமைச்சகத்தின் விதிமுறைகளை IIT-B பின்பற்றவில்லை என்று APPSC குற்றம் சாட்டுகிறது “ஒரு வருடத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நிறுவனம் தவறிவிட்டால், அந்த இடங்களுக்கான தேர்வை மீண்டும் விளம்பரம் செய்ய வேண்டும், மீண்டும் சேர்க்கைக்கு அழைப்பு விடுக்க வேண்டும், அடுத்த ஆண்டுக்கு அந்த இடங்களை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று விதிகள் உள்ளன. ஆனால் இடங்கள் காலியாக இருந்தபோதிலும், அவர்கள் ஏன் இந்த வழிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை IIT-B விளக்க வேண்டும், ” என்று APPSC-யினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இடஒதுக்கீடு விடயத்தில், மாணவர்கள் தங்கள் புகார்களை நிர்வாகத்தின் SC/ST பிரிவில் தெரிவிக்கலாம் என்று IIT-B நிறுவனத்தை சேர்ந்த அமிதாவே கூறுகின்றார், ஆனால் மாணவர்கள் அங்கு புகாரளிப்பது எளிதல்ல என்று கூறினார். SC / ST Cell பயனற்றது என்று APPSC தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. “IIT-B -யில் உள்ள சாதி சார்பு நிலை என்பது நிறுவனவயப்பட்டது மற்றும் நுட்பமானது. ஒடுக்கப்பட்ட பிரிவில் இருந்து மிகச் சிலரே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை தரவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. எங்கள் சேர்க்கைகள் தகுதியின் அடிப்படையில் இல்லை என்று பேராசிரியர்கள் மற்றும் சக ஊழியர்களால் கருத்துக்கள் திணிக்கப்படுகிறது” என்று IIT-B -யில் பயிலும் SC பிரிவை சார்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவர் கூறுகின்றார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியான கட்டுரையின் அடிப்படையில் எழுதபட்டது.