இன்று வி.பி.சிங் நினைவு நாள் சிறப்பு பதிவு
உத்தரபிரதேசத்தில் அலகாபாத் நகரில் அரச குடும்பத்தின் `தையா’ சமஸ்தான மன்னருக்கு. இரண்டாவது மகனாக 1931 ஆம் ஆண்டு சூன் மாதம் 25-ந்தேதி பிறந்தார் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.
வி. பி. சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்து கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள ஆண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.,யும் படித்தார்.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் 1950 ஆம் ஆண்டு எம்.எஸ்.சி., படிப்பை முடித்த வி. பி. சிங், தீவிர அரசியலில் இறங்கினார்.
அரசியலில் நுழைந்த வி.பி.சிங்
வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டு தனது சொந்த நிலத்தை அந்த இயக்கத்துக்கு தானமாக கொடுத்தார்.
1969 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
1971இல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அமைச்சரவையில் வர்த்தக துணை அமைச்சரானார். 1980ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது. இந்திரா காந்தி இவரை உத்திரப்பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார்.
உத்தரபிரதேசத்தின் தென்மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளைகளை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளைகளை தடுக்க முடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்று கொண்டு பதவி விலக முன்வந்தார்.
இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் நற்பெயரை பெற்று தந்தது. 1983ல் இவரின் மேற்பார்வையில் சில கொள்ளையர்கள் சரண் அடைந்தனர்.
அம்பானிக்காக ராஜிவ் காந்தியால் பதவி நீக்கம் செய்யபட்டார்
1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியத்துவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்’ முறையை சீராக தளர்த்தி வந்தார்.
இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியைக் குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்கக் கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரி மோசடி செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவர்க்க செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்.
நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டது.
பாதுகாப்புத்துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது.
ராஜிவ் காந்தியால் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். சுயமரியதை மிக்க வி பி சிங் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கொண்டார், மக்களவை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்தார்.
வி.பி.சிங்கின் புதிய கட்சி
அருண் நேரு ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார்.
ஜனதா கட்சியின் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 இல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர்.
தேசிய முன்னனியின் ஒருங்கிணைப்பாளராக வி.பி.சிங்
ஜனதா தளத்திற்கு வி. பி. சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது. இதற்கு என்.டி.இராமாராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.
இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னணி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னணி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன.
அனைவரும் வி. பி. சிங்கையே தூய்மையான மாற்று பிரதம வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார்.
மக்களின் பிரதமர் வி.பி.சிங்
வி.பி.சிங், பிரதமர் பொறுப்பில் இருந்தது ஓராண்டுக்கும் குறைவான காலமே. (2 டிசம்பர 1989 முதல் 10 நவம்பர் 1990 வரை) ஆனால் சாதித்தவை மிகுதியானவை.
- வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டார்.
- ஈழத்தில் தமிழர்களுக்கு எதிராக படுகொலைகளில் ஈடுபடுபட்ட இந்திய அமைதி படையை வி.பி.சிங் விலக்கி கொண்டார்.
- ராஜிவ் அரசில் நிதியமைச்சராக இருக்கும்போது வரி ஏய்ப்பாளர்களுடனும் அம்பானி போன்ற பெருமுதலாளி களுடனும் மோதிய வி.பி. சிங், தனது ஆட்சி காலத்தில் அம்பானியுடன் மீண்டும் மோத வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். பொதுத்துறை நிறுவனங்களான ஆயுள் காப்பீடு நிறுவனமும் (எல்.அய்.சி.) பொதுக்காப்பீடு நிறுவனமும் (ஜி.அய்.சி.) பெருமளவில் கடன்களும் முதலீடும் வழங்கியுள்ள பெரும் கட்டுமானப்பணி நிறுவனமான “லார்சன் அண்ட் டூப்ரோ’வின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அம்பானி செய்த முயற்சிகளை வி.பி. சிங் அரசு தோற்கடித்தது.
- அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு நிறைவையொட்டி, அவரது படைப்புகளை அனைத்தும் இந்தியிலும் பிற மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு சாமானிய மனிதருக்கும்கூட கிடைக்க ஏற்பாடு செய்தார். அம்பேத்கருக்கு “பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டதும், அவரது உருவப் படம் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் திறந்து வைக்கப்பட்டதும் வி.பி. சிங் ஆட்சிக் காலத்தில்தான்.
- 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில அரசுகள் கொண்டு வந்த அனைத்து நிலச் சீர்திருத்தச் சட்டங்களும் அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவின்கீழ் கொண்டு வரப்பட்டு இச்சட்டங்களை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாமல் தடுத்தார்.
- காங்கிரசு ஆட்சி, தொழிலாளர்க்கு எதிராகக் கொண்டு வந்திருந்த தொழிலுறவு கொள்கைகளை நீக்க புதிய தொழிலுறவு சட்டம் கொண்டு வருவதற்காக தொழிற்சங்கங்கள், தொழில் முகவர்கள், அரசு அலுவலர்கள் கொண்ட குழு அமைத்தார்.
இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தியதால் ஆட்சியை கவிழ்த்த ஆர்.எஸ்.எஸ்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 % இட ஒதுக்கீடு செய்யும் மண்டல் குழுவின் பரிந்துரையின் ஒரு பகுதியை நடைமுறைப்படுத்தினார். வட இந்தியாவில் இம்முடிவுக்கு ஆதிக்க சாதியினரிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது
வி,பி.சிங் இந்து தேசத்தை பிளவுபடுத்துகிறார் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ்., அதன் அதிகாரபூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் முதல் பக்கத்தில் ‘ராஜாவின் (வி.பி.சிங்கின்) ஜாதி யுத்தம்’ என்ற தலைப்பிட்டு எழுதியது:
அதில் “150 ஆண்டுகால அன்னிய ஆட்சியான பிரிட்டிஷ் ஆட்சி சாதிக்க முடியாத ஒன்றை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்டுவேன் என்று வி.பி.சிங் மிரட்டுகிறார். இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்த விவேகானந்தரும், தயானந்த சரசுவதியும், மகாத்மா காந்தியும் டாக்டர் ஹெட்கேவரும் மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளை சிதைக்கத் துடிக்கிறார் வி.பி.சிங். சமூகத்தை மண்டல் மயமாக்கி, வி.பி.சிங் சாதிக்க விரும்புவ தெல்லாம் இந்து சமூகத்தை, முன்னேறியவர்கள், பிற்படுத்தப்பட்டோர், அரிஜன் என்பதாக கூறு போட வேண்டும் என்பது தான்” என்று ‘ஆர்கனைசர்’ ஏடு எழுதியது.
நேரடியாக எதிர்த்தால் பிற்படுத்தபட்டவர்களின் ஆதரவை இழக்க நேரிடும் என்று பாரதிய ஜனதா ராமஜென்ம பூமி யாத்திரையை அத்வானி தலைமையில் துவங்கி அதன் மூலம் கலவரத்தை துண்டியது.
ஜனதா தளத்தின் ஆட்சி நடந்த பிகாரில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் மூலம் அத்வானியை கைது செய்தார் பாஜக தேசிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி வி.பி. சிங் அரசை கவிழ்த்தது.
142 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் 346 உறுப்பினர்களின் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை நன்கு அறிந்து கொண்ட வி.பி.சிங், தனக்கு எதிராக அணி திரண்டவர்களிடம் “எத்தகைய இந்தியாவை நீங்கள் விரும்புகிறீர்கள்”? கேள்வியை எழுப்பினார். மேலும் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? இதை இந்த ஓட்டெடுப்பு வழியாக மக்கள் அறிந்து கொள்ளட்டும். என்னுடைய ஆட்சி வீழ்த்தபட்டாலும், நான் அமர்ந்திருந்த பிரதமர் இருக்கையில் யார் வந்து அமர்ந்தாலும் 27 சதவீத இடஒதுக்கீட்டை ஒழித்து விட்டு, இந்த நாற்காலியில் ஒரு நிமிடம்கூட உட்கார முடியாது” என்று முழங்கினார்.
வி.பி. சிங் பிரதமர் பதவியிலிருந்து விலகியவுடனேயே, தனக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி. வகை பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கி கொள்ளும்படி அரசாங்கத்திடம் கேட்டு கொண்டார். கடைசி வரை எந்த போலிஸ் படையின் பாதுகாப்பும் அவருக்கு இருந்ததில்லை.
1990களின் இறுதியில் தீவிரமான அரசியலிலிருந்து வி.பி. சிங் ஒதுங்கி நின்றார்.
டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள குடிசைப்பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதற்கு எதிரான போராட்டங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பதால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான போராட்டங்களில் பிற தலைவர்களுடன் பங்கேற்றார். இத்தனைக்கும் அவர் பதினேழு ஆண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டவராகவும், ரத்தப்புற்று நோயால் அவதிப்பட்டவராகவும் இருந்தார். கடைசி வரை அம்பானிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாகவே இருந்தார். வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.
இந்திய பிரதமர்களில் மக்களுக்காகவும், மக்களோடும் நின்ற வி.பி.சிங் நினைவு நாள் இன்று