கடந்த வியாழக்கிழமை தமிழ்நாட்டில் கரையை கடந்த நிவர் புயலால் மூன்று உயிர் இழப்புகளும் கணிசமான அளவில் பொருளாதார சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இப்புயல் கடந்த காலத்தில் ஏற்பட்ட வர்தா, ஒக்கி மற்றும் கஜா புயல்களை போல் பெரும் அளவிலான சேதங்களை ஏற்படுத்தவில்லை என்றாலும் நிவர் புயலானது தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் ஆந்திர மாநிலங்களில் கணிசமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருப்பெற்றது. இதை அடுத்து நவம்பர் 22 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி பின் நவம்பர் 23 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுது.பின் 300 கி.மீ கடலில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நவம்பர் 24 ஆம் தேதி நிவர் புயலாக மாறியது. பின்னர் நவம்பர் 25 மிகக் தீவிர புயலாக வலுவடைந்தது. இதை அடுத்து தமிழகம்,புதுச்சேரி மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்கள் புயலை எதிர்கொள்ள தயார் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
நவம்பர் 25 இரவு 11.30 மணியளவில் நிவர் புயல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையருகில் கரையை கடக்க தொடங்கியது. இந்திய வானிலை ஆய்வு மைய தகவலின்படி, நிவர் புயலானது 120-30 கிமீ வேகத்தில் நவம்பர் 26 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு மரக்காணம் அருகே கரையை கடந்தது. இதை தொடர்ந்து புதுச்சேரியில் 237 மி.மீ மழையும், சென்னையில் 83மி.மீ மழையும், கடலூரில் 246மி.மீ மழையும் பதிவானது. மேலும் தமிழ்நாட்டில் ஆம்பூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ஆரணி ஆகிய பகுதிகளில் மணிக்கு 50கி.மீ வேகத்தில் காற்றுடன் மழையும் பெய்தது.
நிவர் புயல் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கர்நாடகா மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பலவீனமடையுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கடற்கரை ஆந்திரா மற்றும் வட கடலோர தமிழ்நாட்டில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நிவர் புயல் எதிர்பார்த்ததை விட குறைவான சேதத்தையே ஏற்படுத்தியதாக தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எராயனூர் கிராம மீனவர்கள் தெரிவித்துள்ளனர். “புயல் எங்களை அதிகம் பாதிக்கவில்லை என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு நாள் முன்பு தான் நாங்கள் எங்கள் படகுகளை இடம் மாற்றினோம். இப்போது அலைகள் அதிகமாக உள்ளன. அடுத்த வாரம் வரை மீன் பிடிக்க முடியாது” என்று ஒரு மீனவர் தெரிவித்தாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள்:
- தமிழ்நாட்டில் நிவர் புயலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா தெரிவித்தார்.
- 2.27 லட்ச மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளிலிருந்து, 3085 நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
- புயலின் தாக்கத்தால் 1086 மரங்கள் வேரோடு சாய்ந்து உள்ளன.
- 500 குடிசைகள் சேதமைடைந்துள்ளன.
- 760 மின்கம்பங்கள் சேதமடைந்ததாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
- 102 கால்நடைகள் இழப்பு.
- முதல் கட்ட மதிப்பீட்டில் 1617 ஹெக்டர் பரப்பளவிலான நெல் பயிர்கள், 314 ஹெக்டர் பரப்பளவிலான நிலக்கடலை மற்றும் 8 ஹெக்டர் பரப்பளவிலான மரவள்ளிக்கிழங்கு ஆகியவை கடலோர மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- கடலூரில் 34 ஏக்கர் வாழை தோப்பு மற்றும் 77 மின்கம்பங்கள் சேதமடைந்தது. மேலும் கடலூரில் மட்டும் 52,226 நபர்கள் 441 அரசு நிவாரண முகாம்களில் தங்கவைக்கபட்டனர்.
- புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் முதல் கட்டமாக 400 கோடி அளவிலான பொருள் சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், முதல்கட்டமாக 50 கோடி இடைக்கால நிவாரண தொகையை ஒன்றிய அரசிடம் இருந்து கேட்டு பெற இருப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
- ஆந்திர பிரதேச மாநிலத்தில் பெய்த மழையில் 1000 ஏக்கர் நிலப்பரப்பு நீரில் மூழ்கியது.
- சென்னை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் மட்டும் 58 பகுதிகள் நீரில் மூழ்கின மேலும் 267 மரங்கள் சாய்ந்துள்ளது.
- சென்னையின் புறநகர் பகுதிகளான முடிச்சூர், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பகுதிகள் செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரால் மூழ்கின. மேலும் மடிப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது..
தமிழகத்தை தாக்க இருக்கும் மேலும் இரு புயல்கள்:
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் வங்ககடலில் மேலும் இரு புயல்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 29 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாக போகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 11 தேதி வங்கக்கடலில் உருவாக இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயலாக மாறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் இந்த ஆண்டு பருவமழையால் 801.3 மி.மீ மழை பொழிந்துள்ளது. இது சராசரியாக சென்னை பெறும் 590.1மி.மீ மழை அளவை விட 36% அதிகம் ஆகும்.