தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்கள் வெறும் 2%; அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின்  பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (OBC) இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதும், ஒட்டு மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை 2% சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதும் பல்வேறு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் எப்படி இயங்குகின்றன?

இந்தியாவில் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில அரசின் நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்டு, மாநில உயர் நீதிமன்றத்தின் கீழ் இயங்குகிறது. அதாவது திருச்சியில் இருக்கும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு 2012-ம் ஆண்டு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது தமிழ்நாடுஅரசு தான். இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கிறார். எனவே இது தன்னாட்சி பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. இதேபோலத்தான் இந்தியா முழுவதும் உள்ள 23 தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் நிர்வாகங்களும் இயங்குகிறது. 

இந்த பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை CLAT என்கிற அகில இந்திய நுழைவுத்தேர்வின் வழியாக நடைபெறுகிறது. இவை தன்னாட்சி பல்கலைக்கழகங்களாக இருப்பதால் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாநில ஒதுக்கீட்டின் அளவு மாறுபடுகிறது. 

மாநிலத்திற்கும், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் ஒதுக்கப்படும் சீட்டுகள்

பெங்களூரில் இருக்கும் கர்நாடக தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் 120 L.L.B இடங்களில் 30 கர்நாடகாவிற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 84 இடங்களும் தெலுங்கானாவிற்கு 21 இடங்களும் ஒதுக்கப்படுகிறது. தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் 52 இடங்கள் மத்திய ஒதுக்கீட்டிலும், தமிழக ஒதுக்கீட்டில் 54 இடங்களும் இருக்கிறது. 

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஓ.பி.சி பிரிவினரின் நிலை

தமிழக ஒதுக்கீட்டில் உள்ள 54 இடங்களில் பொதுப் பிரிவினருக்கான இடங்கள் 16 ஆக இருக்கிறது. ஆனால் அகில இந்திய ஒதுக்கீட்டிலோ மொத்தம் உள்ள 52 இடங்களில் 40 இடங்கள் பொதுப்பிரிவினருக்கானதாக இருக்கின்றது. 

தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் 26 இடங்கள் இதர பிற்படுத்தபட்டவர்களுக்கான ஒதுக்கீட்டில் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் அகில இந்திய ஒதுக்கீட்டிலோ பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு என்பதே இல்லை. 

27% இட ஒதுக்கீடு எங்கும் பின்பற்றப்படவில்லை

இந்தியாவில் முதல் ஐந்து இடங்களில் உள்ள தேசிய பல்கலைக்கழகங்களில் உள்ள வெறும் 1.94% மட்டுமே ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

மத்திய அரசு கல்வி நிறுவங்னகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட 27% இடஒதுக்கீடானது, அரசின் ஒரு அங்கமான நீதித் துறையின் நிர்வாகத்தில் இருக்கும் தேசிய சட்டக் கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படவில்லை. 

கொல்கத்தா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை

கொல்கத்தாவின் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து வகுப்புகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 544 இடங்களில் ஓ.பி.சி மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 15 என்பதாகத்தான் இருக்கிறது. 

கர்நாடகாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் 2015 – 16 கல்வியாண்டில் படித்த 367 மாணவர்களில் வெறும் 9 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்கள். இது குறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழக்கு தொடர்ந்து நடத்தி வருகிறது. 

விவாதமாகாத தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதி ஆதிக்கம்

இது தொடர்பாக, தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசும்போது, இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ஆகியவற்றில் உள்ள உயர் சாதியினரின் ஆதிக்கம் குறித்த அவ்வப்போது விவாதமாகி இருக்கிறது. ஆனால் விவாதத்திற்குள்ளேயே வராமல் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்-களை விட அதிக அளவில் உயர் சாதியினரின் கூடாரமாக இருப்பது தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள் தான் என்று தெரிவிக்கின்றனர். 

மேலும் இந்த சாதிய வேறுபாடு இந்தியாவின் நீதி பரிபாலன முறையில் பிரதிபலிக்கிறது என்றும் கூறினர். பெரும்பாலும் தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்கள்தான் பெரும்பான்மையாக உச்சநீதிமன்றத்திற்கு செல்வார்கள். இன்று உச்ச நீதிமன்றங்களில் 80% உயர் சாதியினரின் ஆதிக்கத்தில் இருப்பதற்குக் கூட இதுதான் காரணம் என்றும் கூறினர். மேலும் இந்த போக்கு சமூக அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இந்தியாவின் நீதித் துறையில் கீழமை நீதிமன்றங்களில் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் வழக்கறிஞர், நீதிபதி உள்ளிட்ட பணிகளில் இருக்கிறார்கள். மேலே செல்லச்செல்ல இந்த எண்ணிக்கை குறைந்து உச்ச நீதிமன்றம் முழுக்க உயர்சாதிகளின் ஆதிக்கத்தில் இருக்கிறது. 

இடஒதுக்கீடு கல்வியில் இல்லை என்றால் அந்த நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் பிரதிநிதித்துவம் என்னவாக இருக்கும் என்பதற்கு  தேசிய சட்டப் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு என்றும் கூறினர். இந்தியாவில் ஜனநாயகத்தைக் காப்பதில் நீதித்துறையின் பங்கு முக்கியமானது. அதில் அனைத்து தரப்புகளின் பங்களிப்பும் இல்லையென்றால் நீதிதுறை அதிகாரம் என்பது சாதி அதிகாரமாக மாறும் ஆபத்து இருக்கிறது. 

ஹார்வர்ட் உள்ளிட்ட சட்டப் பல்கலைக்கழங்கள் முதல் உலகின் அனைத்து முக்கியமான பல்கலைக்கழகங்களிலும் வேற்றுமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆனால் இந்தியாவின் 70 ஆண்டுகால ஜனநாயகத்தில் அது இல்லாமல் செய்யப்படுவது மிகவும் ஆபத்தானதும், வருத்தத்திற்குரியதும் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *