ஆதிச்சநல்லூர் தொல்லியல் வரலாறு
ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வு வரலாறை அறிந்த கொள்வதற்கு சுமார் 120 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும். 1876-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜாகர் (Dr Friderich Jagor) என்பவர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு செய்து ஆயிரக்கணக்கான தொல்பொருட்களை தன்னுடைய நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டார்.
இதன் பின்பு இங்கிலாந்தைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ரே என்பவர் 1899-ம் ஆண்டு தொடங்கி 1905 வரை ஆதிச்சநல்லூரில் விரிவான அகழாய்வு செய்து 20 தங்கபொருட்களும், 123 வெண்கல பொருட்களும், இரும்பு சார்ந்த 394 பொருட்களும், 616 மட்பாண்ட பொருட்களும் கண்டுபிடித்தார். அதோடு, மனிதனின் மண்டை ஓடு மற்றும் எலும்பு கண்டுபிடித்தையும் தன்னுடைய catalogue of pre historic Antiquities நூலான வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய பழம்பொருட்களின் பட்டியல் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். அலெக்ஸ்சாண்டர் ரே கண்டுபிடித்த பொருட்கள் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.
1903-04 ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூயிஸ் லாபீக், மண்டை ஓடுகளை ஆய்வு செய்தார். இவர் கண்டுபிடித்த பொருட்கள் பிரான்ஸ் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்படுள்ளது. இப்படி ஆதிச்சநல்லூரில் 1876 இல் தொடங்கிய அகழாய்வு 1905 வரை பல வெளிநாட்டவர்களாலே மேற்கொள்ளப்பட்டது.
ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்பழங்கால பொருட்கள்
ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வெண்கலம், இரும்புப் பொருட்களால் உலோக காலம், இரும்பு காலம், கற்காலங்களை சேர்ந்தவைகளாக உள்ளது. கண்டுபிடிக்க மட்பாண்டங்களில் அரிசி, நெல், உமி கிடைத்திருப்பதால் வேளாண்மையில் சிறந்து விளங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. அதேபோல உடை, ஆயுதங்களும் கிடைத்திருப்பதால் பண்பட்ட மக்கள் வாழ்ந்திருப்பதாக ஆய்வார்கள் கருதினா். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட ஆதிச்சநல்லூரில் 1905-க்கு பின்பு அகழாய்வே செய்யப்படவில்லை.
ஹரப்பா, சிந்துவெளி நாகரிகம் போன்றவற்றிக்கு இணையான பழமையான நாகரீகமாக தாமிரபரணி நாகரீகம் இருக்கும். இதற்கு அரசு உரிய முறையில் அகழாய்வு செய்யவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தினார்கள்.
முதல்முறையாக மத்திய தொல்லியல் துறை அகழாய்வு
இதன்பின்பு தான் சுமார் 120 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய தொல்லியல் துறை டி.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் 2003-04 மற்றும் 2004-05 ஆகிய ஆண்டுகளில் என்று இரண்டு கட்டமாக அகழாய்வு செய்து ஏராளமான தொல்பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது. ஆனால் அதன் ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை. ஆய்வாளர்கள் ஆதிச்சநல்லூரின் காலத்தைக் கணித்தாலும், முறையாக அறிவியல் பூர்வமாக கணித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என்று கருதப்பட்டது. இதற்கும் கூட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்புதான் அமெரிக்காவில் உள்ள ஆய்வகத்தில் கார்பன் டேட்டிங் ஆய்வு செய்து ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் பொது ஆண்டுக்கு முன் (கி.மு) 905 மற்றும் பொ.ஆ.மு 791 என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் இன்னும் ஆய்வறிக்கையை வெளியிடவில்லை.
தமிழக வரலாற்றை மாற்றிய கீழடி அகழாய்வு
இந்த சூழலில் தான், கீழடியில் இந்திய தொல்லியல் துறை முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை அமர்நாத் தலைமையில் மேற்கொண்ட போது தமிழக தொல்லியல் வரலாற்றிலேயே முதல்முறையாக வாழ்விட பகுதிகள் கிடைத்தது. இது தமிழக வரலாற்றையை மாற்றி எழுதும் நிலைக்கு இட்டுச் சென்றது. அப்போது 3-ம் கட்ட அகழாய்வின்போது திட்ட இயக்குநர் அமர்நாத் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கீழடி ஆகழாய்வினை இரட்டிப்பு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டது.
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் 4 மற்றும் 5-ம் கட்ட அகழாய்வுகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. இதில் 4-வது கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் அமெரிக்க புளோரிடா மகாணத்தில் பீட்டா ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட கார்பன் டேட்டிங் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வில் கீழடி 2500 ஆண்டுகள் பழமையான நாகரீகம் என்பது அறிவியல் பூர்வமாக உறுதியானது.
அப்போது தான் ஆதிச்சநல்லூரிலும் முறையான அகழாய்வு செய்யப்பட்டால் கீழடிக்கும் முந்தைய நாகரிகமாக தாமிரபரணி இருக்கும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தத் தொடங்கினர்.
ஆதிச்சநல்லூரில் வாழ்விடம் தேடி தொடங்கிய தமிழக தொல்லியல் துறை அகழாய்வு
ஆதிச்சநல்லூரில் இறந்தவர்களை மண்பாண்டங்களில் வைத்து புதைக்கும் பழக்கத்தால், தாழிக்காடு என்று அழைக்கப்படுகிறது. ஆனால் புதைக்கும் போது உடை, அரிசி, உமி, அணிகலங்கள், ஆயுதங்கள் என்று வைத்து புதைத்திருப்பதால், செழுமையான சமூக வாழ்கை வாழ்ந்த வாழ்விடப் பகுதி எங்கிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில்தான் தமிழக தொல்லியல் துறை அடுத்த கட்ட அகழாய்வினை ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ள இந்திய தொல்லியல் துறையிடம் உரிய அனுமதியைப் பெற்றது.
கீழடியில் கிடைத்தது போல, ஆதிச்சநல்லூரிலும் வாழ்விடப்பகுதி கிடைக்குமா என்ற எதிபார்ப்பார்ப்பில் தமிழக தொல்லியல் துறை கடந்த மே 25-ம் தேதி அகழாய்வைத் தொடங்கியது. செப்டம்பர் 30-ம் தேதி வரை 4 மாதங்கள் நடைபெற்ற அகழாய்வில் 72 குழிகள் தொண்டப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வில் ஆதிச்சநல்லூர் தொல்லியல் வரலாற்றில் முதல் முறையாக வாழ்விடப்பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் 27 முதுமக்கள் தாழிகளிலும் தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் குறியீடுகளை தவிர 438 தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. நுண் கற்கால கருவிகள், இரும்பிலான தொல்பொருட்கள், மேற்கூறை ஓடுகள், வட்டவடிவ தந்தத்தினாலான மணிகள் கிடைத்துள்ளது.
மேலும், சுடுமண் பொம்மைகள், சுடுமண் புகை குழாய்கள், சதுரங்க காய்கள், சுடுமண் காதணிகள் என்று மக்கள் பயன்படுத்திய தொல்பொருட்கள் கிடைத்திருப்பது, வாழ்விட பகுதி ஆய்வில் மிகமுக்கியமானதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிடைத்த முதுமக்கள் தாழிகளைத் திறந்து அவற்றின் உள்ளே இருக்கும் பொருட்களை சேகரிக்கும் பணியும் நடைபெறுகிறது.
தமிழக வரலாற்றை மாற்றப் போகும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு
மத்திய தொல்லியல் துறை கடந்த 2003-04 மற்றும் 2004-05 ஆகிய ஆண்டுகளில் அகழாய்வு செய்து சுமார் 15 ஆண்டுகளாக ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்யமால் இழுத்தடிக்கும் நிலையில், தமிழக தொல்லியல் துறை தற்போது மேற்கொண்ட ஆய்வு விரிவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இந்த அகழாய்வுப் பணிகளும் 4 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் விரிவான அகழாய்வை ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ள முடியவில்லையென்றாலும், அடுத்த கட்ட ஆய்வு விரிவாக இருக்கும் என்று தமிழக தொல்லியல் துறை தெரிவிக்கிறது.
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பான வழக்கில், ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை, மயிலாடும் பாறை உள்பட 7 இடங்களில் மீண்டும் தொல்லியல் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
144 ஆண்டுகளாக ஆதிச்சநல்லூரில் அவ்வப்போது அகழாய்வு பணி நடைபெற்றாலும் இன்னும் முழுமையான அகழாய்வு மேற்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கம் ஆய்வாளர்களிடம் நிலவுகிறது. அதோடு மத்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வெளியிடாமல் இருப்பதால் அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே, வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் தொல்லியல் அகழாய்வுகளிலும், நீதிமன்ற தீர்ப்பிலும், கீழடியைப் போல ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழக வரலாற்றை மாற்றும் என்று எதிர்பார்க்கலாம்.
– வரலாற்று ஆய்வாளர், மகிழன்பு