இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றினை பதிவு செய்யும் திரைப்படத்தில் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் அக்டோபர் 8-ம் தேதி அன்று நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் முரளிதரன் குறித்த படத்தில் நடிப்பதில் தான் பெருமைப்படுவதாக தகவலை வெளியிட்டிருந்தார்.
முத்தையா முரளிதரன் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலையினை மறுத்து தொடர்ச்சியாக பேசி வருவதும், இலங்கையினுடைய சிறந்த தலைவராக ராஜபக்சே இருக்கிறார் என்றும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார் முரளிதரன். ராஜபக்சே அரசினால் முரளிதரனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தமிழர்கள் மேல் நடத்தப்பட்ட இனப்படுகொலையினை மறைக்கும் ஒரு முகமாகவே முரளிதரன் செயல்பட்டு வருகிறார் என்பதே உலகம் முழுதும் உள்ளா தமிழ் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
வாழ்த்து தெரிவித்த ராஜபக்சே மகன்
இந்த சூழ்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகனான நாமல் ராஜபக்சே விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். ராஜபக்சேவின் மகன் எதற்கு வாழ்த்து தெரிவிக்கிறார் என்பதைக் கூட விஜய் சேதுபதியால் புரிந்து கொள்ள முடியாதா என்று அவருடைய ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களின் எதிர்ப்பு
விஜய் சேதுபதியின் அறிவிப்பிற்கு கீழே ஏராளமான தமிழர்களும், சேதுபதியின் ரசிகர்களும் இந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என்று எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகிறார்கள். நீங்கள் மக்களுக்கான கலைஞர் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தோம் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் என்றும் அந்த படத்திலிருந்து விலக வலியுறுத்தி கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.
எந்தக் கொடியை ஏந்தி சிங்கள அரசு தமிழர்களை அழித்ததோ அதே கொடியை மார்பில் ஏந்தி நீங்கள் நடிக்க உங்களுக்கு மனம் வரும் என்றால், உங்கள் திரைப்படங்களை புறக்கணிப்பதற்கு எங்களுக்கும் மனம் வரும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.
விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி
விஜய் சேதுபதியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமி அவர்களும் விஜய் சேதுபதியை இந்த படித்தில் நடிக்க வேண்டாம் என வலியுறுத்தி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார்.
”மக்கள் செல்வா..
நீரே எங்கள்
தமிழ் சொத்து அய்யா
நமக்கெதற்கு மாத்தையா?
மாற்றய்யா?”
என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோரிக்கை
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழர்களின் உரிமை சார்ந்த பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பவருமான கோவை இராமகிருஷ்ணன், விஜய் சேதுபதி அவர்கள் முரளிதரன் குறித்த திரைப்படத்தில் நடிப்பதைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
ஈழத்தமிழர்களைக் கொடூரமாகக் கொன்ற சிங்களப் பேரினவாத அதிபர் ராஜபக்சே அரசிற்கு துணைபோனவர் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இப்படிப்பட்ட நபரின் பாத்திரத்தில் நமது மதிப்பிற்குரிய நடிகர் விஜய் சேதுபதி நடித்தால் அது உலகத் தமிழர்கள், ஈழத் தமிழர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கும். எந்த வடிவத்திலும் கடுகளவு கூட சிங்கள அரசிற்கும், ராஜபக்சேவிற்கும் நன்மை பயக்கின்ற செயலில் நடிகர் விஜய்சேதுபதி ஈடுபட கூடாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் மத்தியில் மனிதாபிமானி, எளிமையானவர், முற்போக்கானவர் என்ற எடுத்த பெயர்களை விஜய்சேதுபதி கெடுத்துக் கொள்ளகூடாது. எப்போதும் போல விஜய்சேதுபதி மக்கள் செல்வராக மக்கள் மனதில் நிலைக்க வேண்டுமென்றால் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதையும் தாண்டி இது கலை, சினிமா என்று சொல்லி முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்தால், நிச்சயமாக உலகத் தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள்.
தந்தை பெரியார் கருத்துகளுக்கும், பெரியாருக்கும் பற்றுடையவராக நடிகர் விஜய்சேதுபதி இருந்தாலும் கூட, அவரது செயல் தமிழ் இனத்திற்கு மாறாக இருக்குமானால் அதை தந்தை பெரியார் திராவிட கழகம் கண்டிப்பாக எதிர்க்கும் எனவும், திரைப்படத்தை திரையிட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழினத்தின் மீது அக்கறை இந்த குரல்களுக்கு மதிப்பளித்து விஜய் சேதுபதி இந்த படத்திலிருந்து விலகுவாரா, அல்லது மக்கள் குரலுக்கு மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கி நிற்கிறது.