மாற்றுத்திறனாளிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி, சிகிச்சை, பரிசோதனை அனைத்திலும் முன்னுரிமை வேண்டும்

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மிக மோசமாகப் பரவி வரும் நிலையில் அதிலிருந்து மாற்றுத் திறனாளிகளை பாதுகாக்குமாறு பல்வேறு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்புகள் மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளன.

பார்வையற்றோர் கூட்டமைப்பு

டெல்லியைச் சேர்ந்த தேசிய பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பு கொரோனா பரிசோதனை, சிகிச்சை மற்றும் தடுப்பூசியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. தேசிய மாற்றுத்திறனாளி நலத் துறைக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளது. இந்த கடிதத்தை மத்திய குடும்ப நல மற்றும்  சுகாதாரத் துறைக்கும், சமூகநீதித் துறைக்கும் அனுப்பியுள்ளனர். 

2016-ம் ஆண்டின் பார்வையற்றோர் வாழ்வுரிமைக்கான சட்டத்தின்படி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை கொடுக்க விதிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். 

அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் கூட்டமைப்பு

அறிவுசார் மற்றும் வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர்   கூட்டமைப்பான பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீரங் என் பிஜூர் இதுகுறித்து பேசும்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை என்பது அவர்களுக்கு தனி வரிசை வழங்குவது என்பதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் நீண்ட நேரம் காத்திருப்பதால் வரும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார். மேலும் நீண்ட வரிசையின் காரணமாக நெடுநேரம் குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறார்கள்   என்கிறார். குறைந்த அளவு பாதிப்பு ஏற்பட்டாலும் அவர்களின் சுவாச அமைப்பு பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகிறது. ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வரிசையில் நிற்கும் போது அவர்களது கையினை பாதுகாப்பாக எப்போதும் வைத்திருப்பது சாத்தியமில்லை என்கிறார்கள்.

அதேபோல வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால்  அவர்களுக்கு ஒரு உதவியாளர் தேவை. ஆனால் அதனை சிகிச்சை மையங்கள்  அனுமதிப்பதில்லை. தனி வரிசை போல உதவியாளர் ஒருவருக்கும் அனுமதி  அளிக்க வேண்டும் உள்ளிடட கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள்.

ட்விட்டர் பரப்புரை

கொரோனா பெருந்தொற்று சிகிச்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து அரசின் கவனத்தினை ஈர்க்க வரும் மே 1-ம் தேதி முதல் 15ம் தேதிவரை ட்விட்டர் பரப்புரையை எடுக்க உள்ளனர். #DisabledLivesMatter என்ற  ஹேஷ்டேக்கினை பயன்படுத்த உள்ளனர். மேலும் பிரதமருக்கு தொடர் மின்னஞ்சல் மூலம் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள காலத்தில், மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாக்க ’மாற்றுத் திறனாளிகள் உரிமைக்கான தேசிய இயக்கம்’ இதனை முன்னெடுக்கிறது. 

தடுப்பூசியை இலவசமாக வீட்டிற்கே சென்று அளிக்க வேண்டும்

அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் தடுப்பூசியை இலவசமாக வீட்டிற்கே சென்று வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஏனென்றால் மாற்றுத்திறனாளிகள் மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அதேவேளையில் எளிதாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடியவர்கள் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. 

மேலும் இந்த பரப்புரையில் மாற்றுதிறனாளிகளுக்கு  உணவுப்பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், மாதம் 7500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் அவர்கள் வைக்கிறார்கள்.

அதேபோல மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச ஆலோசனை மையங்களையும், மனநல ஆலோசனை மையங்களையும் அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *