இ்ந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவல் மிகத் தீவிரமடைந்து ஆக்சிஜன் இன்றியும், மருத்துவமனைகளில் இடம் இல்லாமலும் ஏராளமான மக்கள் மரணத்திற்கு தள்ளப்படும் மோசமான சூழல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கினை பதிவு செய்து விசாரணை நடத்தியது. சமூக வலைதளங்களில் ஆக்சிஜன், ரெம்டெசிவர், வெண்டிலேட்டர் உள்ளிட்ட உதவிகளைக் கேட்போர் மீது அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும், மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும் என்றும் தெரிவித்துள்ளது.
தேசிய தடுப்பு மருந்து கொள்கையினை ஏன் முறையாகப் பின்பற்றவில்லை என்றும், தடுப்பூசி என்பது நாட்டின் அனைத்து மக்களுக்கானதாக இருக்கும்போது, மத்திய அரசு வாங்குவதற்கும், மாநில அரசு வாங்குவதற்கும் தடுப்பூசி விலையில் எப்படி வேறுபாடு இருக்க முடியும் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளது. உச்சநீதிமன்றம் 10 முக்கிய கேள்விகளை ஒன்றிய அரசுக்கு எழுப்பியுள்ளது.
10 கேள்விகள்
- கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் மருத்துவ சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சை அளித்திட என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
- கடந்த ஆண்டு தடுப்பூசி நிறுவனங்களில் எவ்வளவு முதலீட்டினை மத்திய அரசு செய்திருக்கிறது? அதில் எவ்வளவு முன்பணமாகக் கொடுக்கப்பட்டுள்ளது? தடுப்பூசி உருவாக்கத்திற்கான ஆய்வில் ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பு எவ்வளவு?
- ஆக்சிஜன் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தொடர்ச்சியான நேரலை அப்டேட்டுகளை வழங்குவதற்கு ஒரு பொறிமுறையினை உருவாக்க முடியுமா?
- மூன்றாவது கட்ட தடுப்பூசி செலுத்துவதற்கு கோ-வின் எனப்படும் ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருப்பதால், படிக்காத மற்றும் இண்டர்நெட் வசதியில்லாத மக்கள் தடுப்பூசிக்கு பதிவதற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது?
- தடுப்பூசியைக் கொடுப்பதில் ஒரு மாநிலத்தைக் காட்டிலும் இன்னொரு மாநிலத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுமா?
- தனியார் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து 50% டோஸ்களை மட்டுமே வாங்குவதால் மத்திய அரசு எப்படி அதன் பங்குகளின் உரிமத்தினை கோர முடியும்?
- காப்புரிமை சட்டத்தின் 92வது பிரிவைச் செயல்படுத்தி கட்டாய உரிமங்களை வழங்குவதன் மூலம் மருந்துகள் உற்பத்தி நடைபெறச் செய்வதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறதா?
- கொரோனாவின் உருமாற்றமடைந்த பிறழ்வினை கண்டுபிடிப்பதற்கு பரிசோதனை ஆய்வகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா?
- மருத்துவமனை கட்டணங்களை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய அரசு என்ன முயற்சி எடுத்துள்ளது? தேசிய கொள்கை ஏதேனும் வடிவமைக்கப்பட்டுள்ளதா?
- அஸ்ட்ராசெனெகா நிறுவனம் அமெரிக்க குடிமக்களுக்கு குறைந்த விலையில் தடுப்பூசியினை வழங்கும்போது, நாம் ஏன் இவ்வளவு அதிகமாகக் கொடுக்க வேண்டும்?