அணுக்கழிவு

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 3) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

செர்னோபில் அணுவிபத்தின் 35வது நினைவுதினம் ஏப்ரல் 26,2021

தாழப் பறந்திடும் மேகம் – 2 தொடரின் முதல் இரண்டு பாகங்களை கீழே உள்ள இணைப்புகளில் படிக்கவும்.


தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 1) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.

தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 2) அணுக்கழிவு – ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து.


இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு புதிய ஒருமித்த கருத்துகள் உலகம் முழுவதும் உருவாகி வருகிறது. பாரிஸில் உள்ள அணுசக்தி அமைப்பின் (Nuclear Energy Agency -NEA) குடையின் கீழ், 13 நாடுகளைச் சேர்ந்த 17 அமைப்புகள் 2011-ல் ஒன்றிணைந்து தலைமுறைகள் முழுவதும் பதிவுகள், அறிவு மற்றும் நினைவகங்களைப் பாதுகாத்தல் (Preservation of Records, Knowledge and Memory – R.K &M) என்ற முன்முயற்சியை உருவாக்கியிருக்கின்றன. 

இந்த முயற்சிகளில் ஒரு மைல்கல்லாக பிரான்சின் வெர்டூன் (Verdun, France) நகரில் 2014-ம் ஆண்டில் நடந்த மாநாட்டில், எதிர்கால சந்ததியினரை எச்சரிக்க அணுக்கழிவு தளத்திற்கு ஏதேனும் ஒரு அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. அந்த அடையாளத்தில் அங்கு புதைக்கப்பட்டவை பற்றிய அடிப்படை தகவல்கள் இருக்க வேண்டும், உணர்ச்சிவசப்பட்ட செய்திகளை மட்டும் வைத்திருக்கக்கூடாது என்று கூறப்பட்டது. இந்த தகவல்கள் உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் காப்பகப்படுத்தப்பட வேண்டுமென்றும் அப்படியென்றால்தான் அது ஒருபோதும் மனிதர்களால் மறக்கப்படாத வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டன.

ஆனால் என்ன செய்தி எழுதப்பட வேண்டும், அடையாள சின்னங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதில் இன்னும் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. உண்மையில் எதிர்காலத்துடன் பேசுவதற்கு இப்போது எந்தவித உத்திரவாதமான வழிகளும் இல்லையென்பதால் இந்த முயற்சிகளை பற்றிய அச்சம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறது. 

நினைவுச் சின்னங்கள் நிலைத்து நிற்பதற்கான உத்திரவாதம் இல்லை

இங்கிலாந்தின் கதிரியக்க கழிவு மேலாண்மை இயக்குநரகத்தின் (Radioactive Waste Management Directorate-RWMD) சைமன் விஸ்பே (Simon Wisbey) கூற்றுப்படி, எந்தவொரு அடையாளங்களோ அல்லது நினைவு சின்னங்களோ அடுத்துவரும் 10,000 வருடங்களுக்கு நிலைத்து நிற்கும் என்பதற்கும் அவை அடுத்த வரக்கூடிய எதிர்கால தலைமுறையினரால் அகற்றப்படாது என்பதற்கும் எந்தவித உத்திரவாதமும் இல்லை. அதேபோல அடுத்து வரக்கூடிய மனித நாகரிகங்கள் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு எழுதக்கூடிய செய்திகள் நம்மிடம் இல்லை. இப்போது எளிமையாகக்கூட அதை சொல்வதற்கு, கற்பனை செய்துகூட உருவாக்க முடியாத சிக்கல் இருப்பதாகக் கூறுகிறார்.

அணுக்கழிவு தளத்திற்கான மாதிரி வரைபடங்களில் ஒன்று

வரைபடத்தை வலமிருந்து இடமாக பார்த்து விட்டால்…

உதாரணமாக ஒரு மனிதன் கதிரியக்கக் கழிவுகள் நிரம்பிய பீப்பாய் வரை நடந்து செல்வது, அதன்பின்  அவன் நோய்வாய்ப்படுவது போல ஒரு வரைபடம் வரையலாம். ஆனால் அதை அவர்கள் பின்னோக்கிப் படித்தால் ஒரு நோய்வாய்ப்பட்ட மனிதன் ஒரு பீப்பாய் கழிவு வரை நடந்து சென்றதால் நோயிலிருந்து குணமடைகிறான் என்று தவறாக புரிந்துகொள்வார்கள் என்று விஸ்பே கூறுகிறார். இன்றும்கூட பல சமூகங்கள் வலமிருந்து இடமாகப் படிக்கின்றன. தொலைதூர எதிர்காலத்தில் இதுபோன்ற எச்சரிக்கைகளை மக்கள் எவ்வாறு விளங்கிக்கொள்வார்கள் என்பதை நாங்கள் இப்போதே அறிய முடியாது என்கிறார். 

சுனாமி எச்சரிக்கையைக் கொடுக்கும் ஜப்பானின் கல்வெட்டு சித்திரங்கள்

ஒரு  ஆய்வில் ஜப்பானிய சுனாமி கற்களின் செயல்திறனை ஆய்வு செய்தனர். அதில் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட கல்வெட்டு சித்திரங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு கடலுக்கு அருகில் வீடுகளைக் கட்ட வேண்டாம் என்று எச்சரிக்கின்றன. ஆனால் தற்போதைய தலைமுறையின் கருத்துப்படி அந்த கற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தாலும் அவை கூறவரும் செய்தி பெரும்பாலும் புறக்கணிக்கபட்டதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

ஒரு மில்லியன் ஆண்டுக்கு நிலைத்து நிற்கும் மாணிக்கக் கல்

இப்படிப்பட்ட நினைவகங்களில் அதன் செய்தி பெட்டகங்களில் வைக்கப்படும் பதிவைப் பாதுகாப்பது கூட ஒரு சிக்கலான முறையாகும். ஏனெனில் குறுந்தகடுகள் மற்றும் கணினி நினைவகத்தின்  (CDs and hard drives) ஆயுட்காலம் சில ஆண்டுகளுக்கே நிலைக்கக்கூடியது. எனவே சார்டன், தொழில்துறையில் உபயோகப்படுத்தப்படும் நீல மாணிக்கக் கல்லால் ஆன இரண்டு மெல்லிய தகடுகளில் (Sapphire Disk) தகவல்களை  பொறிப்பதற்கு முயன்றார். அவரின் கருத்துக்களின்படி, தற்போது நீல மாணிக்கக் கற்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கக் கூடிய ஒரு தகவல் ஊடகமாக இருக்கலாம். ஆனால் இந்த எண்ணம் கூட  முட்டாள்தனத்திற்கு மிக அருகில்தான் இருக்கிறது என்று அவர் கூறுகிறார். “இது ஒரு மில்லியன் ஆண்டுகள் நீடிக்கலாம், ஆனால் பிரெஞ்சு அல்லது ஆங்கில மொழிகள் அப்போது வழக்கத்திலிருந்து மறைந்துவிட்டால் இதனால் ஒரு பயனும் இல்லை. இதைவிட துரதிருஷ்டவசமாக ஒரு நபர் அதை ஒரு சுத்தியலால் அடித்தாலோ அல்லது குப்பைத்தொட்டியில் வீசினாலோ அதன் நோக்கம் முற்றிலும் அழிந்துவிடும். எதுவும் என்றென்றும் நீடிக்காது என்பதுதான் மாறாத உண்மை என்கிறார் சார்டன்.

நீண்ட வருடங்களுக்கு தகவல்கள் நிலைத்துநிற்க மாணிக்க கற்களில் உருவாக்கப்படும் மென்தகடு

காலமற்ற செய்தியை உருவாக்க உறுதியான வழி இல்லை

காலமற்ற செய்தியை உருவாக்க உறுதியான வழி இல்லை என்ற அச்சம்தான் அணுசக்தி நிறுவனங்களை இந்த ஆய்வினை மிக முக்கியத்துவமான ஒன்றாக கருதக் கட்டாயப்படுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டில் பிரான்ஸ், வெர்டூன் நகரில் நடந்த மாநாட்டின் இரண்டாவது தீர்மானம் என்னவென்றால், “குறிப்புக்கள் மற்றும் செய்திகளுடன் தொலைதூர எதிர்காலத்திற்கு தகவல்களை “ஆணையிடும்” எந்த திட்டமும் தோல்வியடையும்” என்பதாகும்.

நாட்டார் வழி மரபைப் போன்ற நீடித்த கலாச்சாரத்தை உருவாக்குதல்  

ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எரிக் வான் ஹோவ் (Erik Van Hove, professor at the University of Antwerp) அந்த  மாநாட்டில், எதிர்கால தலைமுறையினரை அணுக்கழிவு சேகரித்து வைத்திருக்கும் இடங்களை கவனிக்க ஊக்குவிப்பதற்காக, அணுசக்தி கழிவு வைப்புத் தளத்தைச் சுற்றி நீடித்த கலாச்சாரத்தை உருவாக்குவதில் மனிதநேயம் கொண்டு அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று தனது கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

இந்த அறிவார்ந்த மாற்றத்தின் விளைவாக, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் உள்ள பெரும்பாலான அணுசக்தி நிர்வாகங்கள், குறிப்புகள் மற்றும் செய்திகளைத் தாண்டி சேகரிப்பு மையங்களைச் சுற்றி ஒரு உள்ளூர் கலாச்சாரத்தை உருவாக்கும் வழிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன் மூலம் சொல்லவரும் செய்திகளின் உள்ளடக்கங்களை மக்கள் நினைவில் உயிர்ப்புடன் வைத்திருக்கமுடியும் என உறுதிகொண்டுள்ளார். இந்த முறையை நம் தமிழகத்தில் வழிவழியாக சொல்லிவரும் புராதன செவிவழி கதைகளையோ, நாட்டார் பாடல்களையோ இதனுடன் ஒப்பிடலாம். ஒருவழியாக  பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் புவியியலாளர்கள் எல்லோரும் போராடிக்கொண்டிருக்கும்போது அதே நோக்கத்திற்காக அவர்கள் ஓவியர்கள், கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்களை நோக்கி வந்திருப்பதை அரோக்கியமான அணுகுமுறை என்று கருதலாம்.

கலைஞர்களிடையே நடத்தப்பட்ட போட்டி

இதன்படி கடந்த ஆண்டு, பிரான்சின் அணுக்கழிவுகளை கையாளும் ஆண்ட்ரா (Andra) நிறுவனமானது கலைஞர்களுக்காக ஒரு போட்டியைத் தொடங்கியது. 6,000 யூரோ ரொக்கப் பரிசு கொண்ட இந்த போட்டியானது அணுக்கழிவு சேமிப்பு மையத்தை மக்கள் நினைவுகளில் என்றென்றும் உயிர்ப்போடு  வைத்திருக்கக்கூடிய திட்டங்களை உருவாக்க நடத்தியது. அதன்படி அணுசக்தி நிறுவனம் (Nuclear Energy Agency-NEA) தத்துவவாதிகள் மற்றும் படைப்பாற்றல் மிக்கவர்களின் மூலம் முற்றிலும் புதிய சமூகத்தை உருவாக்க நினைக்கிறது. இதன்மூலம் என்றாவது ஒரு நாள் இந்த நோக்கத்திற்காக செயல்படுத்தக்கூடிய எண்ணங்களை, கருத்துகளை உருவாக்க இயலும் என நம்பிக்கை தெரிவிக்கின்றது. சமீபத்திய ஆண்டுகளில் இந்த வேலையில் ஈடுபடும் கலைஞர்களின் எண்ணிக்கை வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் பாமர மக்கள் முதற்கொன்று நிபுணர்கள் வரை ஒவ்வொருவரிடமும் அருமையான கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் ஏதாவதொன்று இந்த சிக்கலை தீர்த்து வைக்கலாம்.

அணுக்கழிவு தளத்திற்கு மேலே உருவாக்கப்பட்ட கண்காட்சி ஆய்வகம்

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இருக்கும் பிரபலமான ‘இக்ஸெல்லஸ் அகாடமி’ (Ixelles Academy) முன்னாள் பேராசிரியரான செசில் மசார்ட்(Cécile Massart) வார்ப்பியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர். இவர் 1994-ம் ஆண்டு அணுக்கழிவு சேகரிப்பைப் பற்றிய நினைவகம் ஒன்றை உருவாக்குவதை  உறுதி செய்வதற்கான வழிகளை தனது ஆய்வில் குறிப்பிட்டார். இதன்படி அணுக்கழிவு சேகரிப்பு தளத்திற்கு மேலே ஒரு படைப்பு “கண்காட்சி ஆய்வகத்தை” உருவாக்குவதே அவரது முக்கிய தீர்வாக வைத்தார். 

இந்த ஆய்வகத்தில் ஒவ்வொரு காலகட்டத்தைச் சார்ந்த தலைமுறையினரும் அணுசக்தி ஆபத்துக்களை விளக்கும் பல்வேறுவிதமான வழிகளைக் கண்டு விவரமறியலாம். அதேவேளையில் இந்த ஆய்வகத்தில் பல்வேறு துறைசார்ந்த கலைஞர்கள் பணியாற்ற வேண்டுமென்றும், ஆனால் அவர்களின் படைப்புகள் தற்காலிகமாக ஒரு குறிப்பிட்ட காலம்வரை மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறார். ஒவ்வொரு தலைமுறையினரிடமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அது கையளிக்கப்பட்டு முற்றிலும் புதியதாக புதுப்பிக்கப்படும். 

கலைஞர்களின் படைப்புகளால் அந்த கலைப்பூங்காவின் இடம் நிரம்பும்போது அடுத்துவரும் தலைமுறை கலைஞர்கள் பழைய படைப்புகளைக் முழுவதாக அழித்துவிட்டு முற்றிலும் புதிய படைப்புகளால் அதை நிரப்புவார்கள். இப்படி ஓவ்வொரு தலைமுறைக்கும் புதிய புதிய கலைப் படைப்புகளோடு அந்த கலைப்பூங்கா செயல்படும்போது நாம் சொல்ல விரும்பும் கருத்தும் தலைமுறை தலைமுறையாக கடத்திச் செல்லப்படும் என்கிறார்.

அடர் ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்ட கட்டிடம்

புகழ்பெற்ற டச்சுக் கலைஞரான ‘வில்லியம் வெர்ஸ்ட்ரேட்டன்’ (William Verstraeten) இதே போன்ற உள்ளூர் கலாச்சாரத்தில் ஈடுபடும் கலைகளின் கருத்துக்களையே கொண்டுள்ளார். இவர் 2001-ம் ஆண்டில், டச்சு கதிரியக்கக் கழிவு பதப்படுத்தும் நிறுவனமான கோவ்ராவா (COVRA) அதன் குறுகிய கால அணுசக்தி கழிவு மையத்தை மறுவடிவமைக்க தேர்வு செய்யப்பட்டார். 

அதன்படி நெதர்லாந்தில் நியுவ்டார்ப் (Nieuwdorp) என்னும் இடத்தில் சேகரிக்கப்பட்ட அணுக்கழிவுகளை குளிரவைப்பதற்காக வைக்கப்பட்டிருக்கும் கிடங்கின் கட்டிடத்தை பிரகாசமான அடர் ஆரஞ்சு வண்ணப்பூச்சுகளால் பூசினார். மேலும் கிடங்கின் வெளிப்புறசுவரில்   ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் சமன்பாடான E = mc2 என்ற சூத்திரத்தை வரைந்தார். அந்த கிடங்கின் மேல்தளத்தில்   ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கினார். அங்கிருக்கும் அணுக்கழிவுகள் பூமியின் ஆழத்தில் புதைக்கப்படுவதற்காக அங்கு கொண்டுவரப்பட்டவை அப்படி புதைக்கும்முன் அவற்றை குளிரவைப்பது அவசியம். இந்த அணுக்கழிவுகள் குளிர்வதற்கு தோராயமாக 100 ஆண்டுகள் ஆகலாம். அப்படி அந்த கிடங்கில் வைக்கப்பட்டிருக்கும் கழிவுகள் குளிர எடுத்துக்கொள்ளும் 100 ஆண்டுகளின் முடிவில் வெளிப்புறச் சுவரில் பூசப்பட்டிருக்கும் அடர் ஆரஞ்சு நிற வர்ணம் முழுமையாக வெண்மை நிறமாக மாறி வெளிறிப் போயிருக்கும். இந்த நிறமாற்றம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மறைமுகமாக அங்கு வாழும் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் என்று அவர் எண்ணி இத்தகைய வழியை செயல்படுத்தியிருக்கிறார்.

நெதர்லாந்தின் ‘நியுவ்டார்ப்’  (Nieuwdorp) மையத்தின் வடிவமைப்பு

“இந்த அருங்காட்சியகம் அதைப் பற்றிய பயத்தை விலக்கிவிட்டது அதற்கு சாட்சியாக நாங்கள் இப்போது ஒரு வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைப் பெறுகிறோம். ஏனென்றால் அங்கே ஒரு கருத்தை விளங்க வைக்கும் சாதகமான ஏதோவொன்று  இருக்கிறது என்று பார்வையாளர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்” என்று வெர்ஸ்ட்ரேட்டன் கூறுகிறார். 

நெதர்லாந்தின் ‘நியுவ்டார்ப்’  (Nieuwdorp) மையத்தின் வெளிப்பூச்சு காலமாற்றத்தால் எவ்வாறு மாறும் என்பதற்கான மாதிரி படம்

இந்த அருங்காட்சியகத்தை நெதர்லாந்தின் ராணி பீட்ரிக்ஸ் (Queen Beatrix of the Netherlands) திறந்து வைத்தார். வெர்ஸ்ட்ரேட்டன் இந்த அருங்காட்சியகம் பற்றிய கருத்தை கூறும்போது, அமெரிக்கர்கள் இப்படிப்பட்ட நினைவகங்களைப் பற்றி இதுவரை கொண்டிருக்கும் கருத்துக்கள் தவறானவையாக இருக்கக்கூடுமென்றும், ஏனெனில் இங்கு வரும் பார்வையாளர்கள் பார்வையில் இந்த தளம் மரியாதைக்குரிய இடமாக இருக்கலாம், எனவே அவர்கள் இத்தகைய முயற்சியையும் பரிசீலிக்கவேண்டும் என கூறுகிறார். அணுக்கழிவுகள் மிக ஆபத்தானவை அதை  இந்த அருங்காட்சியகம் மக்களுக்கு தொடர்ந்து உணர்த்துவதால் அதை எங்களால் இந்த விடயத்தில் சாதிக்க முடிந்தவற்றின் நினைவுச்சின்னமாக கருதவேண்டியிருக்கிறது என்கிறார்.

தொடரும்…

தாழப் பறந்திடும் மேகம் – 2 தொடரின் இறுதி பாகத்தை கீழ்காணும் இணைப்பில் படிக்கலாம்.
தாழப் பறந்திடும் மேகம் -2 (பாகம் 4) அணுக்கழிவு -ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் நிலைத்துநிற்கும் ஆபத்து

– அருண்குமார் தங்கராஜ், Madras Review

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *