ஓ.பி.சி பேராசிரியர்கள் இட ஒதுக்கீடு

40 பல்கலைக்கழகங்கள், 2498 பேராசிரியர்கள்..9 பேர் மட்டுமே ஓ.பி.சி..மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் அநீதி!

இந்தியா முழுவதும் இருக்கும் 40 மத்திய பல்கலைக்கழகங்களில் OBC இட ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமாக வெறும் 9 பேர் மட்டுமே பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சிக்குரிய தகவல் வெளிவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தி எழுப்பப்பட்ட கேள்வியின் வாயிலாக இந்த விவரம் வெளிவந்துள்ளது. மேலும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), டெல்லி பல்கலைக்கழகம் (DU), பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BNU) மற்றும் அலகாபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் OBC இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு பேராசிரியர் கூட ஒதுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

ஒதுக்கப்பட்ட இடங்களும், நிரப்பப்பட்ட இடங்களும்

மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் பணியிடங்களில் பிற்படுத்தபட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 313 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் 9 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். மீதி 304 இடங்களும் காலியாகத் நிரப்பப்படாமலே வைக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் இணை பேராசிரியர்கள் பணியிடங்களில் 735 இடங்கள் OBC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் 38 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மீதி 697 இடங்கள் நிரப்பப்படவில்லை.

உதவி பேராசிரியர் பணியிடங்களில் 2232 இடங்கள் OBC பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 1327 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். 905 பணியிடங்கள் நிரப்பப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்வி

ஹைதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் ஆய்வுப் படிப்பினை மேற்கொள்ளும் கிரன் குமார் எனும் மாணவர் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர் பணியிடங்களில் ஓ.பி.சி பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லை என்பதை உணர்ந்து, ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட்ட பேராசிரியர் பணியிடங்களின் சரியான எண்ணிக்கையை தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் மற்றும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் எத்தனை பேர் பணியில் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை கேட்டிருந்தார். தற்போது அவருக்கு கிடைத்திருக்கும் பதிலில், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சட்டப்படி ஒதுக்கப்பட்ட இடங்களை அளிக்காமல் மோசடி நிகழ்த்தப்பட்டிருப்பது எண்ணிக்கைகளுடன் வெளிவந்திருக்கிறது.

உண்மையில் ஒதுக்கப்பட்டிருக்கப்பட வேண்டிய இடங்கள்

இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால் மத்திய பல்கலைகழகங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஒதுக்கப்பட்ட இடங்களே 27% சதவீதம் என்ற அளவில் ஒதுக்கப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. குறைவாக ஒதுக்கப்பட்ட இடங்களும் நிரப்பப்படாமலே வைத்திருக்கப்படுகிறது.

பேராசிரியர் பணியிடங்கள் (Professor)

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மொத்த பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 2498. அதில் 27 சதவீத இடஒதுக்கீட்டின்படி பார்த்தால் 674 பணிகள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிரன் குமாருக்கு UGC அளித்திருக்கும் பதிலின் மூலமாக 313 இடங்களே ஒதுக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. இதுவே மிகப்பெரிய முறைகேடல்லவா! வெறும் 313 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்த போதும், அதில் வெறும் 9 பேர் மட்டுமே இந்தியா முழுவதும் நியமிக்கப்பட்டுள்ளனர். 674 பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டிய இடத்தில் வெறும் 9 பேர் என்பது ஒரு மிகப்பெரிய ஊழல் என்றுதான் சொல்ல வேண்டும்.

இணை பேராசிரியர்கள் (Associate Professors)

அடுத்ததாக மொத்த இணைப் பேராசிரியர்களின் எண்ணிக்கை 5011. அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டின் படி, 1352 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் RTI பதிலில் வெறும் 735 இடங்கள் தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலும் வெறும் 38 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.

உதவி பேராசிரியர்கள் (Assistant Professors)

அதேபோல் உதவி பேராசிரியர் இடங்கள் மொத்தம் 10,830. அதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 2924 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒதுக்கீடு செய்தது 2232 இடங்கள்தான். அதிலும் நிரப்பபட்டது வெறும் 1327 மட்டுமே.

பணிமொத்த பணியிடங்கள்ஒதுக்கப்பட
வேண்டிய இடங்கள் (27%)
ஒதுக்கப்பட்ட இடங்கள்நிரப்பப்பட்ட இடங்கள்
பேராசிரியர்24986743139
இணை பேராசிரியர்5011135273538
உதவி பேராசிரியர்10,830292422321327

அரசியலமைப்பு சட்ட விதி மீறல்

OBC பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காத இந்த நியமனங்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை மீறிய சட்டவிரோத செயலாகும். உதவி பேராசிரியர் பணிக்குக் கூட 27 சதவீத இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. ஆனால் அதன்பின் அடுத்தடுத்த பதவிகளான இணை பேராசியர் மற்றும் பேராசிரியர் பணிகளுக்கான பதவி உயர்வு விவகாரங்களிலும், நிர்வாக ரீதியாக பல முறைகேடுகள் நடைபெற்று பிற்படுத்தபட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் மதிப்பெண்களும் குறைக்கப்பட்டு, பதவி உயர்வுகள் கிடைத்திடாமல் செய்யப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் இப்பொழுது வலுவடைந்துள்ளது.

உடனடியாக பிற்படுத்தப்பட்டவர்களின் 27% சதவீத இடஒதுக்கீட்டினைப் பின்பற்றி பேராசிரியர், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை OBC பிரிவிற்கு முழுமையாக ஒதுக்கி, எண்ணிக்கை முறையாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அதேபோல் ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் உடனடியாக பணி நியமனங்களையும் செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது.

மத்திய பல்கலைக்கழகத்தில் பிற்படுத்தப்பட்ட(OBC) மற்றும் பட்டியல் பிரிவு(SC, ST) மாணவர்கள் உளவியல் தாக்குதல்கள் மற்றும் சாதி ரீதியான ஒத்துக்குதல்கள் ஆகியவற்றுக்கு உள்ளாகி தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு பேராசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படாததும் முக்கியமான காரணமாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *