நரேந்திர மோடி மயில்

கடவுளின் செயலா பொருளாதார வீழ்ச்சி? கொரோனாவுக்கு முன்பும், இப்போதும் ஒரு பார்வை

கடந்த 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உற்பத்தி மதிப்பு (GDP) குறித்த விவரங்களை இந்திய அரசின் தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் அமைச்சகம் இணைந்து வெளியிட்டுள்ளது. அதில் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரையிலான காலத்தில் இந்தியாவில் எவ்வளவு உற்பத்தி நிகழ்ந்துள்ளது என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன.

அதனடிப்படையில் மொத்த உற்பத்தி மதிப்பான ஜி.டி.பி(GDP) மதிப்பு கடந்த ஆண்டின் முதல் காலாண்டு (2019 ஏப்ரல்-ஜூன்) மதிப்பைக் காட்டிலும் இந்த ஆண்டு 23.9% சதவீதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது GDP வளர்ச்சி விகிதமானது மைனஸ் 23.9% சதவீதமாக மாறியிருக்கிறது. இது கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சந்திக்காத மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.

தில்லி சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியர் அருண்குமார் நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அமைப்புசாரா தொழில்களில் (Unorganised Sector) ஏற்பட்டுள்ள இழப்புகளையும் கணக்கில் சேர்த்தால் பொருளாதார சரிவின் விகிதம் என்பது மைனஸ் 40% என்ற அளவிற்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மொத்த உற்பத்தியான GDP-யின் மதிப்பு 35.35 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும், அது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 26.90 லட்சம் கோடி ரூபாயாக குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைகள் வாரியாக பொருளாதார வீழ்ச்சி

மேலும் துறைகள் வாரியாக GDP வளர்ச்சி விகிதம் எவ்வளவு குறைந்துள்ளது என்ற விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

சுரங்கத் துறை – 23.8%
உற்பத்தித் துறை – 39.3%
கட்டுமானத்துறை – 50.3%
வர்த்தகம், விடுதி, போக்குவரத்து, தொலைதொடர்பு – 47%
நிதிசார் துறை – 5.3%
பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர சேவைகள் – 10.3%

கடவுளின் செயல்தான் காரணமா?

இந்தியாவின் GDP வீழ்ச்சிக்கு கொரோனா தாக்குதல்தான் காரணமாக ஒன்றிய அரசினால் கூறப்படுகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபோது 2014-15 ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் GDP வளர்ச்சி 8.7% சதவீதமாக இருந்தது. பின்னர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு அறிமுகம் போன்ற பல்வேறு காரணங்களால் பல இறக்கங்களை சந்தித்து வந்த ஜி.டி.பி வளர்ச்சியின் விகிதமானது கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே தொடர்ந்து வீழ்ச்சியினை சந்தித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை 8% GDP வளர்ச்சி என்ற அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இருந்த இந்தியப் பொருளாதாரம், மிக மோசமான சரிவினை சமீப ஆண்டுகளில் சந்தித்து வருகிறது. கொரோனா என்ற நுண்கிருமி கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே கார் விற்பன அளவானது 32% சதவீதம் குறைந்திருந்தது. அது குறித்து கருத்து தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், மக்கள் OLA, UBER போன்ற கால்டாக்சிகளை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால் கார் விற்பனை குறைந்து விட்டது என்று பதிலளித்தார். அது எதிர்க்கட்சிகளாலும், பொருளாதார நிபுணர்களாலும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இப்போதும் பொருளாதார வீழ்ச்சி குறித்து பேசும் போது, கொரோனாவை கைகாட்டி ”கடவுளின் செயல்(It is an act of God)” என்று தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு முன்பான பொருளாதார வீழ்ச்சி

2017-18 நிதியாண்டின் இறுதி காலாண்டில் 8.2 சதவீதமாக இருந்த ஜி.டி.பி வளர்ச்சி விகிதம், அடுத்த நிதியாண்டான 2018-19ன் முதல் காலாண்டில் 7.1% சதவீதமாகக் குறைந்தது. பின்னர் அடுத்தடுத்த காலாண்டுகளில் மிகப்பெரும் சரிவினை சந்தித்து கொரோனா ஊரடங்கு காலம் தொடங்கும் முன்பே 2019-20 நிதியாண்டின் இறுதி காலாண்டில் (அதாவது 2020 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலம்) 3.1 சதவீதமாகக் குறைந்திருந்தது.

எனவே கொரோனாவுக்கு முன்பே இந்தியாவின் பொருளாதாரம் சரிவுப் பாதையில் வீழ்ச்சியினை சந்தித்திருந்ததையே இந்த விவரங்கள் காட்டுகின்றன. எனவே பொருளாதார வீழ்ச்சிக்கான, ஒட்டுமொத்த நிர்வாகக் காரணங்களைக் குறித்துப் பேசாமல், கொரோனாவை மட்டுமே நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அவர்கள் கைகாட்ட முயல்வது சரியான அணுகுமுறையாக இல்லை.

உலகத்திலேயே அதிக வீழ்ச்சியை சந்தித்திருக்கும் இந்தியா

கொரோனா பாதிப்பினால் உலகின் பல நாடுகள் பொருளாதாரத்தில் வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும், மற்ற அனைத்து நாடுகளைக் காட்டிலும் இந்தியாவின் GDP மிகப்பெரும் வீழ்ச்சியினை சந்தித்திருக்கிறது.

ஜப்பானின் GDP மதிப்பு 7.6% சதவீதமும், ஜெர்மனியின் GDP மதிப்பு 10.1 சதவீதமும், கனடாவின் GDP 12 சதவீதமும் குறைந்திருக்கும் நிலையில் இந்தியாவின் GDP மதிப்போ 23.9% குறைந்துள்ளது. சீனாவின் GDP வளர்ச்சி விகிதம் 3.2 சதவீதம் உயர்வினை சந்தித்துள்ளது.

அழிக்கப்படுகிறதா முறைசார் தொழில்கள்? எதிர்க்கட்சிகளின் பார்வை

இந்த பொருளாதார சரிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், நரேந்திர மோடி அரசாங்கத்தின் கட்டுப்பாடற்ற, அக்கறையற்ற அணுகுமுறைக்கு நாடு பெரும் விலையைக் கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். விவசாயம், மீன்பிடித்துறை, வனத்துறை ஆகிய துறைகளைத் தவிர அனைத்து துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பொருளாதார சரிவினை கடவுளின் செயல் என்று சொன்ன நிர்மலா சீத்தாரமன் விவசாயிகளுக்கும், விவசாயிகளை ஆசீர்வதித்த கடவுளுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதுநாள்வரையில் போலியான சித்தரிப்புகளை காட்டிவந்த மோடியின் அரசாங்கம் தற்போது CSO மதிப்பீடுகளினால் அம்பலப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி தெரிவிக்கையில் ”பணமதிப்பிழப்பு, GST வரி, ஊரடங்கு போன்றவற்றை முறைசாரா தொழில்களை (informal sector) அழிக்கும் நோக்குடன் மோடி அரசு நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக பாஜக முறைசாரா தொழில்களின் மீது தாக்குதலை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் 90% சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பினை வழங்கி வருவது முறைசாரா தொழில்கள்தான் என்றும், அவை உடைக்கப்படும் பட்சத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பிழப்பு, GST, முன் திட்டமிடப்படாத ஊரடங்கு ஆகியவை இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. இப்பிரச்சினைகளை சரிசெய்ய அரசின் பொது முதலீட்டினை அதிகப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் மோடி அரசு தனியார் கார்ப்பரேட் முதலீடுகளுக்கு தேசத்தின் சொத்துக்களை தாரை வார்ப்பதிலேயே குறியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, கொரோனா தொற்று வளர்ச்சி வேகத்தில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும், இப்போது பொருளாதார சரிவில் முதலிடத்திற்கு வந்திருப்பதாகவும், இதன் காரணாமாக மக்களின் துயரமும், வேதனையும் அதிகரித்து, வாழ்வாதாரம் அழிந்து வருவதாகவும், ஆனால் மோடியோ பொம்மைகள் தயாரிப்பதைப் பற்றி அறிவுறுத்துவதில் பிசியாக இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *