சமூக ஊடகங்கள் இன்றைய இளைஞர்களுக்கு இன்றியமையாத கருவியாக இருக்கிறது. இது உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைவதற்கு உதவுகிறது. ஆனால் அதேசமயம் சுற்றியுள்ள மக்களிடமிருந்து ஒரு இடைவெளியையும் உருவாக்கியுள்ளது. சமூக ஊடகங்கள் பெரும்பாலும் இளைய வயதினர் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் பெரும்பாலான நேரத்தை சமூக ஊடகங்களில் வெவ்வேறு நோக்கங்களுக்காக செலவு செய்கிறார்கள். பல பயனர்கள் ஒரு தளத்தினை பொதுவாக பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யும் சமூக ஊடகங்கள், அத்தளத்தின் வழியே ஒரு நபரின் உணர்வுகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்த உதவுகிறது.
ஆரோக்கியமான சமூக வாழ்க்கைக்கு ’தொடர்பு’ என்பது முதன்மையானது. சமூக ஊடகங்கள் வாயிலாக மக்கள் தங்கள் கருத்துகளையும், உணர்வுகளையும் எளிதில் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளத்தைப் பெறுகிறார்கள். ஆனால் அதே சமூக ஊடகங்கள் மன அழுத்தம், பதட்டம், அதீத சிந்தனை, மனச்சோர்வு உள்ளிட்ட பலவற்றையும் சேர்த்தே உருவாக்குகின்றன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கருத்துப்படி, ஆரோக்கியமான மனநலன் என்பது ஒரு நல்வாழ்க்கையைக் குறிக்கும். அதில் தனிநபர் தனது திறன்களை உணர்ந்து, வாழ்க்கையின் சாதாரண அழுத்தங்களை சமாளித்து உற்பத்தி மற்றும் பலனளிக்கும் ஒரு பங்களிப்பை அவரது சமூகத்திற்கு செய்ய முடியும். சமூக ஊடகங்கள் ஒரு மனிதனின் ஆரோக்கிய மனநலனில் சில குறிப்பிடத்தக்க விளைவுகளை உருவாக்குகின்றன. அந்த விளைவுகள் பல சாதகமான மற்றும் பாதகமான அம்சங்களையும் சேர்த்தே கொண்டுள்ளது.
சமூக ஊடகங்களில் அதிகமாக ஒருவர் செலவு செய்யும் நேரம் அந்த நபரை தனிமையில் வழிநடத்துகிறது. மெய்நிகர்(virtual) உலகில் மக்கள் வாழ்வதற்கான விளைவினை சமூக ஊடகங்கள் உருவாக்குவதால், உண்மையான சமூகத்திலிருந்து மக்களை துண்டித்தும் விடுகிறது.
சமூக ஊடகங்களின் சாதகமான அம்சங்கள்
எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் தொடர்புகொள்வதை எளிதாக்குகிறது.
மேலும் உலகம் முழுவதும் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உடனுக்குடன் இருக்கின்ற இடத்திலேயே அறிந்துக்கொள்ள உதவுகிறது.
எந்தவொரு முக்கியமான சிக்கல்களிலும் ஒருவர் தனது குரலை பதிவு செய்யவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு தளத்தை சமூக ஊடகங்கள் நமக்கு வழங்குகின்றன.
நம் வணிகத்தையும், புதிய யோசனைகளையும் உலகத்துடன் விளம்பரப்படுத்த உதவுகிறது.
வீட்டிலிருந்து தொலைதூர முறையில் அல்லது பள்ளிகளுக்கு நேரடியாக செல்லாமல் படிப்பதற்கும் இது உதவுகிறது.
இது தனிமையாக உணர்வதைக் குறைத்து பல்வேறு பொழுதுபோக்குகளை திரைப்படங்கள், பாடல்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்ற வடிவங்களில் நமக்கு வழங்குகிறது.
சமூக ஊடகத்தின் பாதகமான அம்சங்கள்:
நம் தனிமை உணர்வினைக் குறைக்கும் அதே சமூக ஊடகங்கள் தான், நம்மை சமூக விலகலுக்கும் இட்டுச் செல்கிறது. மேலும் நம்முடன் அருகில் இருப்பவர்களுடனான நேருக்கு நேர் தொடர்பு கொள்ளும் தன்மையினை குறைக்கிறது.
இணைய அச்சுறுத்தல்(Cyberbullying)
கடந்த 27 அக்டோபர் 2018, டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த கட்டுரை, இந்திய பெற்றோர்களில் 37 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகள் இணையவழி அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகக் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டிருக்கிறது.
சைபர் மிரட்டலால் பாதிக்கப்பட்டவர்கள் மனச்சோர்வு, தனிமைப்படுத்தல், பதட்டம், மனஅழுத்தம் போன்ற உளவியல் சிக்கல்களை சந்திக்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைகளுக்குக் கூட தள்ளப்படுகிறார்கள்.
பின்தொடர்தல்(stalking)
பல ஆண்டுகளாக Stalking என்ற சொல் இரைக்காக விலங்குகளை வேட்டையாடுவதற்கு பிந்தொடரும் வேட்டைக்காரர்களின் செயல்பாட்டை குறிக்கிறது.
சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை Stalking என்பது ஒருவருக்கு மற்றொருவர் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் வழியாக வெளிப்படையான அல்லது மறைமுகமான அச்சுறுத்தல்களை அளிப்பது மற்றும் இணையத்தைப் பயன்படுத்தி பாலியல் ரீதியாக அச்சுறுத்துவது என்பதைக் குறிக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பொதுவில் இன்னொருவர் எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதன் காரணமாக இத்தகைய பின்தொடர்தல் சமூக ஊடகங்களில் அதிகமாக இருக்கின்றன.
சமூக விலகல்
அரிஸ்டாட்டிலின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்று “மனிதர்கள் சமூக விலங்குகள்” என்று குறிப்பிடுகிறது. மனிதர்கள் தனிமையில் பிழைத்திருக்க முடியாது, ஏனெனில் ஒரு நபரின் மனநிலை என்பதே அவர் சமூகத்தின் பிற நபர்களுடன் கொண்டுள்ள தொடர்பு மூலமே தீர்மானிக்கப்படுகிறது. இது நம் மனநலன் மற்றும் உடல்நலன் இரண்டுடனும் நேரடியாகத் தொடர்புடையது. சமூக விலகல் பல்வேறு சந்தர்ப்பங்களில் மன ரீதியான அழுத்தங்களை அதிகப்படுத்துவதுடன் அது தனிநபரின் உடல் நலனையும் சேர்த்தே அச்சுறுத்தி விடுகிறது.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம் (University of Pittsburgh) நடத்திய ஆய்வு ஒன்று ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரத்திற்கு மேல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோர், ஒரு நாளைக்கு 30 நிமிடத்திற்குள்ளாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை விட இரண்டு மடங்கிற்கு அதிகமாக தனிமையையும், சமூக விலகலையும் உணர்வதாக கண்டறிந்துள்ளது.
இணையதளத்திற்கு அடிமையாதல்
இன்று சமூக ஊடகங்களை தவிர்ப்பது மிகவும் கடினமான ஒன்றுதான். சமூக ஊடகங்கள் இளைஞர்களிடையே அதிகம் பேசக்கூடிய தலைப்புகளில் ஒன்றாகும். பெரும்பாலான இளைஞர்கள் இணையத்திற்கு அடிமையாகத்தான் உள்ளனர். டீனேஜர்கள் கையில் ஒரு மொபைல் போன் வைத்துகொண்டு நீண்டநேரம் சமூக ஊடகங்களில் உலவுவது ஒரு போதைப்பழக்கத்தினைப் போல மாறிவிடுகிறது. இது மெல்ல மெல்ல அவர்களின் மன ஆரோக்கியம், அன்றாட நடைமுறை செயல்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியையும் பாதிக்கத் தொடங்குகிறது.
உலக அளவில் 210 மில்லியன் இளைஞர்கள் சமூக வலைதள பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சமூக வலைதளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதன் காரணமாக 10 இல் 4 இளைஞர்கள் தூக்க குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதள மோகத்தின் விளைவால் விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், 3இல் 1 விவாகரத்து அமெரிக்காவில் சமூக வலைதளங்கள் காரணமாக நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்:
தெரியாத நபர்களுடன் சமூக ஊடகங்களில் தொடர்பில் இருக்கும்போது இளம் வயதினர் கவனமாக இருத்தல் வேண்டும். இது இணைய அச்சுறுத்தலிலிருந்து(Cyberbullying) ஒருவரைக் காப்பதோடு, தேவையற்ற மன உளைச்சலையும் தவிர்க்க உதவுகிறது.
பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான உறவு நட்பாக இருந்தால் மட்டுமே குழந்தைகள் சுதந்திரமாக எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியும். அதுவே மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வளர்க்க உதவும்.
சமூக ஊடகங்களின் பயன்பாட்டை இளைஞர்கள் கட்டுப்பாடான அளவில் வைத்திருக்க வேண்டும்.
நன்றி: Countercurrents