ராசமாணிக்கனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
மாணிக்கம் – தாயாரம்மாள் தம்பதிக்கு 1907-ம் ஆண்டு மார்ச் மாதம் 12ம் நாள் மா.இராசமாணிக்கனார் பிறந்தார். இளம் வயதில் தந்தை மரணம் அடைந்ததால் மாணிக்கனார் அவரது அண்ணன் ராமகிருட்டிணன் பொறுப்பில் வளர்ந்தார்.
குடும்ப வறுமை காரணமாக நன்னிலத்தில் ஒரு தையல் கடையில், சிறுவனாக இருந்த தம்பி இராசமாணிக்கனாரை வேலைக்கு சேர்த்து விட்டார் அண்ணன்.
வறுமையிலும் கல்வி பயில விரும்பினார்
ஒரு நாள் தஞ்சை புனித பீட்டர் பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து தான் படிக்க விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார் இராசமாணிக்கனார்.
அப்பள்ளியில் ஆசிரியராக இருந்த கரந்தை கவிஞர் இரா.வெங்கடாச்சலம், இராசமாணிக்கனாரின் அறிவாற்றலைக் கண்டு வியந்து, அவரை கரந்தை உமாமகேசுவரனார், நா.மு.வேங்கடசாமி நாட்டார், ரா.ராகவையங்கார் ஆகிய அறிஞர் பெருமக்களிடம் அனுப்பி கல்வி பயிலச் செய்தார்.
ஆசிரியராகி ஆய்வாளராக உயர்ந்தார்
1928-ம் ஆண்டு சென்னை வந்த இராசமாணிக்கனார், வண்ணாரப்பேட்டையில் இருந்த தியாகராயர் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 1935-ம் ஆண்டு வித்துவான் தேர்வில் தேறினார். 1939-ம் ஆண்டு பி.ஓ.எல். பட்டம் பெற்றார். 1945-ம் ஆண்டு ‘பெரியபுராண ஆராய்ச்சி’ என்ற ஆய்வுக் கட்டுரைக்காக எம்.ஓ.எல். பட்டம் பெற்றார். 1951-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
இவரின் இளமைக் காலத்தில் சித்தர்களின் பாடல்கள், வடலூர் வள்ளலாரின் திருஅருட்பா போன்றவைகளை ஆழ்ந்து படித்தார்.
சுயமரியாதை இயக்கத்தின் மீது கொண்ட பற்று
தியாகராயர் பள்ளியிலும், முத்தியாலுப்பேட்டை பள்ளியிலும் பணியாற்றிய காலத்தில் சுயமரியாதை இயக்கத்தில் பற்று கொண்ட இவர் சுயமரியாதை சார் நூல்களையும் எழுதியுள்ளார்.
சுயமரியாதை இயக்க கொள்கையான சாதி ஒழிப்பு குறித்து கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தமிழர்களின் திருமண இல்லங்களில் சடங்கு சம்பிரதாயங்களுடன், ஓமம் வளர்த்துச் செய்யும் சடங்குத் திருமணங்களை ஏற்க மறுத்தார்.
தமிழர் திருமணம்
தமிழர் நல்வாழ்க்கைக் கழகம் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழர் திருமண நூல் என்ற நூலை எழுதித் தமிழ் அறிஞர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
பேராசிரியாக
1947 தொடங்கி 1953 வரை சென்னை விவேகானந்தா கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார்.
1953-ம் ஆண்டில் மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்று தமிழ்த் துறை தலைவராகவும் விளங்கினார். 1959 தொடக்கம் 1967 வரை சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ்த் துறைத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.
பாராட்டுகளும் பட்டங்களும்
சைவ சித்தாந்தம் குறித்த அவரின் ஆய்வுகளும், கட்டுரைகளும், நூல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதனால் மதுரை ஆதீனத்திடமிருந்து 1955-ம் ஆண்டு ‘ஆராய்ச்சிக் கலைஞர்’ என்ற பட்டம் பெற்றார். தருமபுரம் ஆதீனம் 1963-ம் ஆண்டு ‘சைவ இலக்கியப் பேரறிஞர்’ என்று பட்டம் வழங்கி பாராட்டி மகிழ்ந்தார்.
எழுதிய நூல்கள்
தொடர்ந்து அவர் தமிழ், வரலாறு, இலக்கியம், சைவம் போன்ற பல ஆய்வு நூல்களை எழுதியிருக்கிறார்.
பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், மொகஞ்சதாரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ்மொழி இலக்கிய வரலாறு, சோழர் வரலாறு, தமிழ் இனம், தமிழக ஆட்சி, தமிழ் அமுதம், இலக்கிய அமுதம், தமிழ்நாட்டு வடஎல்லை, தமிழகக் கலைகள், புதிய தமிழகம், சிலப்பதிகாரக் காட்சிகள், சேக்கிழார், சேக்கிழார் ஆராய்ச்சி, சைவ சமயம், சைவ சமய வளர்ச்சி, பெரியபுராண ஆராய்ச்சி, நாற்பெரும் புலவர்கள் என்று பல நூல்கள் எழுதியிருக்கிறார்.
ராசமாணிக்காணாரின் நூல்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒரு நூல் ‘பத்துப்பாட்டு ஆராய்ச்சி’ ஆகும்.
உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை
இவரின் பணியைப் பாராட்டிய தமிழக அரசு 1966-ல் மலேசியாவில் நடைபெற்ற முதலாம் உலகத் தமிழ் மாநாட்டிற்கு தேர்ந்தெடுத்தது. அங்கு இவர் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரையான ’சங்ககாலத் தமிழ்ச் சமுதாயம்’ அறிஞர்களால் ஏற்கப்பட்டது.
பேராசிரியர் டாக்டர் மா.இராசமாணிக்கனார் அவர்கள் 1967-ம் ஆண்டு மே மாதம் 26-ம் நாள் மரணம் அடைந்தார்.
மரணத்திற்குப் பிறகே வெளியிடப்பட்ட பத்துப்பாட்டு உரை
இவரது பத்துப்பாட்டு உரை நூலானது, இவரது மறைவிற்குப் பிறகு நே.து.சுந்தரவடிவேலு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தபோது வெளியிடப்பட்டது.
இது குறித்து முனைவர் நே.து.சுந்தரவடிவேலு குறிப்பிடும்போது,
எதிர் நீச்சலிட்டு தம்மை வளர்த்துக் கொண்டாற்போலவே தமிழ்ச் சமுதாயத்தையும் வளர்க்கப் பாடுபட்டவர் இராசமாணிக்கனார் என்றும், காக்கை பிடிக்கத் தெரியாத உண்மைத் தமிழராக இருந்த காரணத்தால் ரீடர் பதவியிலேயே இருந்தார் என்றும், இதனை தமிழ்ச் சமுதாயத்திற்குக் களங்கமாகவும் தாம் சிரமப்பட்டு எழுதிய பத்துப்பாட்டு உரையை வெளியிட வேண்டி தாம் பணியாற்றிய சென்னைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைத்ததற்கு பதில் இராசமாணிக்கனாரே வெளியிட்டிருந்தால் பணமாவது கிடைத்திருக்கும் என்றும், சென்னைப் பல்கலைக் கழகம் இவர் எழுதிய பத்துப்பாட்டு உரை நூலை யாரும் காணாத வண்ணம் பூட்டி வைத்து விட்டது என்றும், பிறகு பதவியிலிருக்கும் போதே இராசமாணிக்கனார் மாரடைப்பால் இறந்தார் என்றும் குறிப்பிடுகின்றார்.