ஜெய்சங்கர் வங்கதேசம்

வலுப்படும் இந்திய- வங்கதேச உறவு; இந்தோ-பசுபிக் நாற்தரப்பு கூட்டணியுடன் (QUAD) இணையும் வங்கதேசம்?

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்று வந்துள்ளார். கடந்த 4-ம் தேதி டாக்கா சென்ற அவர், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அந்நாட்டின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அப்துல் மாமேன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

எதிர்வரும் 26-ம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசம் பயணம் குறித்தும் இச்சந்திப்பின் போது பேசப்பட்டது. 

வங்காள விரிகுடா பரப்பின் முக்கியமான அம்சம்

இச்சந்திப்பு குறித்து பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “இரு நாடுகளுக்கிடையே மிகச் சரியான இணைப்பு ஏற்பட்டால் இப்பிராந்தியத்தின் (தெற்காசியாவின்) பொருளியல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படும். இதற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு முக்கியமான அம்சமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வங்காள விரிகுடா தொடர்பில் ஜப்பான் இணைப்பு

மேலும் அவர், (வங்காள விரிகுடா பிராந்திய உறவு தொடர்பாக) “தங்களுடன் மூன்றாவது நாடொன்றை இணைப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது. மூன்றாம் நாடு என்ற விடயத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் என இரு நாடுகளுடனும் நல்லுறவிலுள்ள ஜப்பானின் பெயர் கணக்கில் கொள்ளப்பட்டது; ஜப்பானும் வங்காள விரிகுடாவுடன் இணைப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது” எனவும் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் வங்கதேசத்தை நில மற்றும் நீர் வழித்தடங்கள் மூலம் இணைக்கும் திட்டங்களுக்கு இரு நாடுகளுக்கிடையே முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வர்த்தகத் துறையில் நடந்த பேச்சுவார்த்தை

அமைச்சர் ஜெய்சங்கரின் வங்கதேச பயணைத்தையடுத்து, இந்திய வணிகத்துறை செயலாளர் அனூப் வதவான் வங்கதேசம் சென்றார். வங்கதேச வனிகத்துறை அமைச்சர் திப்பு முன்ஷியிடம் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகள் மற்றும் வர்த்தக கட்டமைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக துறைமுக கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்தும் பேசப்பட்டுள்ளது. 

ஹைட்ரோகார்பன் வள பரிமாற்றம்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தெற்காசிய எரிசக்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் குழுக் கூட்டத்தை தொடங்கி வைத்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்சவர்தன் ஸ்ரீரிங்ளா, இந்தியா- வங்கதேசத்துக்கு இடையேயான மின்சார/ எரிசக்தி வளப் பரிமாற்றம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது அவர் இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளின் ஹைட்ரோகார்பன் வள  வணிகத்தின் கூட்டு மதிப்பு 322.32 மில்லியன் அமெரிக்க டாலர் என குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து வங்கதேசத்திற்கு மின்சார பரிமாற்றமும், குழாய் வழியே டீசல் பரிமாற்றமும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

QUAD-ல் இணைகிறதா வங்கதேசம்?

கடந்த மாதத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு மற்றும் மொரிசியஸிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நாடுகள் அனைத்தினுடைய பயணத்தின் போதும் ‘கடற்பிராந்திய உறவு’ முக்கிய அம்சமாக விவாதிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளது. 

அமெரிக்கா-இந்தியா- ஜப்பான்- ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையேயான,  ‘(இந்தோ- பசுபிக் கடற்பிராந்திய) நாற்தரப்புக் கூட்டணி’ அமைக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அதை மையப்படுத்தியே தீர்மானிக்கப்பட்டு வருவதன் அங்கமாகவே இந்தியா- வங்கதேச உறவு பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *