ஜோதிராவ் பூலே

இந்தியாவின் சமூக மாற்றத்தின் முன்னோடி மகாத்மா ஜோதிராவ் பூலே

மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Radicals

“தற்போதைய சமூக முறையை மாற்ற வேண்டுமானால், பிறரைச் சார்ந்திருத்தல், அறியாமை, கல்லாமை மற்றும் ஏழ்மை ஆகியவற்றை ஒழிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறரால் தாழ்த்தப்பட்ட மக்கள் சுரண்டப்படுவதைத் தடுக்க முடியும். மூடநம்பிக்கை ஒழிப்பே சமூகப் பொருளாதார மாற்றங்களுக்கு வழிகோலும்”  – ஜோதிராவ் பூலே

ஜோதிராவ் பூலே மஹாராஷ்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் வால்கன் என்ற கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட  சமூகத்தில், கோவிந்தராவ் – சிம்னாபாய் இணையருக்கு 1827-ம் ஆண்டு எப்ரல் 11-ம் தேதி பிறந்தார். 

பூ விற்கும் குடும்பத்தில் பிறந்தவர்

அவரது தந்தை கோவிந்தராவ் காய்கறி விற்பனை செய்து வந்தார். இவர்களது குடும்பம், மராட்டிய பேஷ்வாக்களுக்கு பூ விற்பனை செய்த குடும்பம். பூலே என்றால், பூ விற்பவர் எனப் பொருள்படும். ஆதலால் பூலே என்றே இவர்களது குடும்பப் பெயர் வழங்கப்பட்டது.

பார்ப்பனரால் தடைப்பட்ட பூலேவின் கல்வி

திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சில ஆண்டுகள் படித்து வந்த போது 

ஒரு பார்ப்பனர், “உன் மகன் கல்வி கற்பதால் மதவிரோதியாகிவிடுவான், விவசாய வேலைக்கு லாயக்கற்றவனாகிவிடுவான், கலகக்காரனாகிவிடுவான்.” என்று கோவிந்த்ராவிடம் கூறியதால் அவரது கல்வி தடைபட்டது.

சாஸ்திர சம்பிரதாயப்படி பார்ப்பனரைத் தவிர மற்ற சாதியினர் கல்வி கற்பது சாஸ்திர விரோதமானது என்பது அன்றைய விதியாகும்.

பள்ளிப் படிப்பை இழந்த ஜோதிராவ் பூலே, பகல் முழுவதும் தோட்ட வேலையில் ஈடுபட்ட போதிலும், இரவில் மிகுந்த ஆர்வத்துடன் புத்தகங்களை நேசித்து வாசித்து வந்தார்.

இந்நிலையில் 13 வயதில் ஜோதிராவிற்கு, 9 வயதே நிரம்பிய சாவித்திரி என்ற பெண்ணுடன் 1840-ல் திரு மணம் நடைபெற்றது.

உருது மொழி ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்ந்தார்

உருது மொழி ஆசிரியர் ஹிப்விஹர் பெய்க் முன்சி என்பவர் முயற்சியால் 1844-ம் ஆண்டு மீண்டும் பூனாவிலுள்ள ஸ்காட்லாந்து மிஷனரி பள்ளியில் சேர்ந்தார்.

மாணவப் பருவத்தில் ஜோதிராவ் பூலே நிறைய படித்தார். சத்ரபதி சிவாஜி, ஜார்ஜ் வாஷிங்டன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துணர்ந்து எழுச்சியும் விடுதலை உணர்வும் பெற்றார். மேலும் கபீர், துக்காராம் கவிதைகளும், மார்ட்டின் லூதர் கிங், புத்தர், பசவண்ணா ஆகியோரின் நூல்களை விரும்பி வாசித்தார். 

சாதிகள் குறித்து ஆய்வு

ஆழ்ந்து சிந்தித்தார். சாதிகளை உருவாக்கியது யார்? அவை எப்படி, யாரால் வளர்ந்தன? என்று ஆய்வு செய்தார். 

வர்ணாஸ்ரமக் கோட்பாடுதான் பார்ப்பனர் நன்மைக்காக, சாதாரண மக்களின் வாழ்க்கையை பல நூற்றாண்டுகளாக பாழாக்கி வருகின்றது என உணர்ந்தார். பேஷ்வாக்களின் காலத்தில் பார்ப்பனர்களின் கொடுமைகள் உச்சத்தைத் தொட்டன என்பதையும் அறிந்தார்.

வர்ண பேதத்தால், பிறப்பால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு கொடுமைகளுக்கு ஆளானவர்களை, சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்க என்ன வழி என்று சிந்தித்தார்.

தாழ்த்தப்பட்ட சமூக பெண்களுக்கான முதல் பள்ளி

1848 ஆகஸ்டு திங்களில் ‘புத்தர்வதே’ என்ற இடத்தில் ஒரு வீட்டில் மகர், மாங் இன தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்களுக்கான முதல் பள்ளியை தன் 21-வது வயதில் தொடங்கினார்.

கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் எவரும் முன்வரவில்லை. ஆதலால் தன் மனைவி சாவித்திரிக்குக் கல்வி போதித்து அவரையே பள்ளி ஆசிரியராக்கினார்.

பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதென்பது மோசமான பாவச் செயலென்றும், உயர் சாதி இந்துக்கள் கூக்குரலிட்டு எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர். சாவித்திரிபாய் பள்ளிக்குச் செல்லும்போது கலகக்காரர்கள் அவர் மீது கற்களையும் சேற்றையும் வாரி இறைத்தார்கள்.

உயர் சாதியினர் அவரது தந்தையை சந்தித்து மிரட்டல் விடுத்தனர். மிரட்டலுக்குப் பயந்து அவரது தந்தை ஜோதிரவ் பூலேவையும், அவரது மனைவியையும் வீட்டை விட்டு வெளியேற்றினார். “நான் உயிரிழப்பதாக இருந்தாலும் சரி, என் லட்சியத்தை கைவிட மாட்டேன்” –என்று தனது தந்தையிடம் கூறிவிட்டு வெளியேறினார்.

ஜோதிராவ் பூலே – சாவித்ரிபாய் ஓவியம்

தொடர்ந்து பெண்களுக்கான கல்விக் கூடங்களை திறந்தார்

பெண்கள் கல்வியறிவு பெறுவது சாத்தியமாயிற்று. 1851 சூலையில் நவ்புதாவர் பேத்திலும், 1851 செப்டம்பரில் ராஸ்தா பேத்திலும், 1852 மார்ச்-ல் விதல் பேத்திலும் பெண்கள் கல்விக் கூடங்களை நிறுவினார்.

பெண்களுக்காக கல்விக் கூடங்களைத் திறந்த முதல் இந்தியச் சமூகப் போராளி ஜோதிராவ் பூலே ஆவார்.

ஜோதிராவ் பூலே கல்விப் பணிக்காக தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு உன்னத மனிதர். பெண் கல்வியின் பாதுகாவலர். தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நூல்நிலையம் ஆரம்பித்தார். முதல் சுதேசி நூல் நிலையத்தை தொடங்கிய பெருமைக்குரியவர் ஜோதிராவ் பூலே.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரல்

அந்நாளில் தாழ்த்தப்பட்ட மக்கள் பொது நீர் நிலைகளிலிருந்து நீரெடுக்கத் தடை இருந்து வந்தது. 1868-ல் ஜோதிராவ் பூலே உயர் சாதி இந்துக்களுக்கு அஞ்சாமல், தன் வீட்டுக் குடிநீர் கிணற்றைத் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட்டார். 

சூன் 1, 1873-ல் “அடிமைத்தனம்” என்ற நூலை வெளியிட்டார். ஒரு மனிதன் அடிமையாகும் போது அவன் தன் நற்பண்புகளில் பாதியை இழந்துவிடுகின்றான்” என்ற ஹோமரின் மேற்கோளோடு இப்புத்தகத்தைத் தொடங்குகிறார்.

முதல் தொழிற்சங்கம்

இந்து மதத்தின் தீமைகளுக்கு எதிராகப் போராட சத்யசோதக் சமாஜம் (உண்மை கண்டறியும் சங்கம்) எனும் சங்கத்தினை தோற்றுவித்தார். சத்யசோதக் சமாஜத்தின் ஏடான “தீனபந்து” இதழின் ஆசிரியர் கிருஷ்ணாராவ் பலேக்கர், இந்தியத் தொழிற்சங்கத்தின் தந்தை எனப் போற்றப் படும் நாராயண் மேகாஜி லோகண்டே மற்றும் ஜோதிராவ் பூலே மூவரும் நண்பர்கள்.   இவர்கள் மூவரும் ஒன்றுசேர்ந்து, 1880-ல் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கி ஆலைத் தொழிலாளர் உரிமைக்காகப் போராடினார்கள்.

பூலே 1857 சூன் 1ஆம் தேதி நகராட்சியாக்கப்பட்ட பூனா நகராட்சியின் உறுப்பினராக, 1876 முதல் 1882 வரை பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டார். 

சமூகக் கொடுமைகளுக்கு எதிரான நூல்கள்

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவர்தம் நலன்கள் பாதுகாக்கப்படல் வேண்டுமென்று வலியுறுத்தியும் “விவசாயிகளின் சாட்டை” என்ற நூலை எழுதி 1883-ம் ஆண்டு சூலையில் வெளியிட்டார்.

1891-ல் வெளியிடப்பட்ட நூல், “சர்வஜனிக் சத்ய தர்ம புஸ்தக்”. இந்நூல் மனிதர்களுக்குள்ளே ஒற்றுமை, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தையும், வலியுறுத்துகிறது. இந்நூல் வேதங்களின் புனிதத் தன்மையை மறுத்தும், நால் வருணப்பகுப்பினை எதிர்த்தும் எழுதபட்டதாகும்  . 

பக்கவாதத்தால் இவரின் வலது பக்க உடல் அசைவற்றுப் போனதால், இடது கையினால் எழுதி இந்நூலை 1889 ஏப்ரல் 1-ம் நாள் முடித்தார்.

அவரது மரணத்திற்குப் பின் 1891-ல் வளர்ப்பு மகன் யஷ்வந்த்தால் அந்நூல் வெளியிடப்பட்டது.

ஜோதிராவ் புலே, 28-11-1890 இல் இயற்கை எய்தினார். இன்று அவரது நினைவு நாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *