டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் தலைமையில் எழுதப்பட்ட மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் அமைப்பை இந்திய அரசியலமைப்பு சபை ஏற்றுக் கொண்டதற்காக அன்றே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கை வெளியிட்ட தலையங்கம்
அம்பேத்கர் ஒப்படைத்த அரசியலமைப்பை நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சபை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றியதை எதிர்க்கும் வகையில் நவம்பர் 30, 1949 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அதன் பத்திரிக்கையான ‘Organiser’-ல் ‘அரசியலமைப்பு’ என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
“பாரதத்தின் புதிய அரசியலமைப்பின் மிக மோசமான விடயம் என்னவென்றால், அதில் பாரதத்தைப் பற்றி எதுவும் இல்லை… பண்டைய பாரத அரசியலமைப்புச் சட்டங்கள், நிறுவனங்கள், பெயரிடல்கள் மற்றும் சொற்றொடர்களை குறிக்கும் எந்த தடயமும் காணப்படவில்லை…ஸ்பார்டாவின் லைகர்கஸ் அல்லது பெர்சியாவின் சோலோனுக்கு முன்பே இந்த மண்ணில் மனுவின் சட்டங்கள் எழுதப்பட்டுவிட்டன. இன்றுவரை மனுஸ்மிருதியின் சட்டங்களும் அதன் தெளிவான விளக்கங்களையும் உலகமே போற்றுகிறது. மேலும் அது தன்னிச்சையாக இணக்கத்தையும் கீழ்படிதலையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த கீழ்படிதல் நமது அரசியல் அமைப்பு பண்டிதர்க்கு இல்லை.”
என்று தலையங்கம் குறிப்பிட்டது.
அரசியலமைப்பு குறித்து கோல்வால்கர் முன்வைத்த விமர்சனம்
இந்திய அரசியலமைப்பை ஆர்.எஸ்.எஸ் எவ்வாறு மதிப்பிடுகிறது என்பதை அந்த அமைப்பின் மிக முக்கியமான கொள்கை வகுப்பாளர் கோல்வால்கரின் பின்வரும் அறிக்கையில் இருந்து அறியமுடியும்.
”நமது அரசியலமைப்பு சிக்கலான மற்றும் பன்முகத் தன்மை வாய்ந்த மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியல் அமைப்புகளை துண்டித்து ஒட்டியதுபோல் உள்ளது. இதை நம்முடையது என்று அழைப்பதற்கு எந்த கூறும் இல்லை. நமது தேசிய நோக்கம் என்ன, வாழ்க்கையில் எது முக்கியமானது என்பது குறித்து ஒரு சொல்லாவது அதன் வழிகாட்டும் கொள்கையில் இருக்கிறதா? இல்லை.” (MS Golwalkar, Bunch of Thoughts, Sahitya Sindhu, Bangalore, 1996, p. 238.)
மனுஸ்மிருதியே ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் அரசியல் சாசனம்
வி.டி.சாவர்க்கர் நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்ததுபோல் மனுஸ்மிருதியை இந்திய அரசியலமைப்பாக ஏற்க ஆர்.எஸ்.எஸ் வலியுறுத்தி வருகிறது.
“புனிதமான வேதங்களுக்குப் பிறகு நமது இந்து தேசத்திற்கான மிகவும் வழிபடக்கூடிய மற்றும் பழங்காலத்திலிருந்தே நமது கலாச்சாரம்-பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது மனுஸ்மிருதி மட்டுமே. பல நூற்றாண்டுகளாக இந்த புத்தகம் நம் தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பாரம்பரியத்தைக் குறிக்கிறது. இன்றும் கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்க்கையிலும் நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டவை. இன்றும் மனுஸ்மிருதிதான் இந்து சட்டம் ” [VD Savarkar, ‘Women in Manusmriti‘ in Savarkar Samagar (collection of Savarkar’s writings in Hindi), vol. 4, Prabhat, Delhi, p. 416.]
இந்து தேசியவாதத்தின் மையமாக சாதியம்
மனுஸ்மிருதி வெளிப்படையாக சாதி பாகுபாடை கடைபிடிக்க வழிவகுக்கிறது. இது இந்துக்கள் மத்தியில் மோசமான தீண்டாமை நடைமுறையை உருவாக்குகிறது. இந்த போக்கைத் தான் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள். ஆர்.எஸ்.எஸ் சாதியவாதத்தைதான் இந்து தேசியவாதத்தின் மையமாக பார்க்கிறது.
இந்து தேசியவாதம் என்பதே சாதியவாதம்தான் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிலைப்பாடு என்பதை, அதன் முக்கியமான தலைவர் கோல்வால்கரின் பின்வரும் வரிகள் உறுதிப்படுத்துகின்றன.
“இந்து மக்கள் யார் என்று, சர்வ வல்லமையை வெளிப்படுத்தும் விராட் புருஷாக்கள் சொன்னார்கள். அவர்கள் ‘இந்து’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றாலும், ரிக் வேதத்தின் 10-வது புத்தகத்தில் உள்ள புருஷ-சுக்தாவில் உள்ள சர்வ வல்லவரின் பின்வரும் விளக்கத்திலிருந்து இது தெளிவாகிறது. பிராமணர் தலை, க்ஷத்திரியர் தோள், வைஷியர் தொடைகள் மற்றும் சூத்திரர் கால்கள் என இந்த நான்கு வரிசை ஏற்பாட்டைக் கொண்டவர்கள் இந்து மக்கள்.
கடவுளின் இந்த உயர்ந்த பார்வை, ‘தேசம்’ என்ற நமது கருத்தின் மையப்பகுதியாகும். மேலும் இது நமது சிந்தனையை ஊடுருவி, நமது கலாச்சார பாரம்பரியத்தின் பல்வேறு தனித்துவமான கருத்துகளுக்கு வழிவகுத்துள்ளது.”
[Golwalkar, M. S., Bunch of Thoughts, collection of writings/speeches of Golwalkar published by RSS, p.36-37.]
மனுவின் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் எந்த வகையான இந்துத்துவ நாகரிகத்தை உருவாக்க விரும்புகிறது? இவற்றை தாழ்த்தப்பட்டோர், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பெண்களுக்கு மனு பரிந்துரைத்த சட்டகங்களைப் படித்துப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.
மனுதர்ம சாஸ்திரம் சொல்பனவற்றை மொழிப்பெயர்த்து தந்தை பெரியார் – “குடி அரசு” இதழில் 10.03.1935 அன்று வெளியிட்டார். அதன் சில பகுதிகள்:
1. “பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது” (அத்தியாயம் 8. சுலோகம் 20.)
2. “சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும்” அ.8.சு.22.
3. “சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி” அ.8.சு. 22.
4. “ஸ்தீரிகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராமணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன்னால் குற்றமில்லை” அ.8. சு.112.
5. “நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனை சத்தியமாகச் சொல்லுகிறேன் என்று சொல்ல செய்ய வேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனை பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்” அ. 8. சு. 113115.
6. “சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்” அ.8. சு. 270.
7. “சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்” அ.8. சு.271.
8. “பிராமணனைப் பார்த்து, “நீ இதைச் செய்ய வேண்டும், என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெயைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்” அ.8. சு.272.
9. “சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்திலுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்” அ.8. சு.281.
10. “பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவமில்லை” அ.8. சு.349.
11. “சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர்ப் போகும் வரையும் தண்டிக்க வேண்டும்.”
“பிராமணன் கொலைக் குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும்.” அ.8. சு.380.
12. “அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த சாதிக்கு பணி விடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும்.” அ. 8. சு.410.
13. “பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான்” அ. 8. சு.413.
14. “பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான்” அ. 8. சு.417.
15. “சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது” அ. 9. சு.416.
16. “பிராமணனால் சூத்திர ஸ்திரீக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்கு தந்தை சொத்தில் பங்கில்லை” அ. 8. சு.155.
17. “பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்தரவதை செய்து கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம்.” அ.9. சு.248.
18. “பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்” அ. 9. சு. 317.
19. “பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள்.” அ. 9. சு.319.
20. “பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனை சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்.” அ.9 சு. 320.
21. “சூத்திரனுக்கு பிராமணப் பணி விடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாதவிடத்தில் க்ஷத்திரியனுக்கும், க்ஷத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டுக் கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு.” அ.11. சு.12.
22. “சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம்.” அ.11. சு.13.
23. “யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது.” அ.11. சு.20.
24. “பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும்.” அ.11. சு.66.
25. “ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும்.” அ.11. சு.131.
25(அ). “அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது.” அ.11. சு.132.
26. “க்ஷத்திரியன் இந் நூலில் (மநுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப்பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணி விடை செய்வதே தவமாகும்.” அ.11 சு.285.
27. “சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனே யாவன். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமணனேயாவன். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார்.” அ.10. சு.75.
28. “பிராமணரல்லாதவன் உயர்குலத்தோருடைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும்.” அ.10. சு.96.
29. “சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும்.” அ.10. சு.96.
30. “பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும், சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும்.” அ.10. சு.125.
31. “சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும்.” அ.10. சு.129.
32. “மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர்.” அ.2. சு.7.
மனுதரும சாத்திரமும் பெண்களும்
பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.
இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர் (அ 9 சு3)
எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது. 147 (அ 5 சு147)
பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.
தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள். 213 (அ 2 சு213)
புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர். (அ2சு214)
பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக. 19 (அ 9 சு19)
இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது.
வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க! 11 (அ 9 சு11)
கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.
கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும். 78 (அ 9 சு78)
இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக. (அ 5 சு154)
மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது. (அ 9 சு156)
இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாரருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் “பிராமணன்” என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை “மனுதர்மம்” என்று கூறுவதா? அல்லது “மனு அதர்மம்” என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள். என்று தந்தை பெரியார் கூறுகிறார்
மனுஸ்மிருதியை எரித்த அம்பேத்கர்
ஒடுக்கப்பட்டவர்களையும், பெண்களையும் இவ்வளவு மேசமாக இழிவுபடுத்தும் மனுஸ்மிருதியை டிசம்பர் 25, 1927 அன்று வரலாற்று சிறப்புமிக்க மஹாத் போராட்டத்தின் போது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் எரித்தார். அந்த நாளை மனுஸ்மிருதி எரிப்பு நாளாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த நூற்றாண்டில் ஐரோப்பாவில் சர்வாதிகார சிந்தனைகளின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜெர்மன் தத்துவஞானி ப்ரீட்ரிக் நீட்சே மனுதர்மத்தை நேசித்தார். அதீதமாக புகழ்ந்தார். நீட்சேவின் ஆரிய இனவாதக் கொள்கை லட்சக்கணக்கான மக்களை கொடுரமாக கொலை செய்த ஹிட்லரால் பின்பற்றப்பட்டது. பாசிச சித்தாந்தம் கொண்ட மனுதர்மத்தை பாஜக அரசு ஆதரிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஆட்சியாளர்கள் இந்திய ஜனநாயக-மதச்சார்பற்ற அரசியலை ஒரு சர்வாதிகார இந்துத்துவ தன்னலக் குழுவாக மாற்றிவருகின்றனர். அரசை நோக்கிய அனைத்து எதிர்ப்பும் தேச எதிர்ப்பாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் அது இந்து மத எதிர்ப்பாக சாயம் பூசப்படுகிறது. இது பாசிச பாரம்பரியத்தின் கூறு.