ஈரானின் முக்கிய தலைமை அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகருக்கு அருகில் நடைபெற்றுள்ள தீவிரவாத தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலைக்குப் பின்னால் இஸ்ரேல் நாடு இருக்கலாம் என்று ஈரான் சந்தேகிக்கிறது.
இதற்கு முன்னர் ஜனவரி 3, 2020 அன்று ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கப் படைகளின் வான்வழித் தாக்குதலில் கொல்லபட்டது போர் மேகங்கள் சூழும் அளவிற்கு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஃபக்ரிசாதே கொல்லப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
யார் இந்த மொஹ்சென் ஃபக்ரிசாதே?
மொஹ்சென் ஃபக்ரிசாதே ஈரானின் மிக முக்கியமான அணு விஞ்ஞானி ஆவார். ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு பின்னே இயங்கும் சக்திவாய்ந்த நபராக இவரை அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்குலகின் பாதுகாப்பு படைகள் பார்த்தன.
ஈரானில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்ற செய்திக்கு மத்தியில் இந்த படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியும் தான் அணு உலைகளுக்கும், அணு ஆயுதத் தயாரிப்புகளுக்கும் முக்கியமான அடிப்படைப் பொருளாகும்.
ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பேசியபோது, ஃபக்ரிசாதே-வின் பெயரைக் குறிப்பிட்டு ”இந்த பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்”, இவர்தான் ஈரானின் அணுசக்தித் துறையின் தலைமை விஞ்ஞானி என்று பேசியிருந்தார்.

ஈரான் என்ன செய்யப் போகிறது?
ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் ஃபக்ரிசாதே சென்ற வாகனத்தை குறிவைத்து தாக்கியதாகவும், தீவிரவாதிகளுக்கும் ஃபக்ரிசாதே-வின் பாதுகாவலர்களுக்கும் இடையில் நடந்த சண்டையில் ஃபக்ரிசாதே கடுமையான காயமடைந்ததாகவும், இறுதியில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்திருப்பதாகவும் ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2010-க்கும் 2012-க்கும் இடைப்பட்ட காலத்தில் ஈரானின் 4 அணுசக்தி விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலையின் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியது.
இந்த தாக்குதலில் இஸ்ரேலின் பங்கு இருப்பதை சுட்டிக்காட்டி போர்வெறி பிடித்த கூட்டத்தின் கோழைத்தனமான தாக்குதல் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆயுதப் படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையானது ஈரான் இந்த படுகொலைக்கு பழிவாங்கும் என்று தெரிவித்துள்ளது.
2015-ம் ஆண்டு ஈரானுடன் அமெரிக்கா போட்ட அணுசக்தி குறித்தான ஒப்பந்தத்தினை இஸ்ரேல் தொடர்ச்சியாக எதிர்த்து வந்தது. அதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் டொனால்ட் ட்ரம்ப் அந்த ஒப்பந்தத்தினை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபக்ரிசாதே படுகொலைக்கு ஈரான் என்ன எதிர்வினையை செய்யப்போகிறது என்பது உலக அளவிலான அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.