இந்த கட்டுரை ஆரியர் வருகையும் ரிக் வேத காலமும் – பாகம் 1 எனும் பெயரில் வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சியாகும் – Madras Radicals
இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்கு பகுதியில் ஆரியர்கள் சில நூற்றாண்டுகள் வாழ்ந்தனர். பின் அவர்கள் கிழக்கு நோக்கி படிப்படியாக நகரத் துவங்கினர். குறிப்பாக வட இந்தியாவின் கங்கை, யமுனை நதிக்கரைக்கு இடைப்பட்ட வடிநிலப்பகுதியில், அதாவது இன்றைய மேற்கு உத்திரப் பிரதேசப் பகுதிக்கு குடிபுகுந்தனர்.
வேளாண்மையில் ஈடுபடத் தொடங்கிய ஆரியர்கள்
பல்வேறு தொல்பொருள் எச்சங்களை வைத்து பார்க்கும்போது, ரிக் வேதகாலத்திற்கு மாற்றாக பிந்தைய வேதகாலத்தில் அங்கு அவர்கள் வேளாண்மையில் ஈடுபட்டதும், நிலையாக தங்கிவிட்டதும் தெரியவருகிறது. பிந்தைய வேத காலம் கி.மு 1000 முதல் கி.மு 600 வரையிலான காலம் என்று சில வரலாற்று ஆசிரியர்களால் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் சில முன்பின் முரண்கள் உள்ளன. வேத காலத்தைப் பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளது போல், பிந்தைய வேத காலத்தைப் பற்றிய குறிப்புகள் யஜுர், சாம, அதர்வண வேதங்களில் நமக்கு கிடைக்கின்றன.
பிந்தைய வேதகாலத்தில் வளர்ச்சியடைந்த சடங்குகள்
இன்று நடைமுறையில் உள்ள புரோகித சடங்குகள், மந்திர உச்சாடனங்கள், சமய வினைமுறைகள் போன்ற பல்வேறு வைதீக அடிப்படைகள் அந்த காலகட்டத்தில்தான் வளர்ச்சியடையத் துவங்கின. பிற்கால வேத நூல்கள் அனைத்தும் கி.மு 1000 முதல் கி.மு 600-க்கு இடைப்பட்ட காலத்தில் கங்கை வடிநிலத்தில்தான் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களும் கருதுகின்றனர்.
குருஷேத்திரமும், பாரத யுத்தமும்
பிந்தைய வேதகாலம் குறித்து ஆர்.எஸ்.சர்மா கீழ்கண்டவாறு சில கருத்துகளை முன்வைக்கிறார். ”பஞ்சாபிலிருந்து கங்கை யமுனைக்கு இடைப்பட்ட மேற்கு உத்திரப் பிரதேசம் முழுவதிலும் ஆரியர்கள் பரவினார்கள். அங்கு இரண்டு பிரதான இனங்களான பாரதர்களும் பூருக்களும் ஒன்றிணைந்து குரு இனத்தினராகப் பரிணமித்தனர். இவர்கள் கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலத்தின் மேற்பகுதியை பிடித்துக்கொண்டனர். இந்த பிரதேசம் குருக்ஷேத்திரம் எனப் பெயர் பெற்றது. அங்கு வாழ்ந்த பாஞ்சாலர்கள் எனப்படும் மக்களுடன் குரு இனத்தினர் படிப்படியாகக் கலந்தனர்.
பின் இந்த குரு-பாஞ்சாலர்கள் கங்கை யமுனை நிலப்பரப்பு முழுவதும் பரவினார்கள். அவர்கள் தங்கள் தலைநகராக இன்றைய உத்திரப் பிரதேச மாநிலத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள அஸ்தினாபுரத்தை நிறுவினார்கள். கிமு 950-களில் குரு வம்சத்தினரான பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையில் பாரத யுத்தம் இங்குதான் நடந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது”
இடம்பெயராத வாழ்க்கையினை தொடங்கிய ஆரியர்கள், அஸ்தினாபுரங்கள் உருவாக்கம்
கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள காடுகள் மிக அடர்த்தியாக இல்லை. எனவே திருத்துவதற்கு எளிமையாக இருந்ததால் ஆரியர்கள் அவற்றை வெட்டி திருத்தி வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஆரம்பகட்ட வேளாண் முறையில்தான் ஈடுபட்டுள்ளனர். ஆரியர்கள் இரும்புக் கருவிகளை பயன்படுத்தியதற்கான தொல்லியல் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. குறிப்பாக பிந்தைய வேத காலத்தின் இறுதியில்தான் இரும்புப் பயன்பாடு பரவியுள்ளது.
வேத நூல்களில் இந்த உலோகத்தை சியாமம் அல்லது கிருஷ்ண அயஸ் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆரியர்கள் நெல் குறித்தான அறிமுகத்தை இங்குதான் பெற்றுள்ளனர். வேத நூல்களில் இது சிரிஹி என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பு அவர்கள் நெல் குறித்து அறிந்திருக்கவில்லை. யாகங்களில் கால்நடைகளை பலியிடுவதுடன் நெல், கோதுமை போன்ற தானியங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் இடம்பெயராத வாழ்க்கை பல்வேறு கைவினைத் தொழில்களின் வளர்ச்சியை ஊக்குவித்தது. நெசவு, தச்சு, மட்பாண்டங்கள் வனைதல் போன்ற தொழில்கள் வளர்ச்சியடைந்தன. பிந்தைய வேதகாலத்தில் அஸ்தினாபுரம் போன்ற சிறிய ஊர்களும் உருவாகின.
இனமரபுக் குழுக்களின் பெயர்களில் உருவான பிரதேசங்கள்
வேத காலத்தில் நிலவிவந்த சாபவும், கமிதியும் பிந்தைய வேதகாலத்திலும் தொடர்ந்தது. ஆனால் அவற்றின் இயல்பு மாறிவிட்டது. இனமரபு சார்ந்த அதிகாரம், நிலப்பரப்பு சார்ந்த அதிகாரமாக மாறிவிட்டது. கால்நடைகளையும் வேட்டையாடுதலையும் குறைத்துக் கொண்டு நிலத்தை மையமாக வைத்து வேளாண் உற்பத்தி முறையில் ஈடுபடத் துவங்கினார்கள். வேளாண் உற்பத்தி முறை இனமரபுக் குழுக்களை நிலம் சார்புடையதாக மாற்றிவிட்டது. எனவே இனக்குழு அடையாளப் பெயர்களை குடியேறிய பகுதிகளுக்கு சூட்டிக்கொண்டனர். எனவே ஆரியர் குடியமர்ந்த பிரதேசங்கள் அவர்களின் இனமரபுக் குழுவின் பெயரில் அழைக்கப்பட்டது.
சிற்றரசர்கள் பிரதேச அடிப்படையிலான இனக்குழுக்களின் மீது அதிகாரம் செலுத்தத் தொடங்கினார்கள். குறிப்பிட்ட பிரதேசங்களைக் குறிக்க “ராஷ்ட்ரா“ என்னும் பதமும் தோன்றிது. சாபா மற்றும் சமிதியில், நிலத்தை அடிப்படையாகக் கொண்ட செல்வமுடையவர்களே ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார்கள். அவர்களுடன் சமூகப் படிநிலையில் பிராமணர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
பூர்வீக இந்தியர்களுடன் மோதி அதிகாரத்தை விரிவுபடுத்திய ஆரியர்கள்
பிந்தைய வேதகாலத்தின் இறுதியில் குறிப்பாக கி.மு 600-களில் இவர்கள் மேலும் கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்தார்கள். கிழக்கு உத்திரப் பிரதேசம் மற்றும் வட பீகாருக்கு சென்றடைந்தனர். அங்கு பித்தளைக் கருவிகளையும், கருப்பு சிவப்பு மண்கலங்களையும் பயன்படுத்திவந்த பூர்வீக இந்தியர்களுடன் மோத நேர்ந்துள்ளது. அதேபோல் மேற்கு உத்திரப் பிரதேச பகுதிகளை நோக்கி நகரும்போது தாமிரக் கருவிகளையும், காவி நிற மண்பாண்டங்களையும் பயன்படுத்திய பூர்வீக மக்களுடன் மோத நேர்ந்துள்ளது.
ஆரியர்கள் தங்களது அதிகாரத்தை விரிவுபடுத்திய இந்த இரண்டாவது கட்டத்தில் வெற்றியடைந்தனர். குதிரை பூட்டிய ரதங்களும் இரும்பால் செய்யப்பட்ட ஆயுதங்களும் இந்த ஆக்கிரமிப்பிற்கு துணையாக நின்றது.
வர்ண அமைப்பின் உருவாக்கமும், பிராமணர்களின் ஆதிக்கமும்
பிந்தைய வேதகால சமூகம் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்று பிரிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் வேள்வி நடத்தும் முறை பெரும் வளர்ச்சியடைந்திருந்தது. பிராமணர்கள் அதிகாரத்திலும், செல்வக் குவிப்பிலும் மேலோங்கியிருந்தனர். அடிப்படையில் பிராமணர்கள் 16 புரோகித வகுப்புகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளனர். வேள்வி மற்றும் சமய சடங்குகளை செய்வதினூடாக செல்வத்தையும் அதிகாரத்தையும் உயர்த்திக் கொண்டனர். இதனால் மற்ற புரோகித வகுப்பை விட பிராமணர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக ஆனார்கள்.
மன்னர்கள் போரில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வேள்விகளையும் பிராமணர்கள் செய்து வந்தனர். அதனால் ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு மிக்கவர்களானார்கள். அரசர்களுக்கும், பிராமணர்களுக்கும் பல்வேறு முரண்பாடுகள் எழுந்தபோதும், சமூகப் படிநிலையில் அவர்களுக்குக் கீழே உள்ளவர்களை அடக்குவதில் ஒருமித்த கருத்துடன்தான் நின்றனர்.
வரி செலுத்துபவர்களாய் இருந்த வைசியர்கள்
வேளாண்மை, கால்நடை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் வைசியர்கள் என்ற மூன்றாம் படிநிலையில் அமர்த்தப்பட்டனர். இவர்கள்தான் பிரதானமாக திறைகள் செலுத்துபவர்கள். இவர்களிடம் இருந்து வரும் வரியை நம்பித்தான் பிராமணர்களும் சத்ரியர்களும் நிலைத்து நின்றனர். பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில்தான் வைசியர்கள் வணிகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இனமரபுக் குழுக்களாக இருந்தவர்கள் இப்போது வரி செலுத்துபவர்களாக ஆனார்கள்.
அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படாத சூத்திரர்கள்
சூத்திரர்கள் சமூகப் படிநிலையில் நான்காவது இடத்தில் இருந்தனர். அவர்கள் மேலே உள்ள மூன்று வர்ணத்தாருக்கும் எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் வேலை செய்ய வேண்டும். சூத்திரர்களுக்கு அரசியல், சமூகம் மற்றும் பொருளதாரத்தில் எந்தவித அதிகாரமும் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
கோத்திர முறை
கோத்திர முறை இந்த காலகட்டத்தில்தான் தோன்றியது. கோத்திரம் என்ற சொல் பசு தொழுவத்தைக் குறிக்கும். இன்னும் குறிப்பாகச் சொன்னால் ஒரு குலத்திற்கு சொந்தமான கால்நடைகள் பராமரிக்கும் இடத்தை கோத்திரம் என்பார்கள். ஆனால் இது காலப்போக்கில் ஒரு பொதுவான மூதாதையரின் கால்வழி உறவுகளை குறிப்பதற்கு பயன்பட்டது. பின் ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு வந்தது. இன்றைய காலகட்டத்தில் வழக்கில் உள்ள பார்ப்பனிய வைதீக சமய சடங்குகள் பிந்தைய வேத காலத்தில் உருவானவை.
சமய சடங்குகளில் ஏற்பட்ட மாற்றம்
கால்நடை சமூகமாக இருந்த ஆரியர்கள் கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலத்தில் நிரந்தரமாகக் குடியேறியவுடன் பல்வேறு சமய வழிபாட்டு முறைகளில் மாறுதல்கள் ஏற்பட்டது. புதிய சடங்குகள் உருவானது. பல்வேறு சடங்குகள் ஆரியர் அல்லாதரிடம் இருந்து உள்வாங்கப்பட்டது. இந்திரன், அக்னி போன்ற சில ரிக்வேத கடவுள்கள் முக்கியத்துவம் இழந்தனர். விஷ்ணுவிற்கு முக்கியத்துவம் அதிகரித்தது. சமய வினைமுறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் அதிகமானது. வேள்வி யாகங்களில் பல்வேறு வினைமுறைகள் உருவாக்கப்பட்டது. யாகங்களில் பெரும் எண்ணிக்கையிலான விலங்குகள் பலியிடப்பட்டன.
குறிப்பாக மன்னனுக்காக நடத்தப்பட்ட சமூக யாகங்களில் இந்த போக்கு கடைபிடிக்கப்பட்டது. யாக தட்சணையாக தங்கம், துணி, கால்நடைகள் வழங்கப்பட்டது. பசு மற்றும் குதிரை அதிகமான தட்சணையாக பார்பனர்களுக்கு வழங்கப்பட்டது. புரோகிதம் செய்யும் தனித் திறமையும் அறிவாற்றலும் தங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று பிராமணர்கள் ஏகபோக உரிமை கொண்டாடினார்கள். பார்ப்பனர்களால் பல்வேறு வேத இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. சத்ரியர், வைசியர், சூத்திரர்கள் அவர்களுக்கான சொந்த கடவுளையும் வழிபட்டனர்.
பிந்தைய வேத காலத்தின் இறுதிவாக்கில் புரோகித மேலாண்மை போற்றும் சடங்கு முறைகளுக்கும், சமய கோட்பாடுகளுக்கம் கடும் எதிர்ப்பு கிளம்பியது பல்வேறு தத்துவ உரையாடல்களுக்கு வழிவகுத்தது. இதன் நீட்சியாகத்தான் பௌத்த, சமண எழுச்சி நடைபெற்றது.