ஏன் இதனை எழுதுகிறோம்?
சமகால சமூக அரசியல் நிகழ்வுகள் பெரும்பாலான வரலாற்று நிகழ்வுகளை திரும்பிப் பார்க்கத் தூண்டுகிறது. நிகழ்கால வினைகளின் நல்லது கெட்டதுகளை கடந்த காலத்தின்மீது ஏற்றி பார்ப்பதும், அதோடு நிகழ்காலத்தின் தேவைகளை வரலாற்றில் தேடியடைவதும் சமூகத்தின் இயல்பே. இந்த நிர்பந்தத்தை பெரும்பாலும் ஆளும்வர்க்கம் நம் மீது திணிக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக அரசு 12,000 ஆண்டு இந்திய வரலாற்றை திரும்பவும் தொகுப்பதற்காக ஒரு குழுவை அமைத்துள்ளது. ஏன் ஆளும் வர்க்கத்திற்கு இந்த நிர்பந்தம் வருகிறது? சர்வேதச சந்தையில் இந்தியா எனும் பெரும் மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பு பொருளாதாரத்தில் மிக முக்கியமானது. நுகர்வுப் பண்பாட்டின் உச்சத்தில் இருக்கும் இன்றைய சந்தைப் பொருளாதாரத்திற்கு இந்தியா என்ற நிலப்பரப்பு ஒற்றை ஆட்சி அதிகாரத்தின் கீழ் வரவேண்டிய தேவை எழுகிறது.
அதிகாரக் குவிப்பு என்பது மூலதன திரட்சிக்கு மிக முக்கியமான அம்சமாக அமைகிறது. எனவே பல்வேறு மொழி, பண்பாடு, வரலாறு, பழக்க வழக்கங்களைக் கொண்ட இந்தியத் துணைக் கண்டத்தை இந்தி, இந்து, வேதம், சமஸ்கிருதம் என்ற ஒற்றைத் தன்மைக்குள் கொண்டுவர எல்லா முயற்சிகளும் நடைபெறுகிறது. இந்த முயற்சியானது வேத மரபை மட்டுமே ஒற்றை இந்திய மரபாக மாற்றுவதற்காக மட்டுமல்ல. வட இந்தியாவின் ’பனியா’ மூலதனத்தை பெருக்குவதற்காகவும்தான்.
இங்கு மரபை மீட்டெடுத்தல் என்ற போக்கும், மூலதனத்தை திரட்டுதல் என்ற போக்கும் ஒன்றை ஒன்று சார்ந்து பாய வேண்டிய முனையில் நிற்கிறது. இந்த பாய்ச்சலுக்காகத்தான் ஒரு பக்கம் 12,000 ஆண்டு வரலாறு திருத்தி தொகுக்கப்படுகிறது. மறுபக்கம் அரசியலமைப்புச் சட்டம் திருத்தியமைக்கப்படுகிறது.
முன்னது வேதமரபை பறைசாற்றவும், பின்னது மூலதனத்தை பெருக்கவும் வகை செய்கிறது. இந்த இரு போக்குகளும் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், வரலாறுகள், மெய்யியல் சிந்தனைகள், அரசியல் உரிமைகள் என அனைத்தையும் அழித்து வருகிறது. ஆரிய தன்னின உயர்வாதம் கொண்டவர்கள் “இந்துத்துவா“ சித்தாந்தம் என்ற ஜனரஞ்சக வழிமுறையில் தங்கள் வரலாற்றினை பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஏற்றத்தாழ அந்த வேலையை சிறப்பாக செய்து முடித்துவிட்டார்கள்.
- இந்தியத் துணைகண்டத்தின் பூர்விக வரலாறு என்ன?
- சிந்து வெளியில் வாழ்ந்தவர்கள் யார்?
- எப்படி அந்த நாகரிகம் வீழ்ச்சியடைந்தது?
- ஆரியர்கள் யார்?
- எப்போது இந்தியவிற்குள் வந்தார்கள்?
- எங்கு ரிக்வேதம் தொகுக்கப்பட்டது?
- இந்திய வைதீக மரபு அவர்களிடம் இருந்து துவங்கியதுதானா?
- ஆரியர்களுக்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தில் வாழ்ந்தவர்கள் யார்?
- அவர்களின் பண்பாடு என்ன?
- அவர்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் என்ன தொடர்பு?
- பாஜகவின் இந்துத்துவா சிந்தாந்தத்திற்கு எப்படி ஆரிய சிந்தாந்தம் ஒத்துப்போகிறது?
- ஏன் ஆரிய மேலாண்மை இந்தியாவில் பார்ப்பன எச்சமாக இன்னும் நிலைத்து நிற்கிறது?
போன்ற பல்வேறு கேள்விகளுக்கு கடந்த காலத்தில் வின்சென்ட் ஸ்மித்(Vincent Smith), ஆர்.சி.மஜூம்தார் (R.C.Majumdar), டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, ரொமிலா தாப்பர், தேவிபிரசாத் சட்டோபாத்யாயா, ஏ.எல்.பாசம், எ.பி.கீத், இர்பான் ஹபீப் (Ifran Habib), வெண்டி டோனிகர், டோனி ஜோசப் போன்ற வரலாற்று ஆசிரியர்கள் போதிய ஆதாரங்களை திரட்டித் தந்துள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில் மரபணு ஆய்வுகள் முடிக்கப்பட்டு உறுதியான முடிவுகளை நெருங்கிவிட்டனர். இவை அனைத்தும் ஒரு சில ஆய்வாளர்கள் மத்தியில் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்துத்துவா சிந்தாந்தவாதிகள் தங்களுடைய வரலாற்று தகவல்களை ஜனரஞ்சகப்படுத்தும் போக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதனால்தான் மக்கள் ஆதரவில் இன்றைய ஆட்சி அதிகாரம் அவர்களிடம் மண்டியிட்டு இருக்கிறது.
எனவே நாமும் ஆரியர்கள் குறித்தும், வேத காலம் குறித்தும் ஒரு ஜனரஞ்சகமான உரையாடலை வெகுசன மக்கள் மத்தியில் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. குறிப்பாக பாஜக அரசு வரலாற்றுக் குழுவை அமைத்ததற்குப் பிறகு இதுபோன்ற உரையாடல்கள் அனைத்து தரப்பினருக்கும் எளிமையாக சென்றடைய வேண்டும். அதுவே நம்மையும் நமது வரலாற்றையும் பாதுகாக்கும்.
அதற்கு கீழடி ஆய்வு ஒரு எடுத்துக்காட்டு. பல்வேறு ஆரிய இந்துத்துவ சித்தாந்தம் கொண்டவர்கள் கீழடியை இருட்டடிப்பு செய்ய முயற்சித்தபோது அது மக்கள்மயமாக்கப்பட்டு, ஜனரஞ்சக அரசியல் விவாதமாக மாறியதால் பாதுகாக்கப்பட்டது. எனவே ஆரியர் வருகை குறித்தும், ரிக்வேத கால ஆரியர் குறித்தும் இணையதளத்தில் இந்த தகவல்களை தொகுக்க வேண்டியுள்ளது. எனவேதான் இத்தொகுப்பினை நாங்கள் எழுதுகிறோம்.
ஆரியர் வருகை
வடமேற்கு இந்தியத் துணைக் கண்டத்திற்குள் ஆரியர்கள் கி.மு 1500-களுக்குப் பிறகுதான் வந்துள்ளனர். மிக உறுதியாகச் சொன்னால் அதிகப்படியாக கி.மு 1300-களில்தான் வரத்தொடங்கியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியடைந்து 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரியர் இங்கு வந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். மத்திய ஆசியாவில் இருந்து தங்கள் கால்நடைகளை ஓட்டிக்கொண்டு மெசபடோமியா வந்தடைந்து, அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் இந்தியத் துணைக்கண்டத்திற்கும் பரவிச் சென்றனர்.
இந்த இடப்பெயர்வு ஒரே காலகட்டத்தில் நடக்கவில்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெயர்ந்துள்ளனர். ஒரு கால்நடை சமூகமாகவே வாழ்ந்து வந்தள்ளனர். ஆடு, மாடு மேய்த்தலே அவர்களின் பிரதான தொழில். நாடோடி சமூகமாக இருந்ததால் வேளாண்மையில் அவர்களுக்கு போதிய பரிட்சயம் இல்லை.
குதிரை பூட்டிய ரதங்களின் பயன்பாடு அவர்களுக்கு இடம்விட்டு இடம் நகர்வதற்கு பலமாக இருந்துள்ளது. குதிரையும், வெண்கல ஆயுதங்களும் அவர்களின் ஆக்கிரமிப்பிற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது.
தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்ததால் அவர்கள் குறித்தான சான்றுகள் குறைவு. அவர்கள் பேசிய மொழி இந்தோ ஐரோப்பிய மொழி. முற்காலத்திய ஈரானியர்களின் மத நூலான அவெஸ்தாவின் மொழியுடன் (பழைய ஈரானி மொழி) ஒத்துள்ளது. அந்த இரு மொழிகளும் ஒற்றை மூல மொழியில் இருந்து வந்தவை. அம்மொழி பேசியவர்கள் ’அய்ரியர்’ என்று அழைக்கப்பட்டதாக அவெஸ்தாவில் கூறப்படுகிறது.
பழைய பெர்சிய இனத்தவர்களின் மதமான சோராஸ்ட்ரியத்தின் (Zoroastrianism) புனித நூலான அவெஸ்தாவில் சொல்லப்பட்டுள்ள சமூக அமைப்பு முறையும், கடவுள் வழிபாட்டு முறையும் ரிக் வேதத்துடன் ஒத்துள்ளது. அவெஸ்தாவில் உள்ள ஒவ்வொரு விடயமும் ரிக் வேதத்துடன் நேரடியாகவே தொடர்புடையதாக இருக்கிறது. அதேபோல் அய்ரியர்கள் தொடர்ச்சியாக கிழக்கு நோக்கி சென்றதற்கான ஆதாரம் கல்வெட்டுக்களில் உள்ளது. (கி.மு 1600-ல் ஈராக்கில் கிடைத்த காசைட் கல்வெட்டு மற்றும் கி.மு 1800 சார்ந்த மித்தானி கல்வெட்டு).
அய்ரியர்கள் வெண்கல குத்துவால்கள் மற்றும் மரக் கைப்பிடியுடன் கூடிய கருவிகளும் பயன்படுத்தியதற்கான சான்றுகள் வடமேற்கு இந்தியாவில் நடந்த தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. ஆப்கனிஸ்தானின் குபா நதியும், ராஜஸ்தானில் இருந்ததாக சொல்லப்படும் சரஸ்வதி நதி, சிந்து மற்றும் அதன் கிளை ஆறுகளைப் பற்றியும் ரிக் வேதத்தில் குறிப்புகள் உள்ளது. இடம்பெயர்ந்து இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்த பிறகு, அவர்கள் இந்த பகுதியில் தங்கி இருந்திருந்தார்கள். ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகுதான் ரிக் வேதம் தொகுக்கப்பட்டுள்ளது. எனவேதான் ரிக் வேதத்தில் இந்த நதிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
ஆரியர்கள் முதன்முதலாக இந்தியத் துணைக் கண்டத்தில் குடியமர்ந்த இடம் ஏழு நதிகள் நாடு (சப்தநதி) என்றழைக்கப்படுகிறது. அவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்தபோது இங்கு வாழ்ந்து கொண்டிருந்த கருப்பான, சிவலிங்கத்தை வழிபடும் தாசர்களையும் தஸ்யூக்களையும் எதிர்த்து சண்டை போட்டுள்ளனர். குறிப்பாக தஸ்யுஹத்ய என்ற பதம் (தஸ்யூக்கள் படுகொலை) திரும்பத் திரும்ப வருகிறது. பூர்வீக இந்தியர்களான தஸ்யூக்களை அழித்தொழிப்பது குறித்து நிறைய தகவல்கள் ரிக் வேதத்தில் இருப்பதாக வரலாற்று ஆசிரியர் ஆர்.எஸ்.சர்மா தனது ஆய்வில் தெரிவித்துள்ளார்.
இனம் / குலம் / குடும்பம்
ஆரியர்கள் குலங்களாகப் பிரிந்திருந்தனர். குறிப்பாக அவர்கள் ஐந்து வம்சத்தினராக தங்களைப் பிரித்துக் கொண்டதாக பஞ்சஜனம் என ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இவர்களுக்குள் நிலையான சண்டை இருந்து வந்தது. அத்தோடு தாசர்களுடனும் குறிப்பாக தஸ்யூக்களுடனும் தொடர்ந்து சண்டை போட்டு வந்தனர். அந்த பஞ்சஜனத்தில் உள்ள குலத்தில் பரதர்களும், திருத்சுக்களும் ஆள்கிற குலங்களாக விளங்கினர்.
பரத குலத்தை எதிர்த்து 10 குலங்கள் ஒன்று சேர்ந்து எதிர்தது பருஷனீ (ரவி) நதிக்கரையில் சண்டை போட்டுள்ளனர். அதில் சுதாசன் தலைமையிலான பரதர்கள் வெற்றியடைந்தார்கள். அதற்குப்பிறகு பரதகுலம் மிகப்பெரிய ஆளும் வம்சமாக மாறுகிறது. இதை மையமாக வைத்துதான் இந்தியத் துணைக் கண்டம் பாரத வர்ஷம் என்று அழைக்கப்படுகிறது.
ஜன எனப்படும் சொல் ரிக் வேதத்தில் 275 இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜன என்ற பதம் ரத்தத் தொடர்புடைய இனத்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டுள்ளது. ரத்தத் தொடர்புடைய உறவே ரிக் வேத சமூக உருவாக்கத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. இரத்த உறவே ஒருவரை அடையாளப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளது. இரத்த உறவுக் குழுக்களுக்கு விஸ்வாசமாக இருப்பது தலையாயக் கடமையாக கருதப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜனபதம் (பிரதேசம்) என்ற சொல் ரிக் வேத சமூகத்தில் பயன்படுத்தப்படவில்லை. அவர்களுக்கு நிலையான பிரேதேசம் இல்லாததால் நிலத்தை அடிப்படையாக வைத்து தங்களை அடையாளப்படுத்த முடியாததால், ரத்த உறவுக் குழுவையே தங்கள் பாரம்பரிய அடையாளமாக கடைபிடித்துள்ளனர். தந்தையை தலைமையாகக் கொண்ட கிரிஹ என்ற குடும்ப அமைப்பு முறை அவர்களிடம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான நபர்களை உள்ளடக்கிய மிகப்பெரிய அமைப்பாக கிரிஹம் செயல்பட்டுள்ளது. குழுந்தைகளும் கால்நடைகளும் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வழிபடும் பாசுரங்கள் அதிகமாக ரிக் வேதத்தில் உள்ளது.
ஆட்சி முறை
ரிக் வேத ஆரியர்கள் இனமரபுக் குழுத் தலைமையை மையமாக கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். ராஜன் என்றழைக்கப்படும் தலைமையின் கீழ் போர்கள் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சபா, சமிதி என்று அழைக்கப்படும் இனமரபு குழுக்களைக் கொண்ட மன்றத்தால் தலைவன் தேர்வு செய்யப்பட்டதற்கான குறிப்புகள் ரிக் வேதத்தில் உள்ளன.
அவனே கால்நடைகளைப் பாதுகாப்பவனாகவும், இனத்தின் சார்பாக தெய்வங்களுக்கு பிரார்த்தனை செய்பவனாவும் இருந்துள்ளான். தலைவனுக்கு துணையாக புரோகிதர்கள் இருந்துள்ளனர். வசிஷ்டர், விசுவாமித்திரர் போன்றவர்கள் மன்னனுக்கு துணையாக இருந்துள்ளனர். அதற்காக பாசுக்களையும் அடிமைப் பெண்களையும் பரிசாகப் பெற்றுள்ளனர். பலி என்றலைக்கப்படும் காணிக்கையை மன்னன் பெற்றுள்ளான்.
நாடோடி சமூகம் என்பதால் நிலையான பிரேதச நிர்வாக அமைப்பு அவர்களிடம் இல்லை. ஆனால் வ்ரதா, கணா, கிரமா, சார்தா போன்ற இன மரபுக் குழுக்களை உள்ளடக்கிய போர்வீரர் அமைப்பு இருந்துள்ளது.
பொருளாதார வாழ்க்கை
ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்த பிறகு வேளாண்மையைப் பற்றிய அறிமுகம் கிடைத்துள்ளது. ஏர்முனை, விதை அறுவடை, நடவு, கதிரடித்தல் மற்றும் பல்வேறு பருவநிலை பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்தில் காணப்படுகிறது. இவையனைத்தும் பிற்காலத்திய இடைச்செருகலாக இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆரியர்கள் வருவதற்கு முன் பூர்விக இந்தியர்கள் நீரைத் தேக்கி, நிலத்தைப் பண்படுத்தி வேளாண்மையில் நல்ல பரிச்சயம் உள்ளவர்களாக இருந்துள்ளனர்.
ரிக் வேதத்தில் அதிகமான குறிப்புகள் பசுவைப் பற்றி உள்ளது. பசுக்களுக்குகான போர்கள் ரிக் வேதத்தில் காவிஷ்தி என்றழைக்கப்படுகிறது. பசுக்களைத் தான் அவர்களின் முக்கியமான செல்வமாகக் கருதியுள்ளனர். நிலத்தைப் பற்றிய எந்த சிறப்பு முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. மேய்ச்சலுக்காக மட்டுமே நிலங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிலம் தனிச் சொத்துடமையாகக் கருதப்படவில்லை.
பல்வேறு கைவினைஞர்களைப் பற்றிய குறிப்புகளும் ரிக் வேதத்தில் உள்ளது. தாமிரம் மற்றும் வெண்கலத்தைக் குறிப்பதற்கு அயஸ் என்று ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. எனவே இந்த உலோகங்களை அவர்கள் பயன்படுத்தியதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேய்ச்சல் தொழிலை மையமாகக் கொண்ட மக்களிடம் வரி வருமானம் பெரிய பங்காற்றவில்லை. நிலத்தையோ தானியங்களையோ பரிசாக மன்னன் பெறமுடியவில்லை. அதேபோல் வீட்டு அடிமைகள் கணிசமாக இருந்துள்ளனர். உற்பத்தி செய்யும் உணவு முறை பிரதானமாக இல்லை. எனவே அடிமைகள் வேளாண்மையில் பெரிய பங்காற்றவில்லை. கூலியாட்களும் இடம் பெறவில்லை.
சமூகப் பிரிவினைகள்
இந்தியத் துணைக் கண்டத்திற்குள் வந்த ஆரியர்கள் செவ்விய நிறமுடையவர்களாக இருந்தனர். பூர்வீக இந்திய மக்கள் கருப்பு நிறமாக இருந்துள்ளனர். பூர்வீக மக்களை வென்று அடிமைப்படுத்திய பிறகே சமூகப் பிரிவினைகள் தோற்றம் பெற்றுள்ளது. ரிக் வேதத்தில் வருணம் என்றழைக்கப்படும் நிறம் சமூகப் படிநிலையை இனம்காண ஒரு குறியூடாக இருந்திருக்க வேண்டும்.
ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பூர்வீக கருப்பு மக்களான தாசர்களும் தஸ்யூக்களும் சூத்திரர்களாக நடத்தப்பட்டுள்ளனர். இனத் தலைவர்களும் புரோகிதர்களும் இந்த நடைமுறையில் பெரும் ஆதாயம் அடைந்தனர். இனமரபு சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இவ்வாறுதான் உருவானது. படை வீரர்கள், புரோகிதர்கள், சாமானியர்கள் என மூன்று பிரிவுகள் உருவானது. பின் சூத்திரர் எனப்படும் நான்காவது பிரிவு ரிக் வேத காலத்தின் இறுதியில் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது. இந்த பிரிவு வகை ரிக் வேதத்தில பத்தாவது தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பிற்சேர்க்கையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
தொழில் அடிப்படையிலான பிரிவினையின் ஆரம்ப கட்டமாக ரிக் வேத காலம் அமைந்துள்ளது. புரோகிதர்கள் வீட்டு அடிமைகளையும் பசுக்களையும் மன்னனிடம் இருந்து பரிசுகளாகப் பெற்று வந்த குறிப்புகள் உள்ளன.
கடவுள் / சமயம்
ரிக் வேதத்தில் பல தெய்வங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானவை இந்திரன், அக்னி, வருணன், சோமன். இந்திரன் எனும் கடவுளின் பெயர் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்திரனை புரந்தரன் என்றும் ரிக் வேதத்தில் குறிப்பிடப்படுகிறது. புரந்தரன் என்றால் கோட்டையை இடிப்பவன் என்று பொருள். ஆரியர்களுக்கு முந்தைய மக்களின் கட்டிடங்களையும் நீர்நிலைகளையும் இடித்ததால் இந்த பெயர் பெற்றான் என கூறப்படுகிறது.
தேவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் தூதுவனாக விளங்குவது அக்னி என்று கருதப்படுகிறது. தேவர்களிடம் ஒரு வேண்டுதலை முன்வைக்கும்போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய காணிக்கையான அனைத்து பரிசுகளையும் நெருப்பில் போட்டு சுட்டால் அது புகையாக வானத்தில் உள்ள தேவர்களை அடையும் என்பது ஆரிய மரபு. எனவேதான் வேள்வி, யாகம் செய்வது ரிக் வேத சமூகத்தில் மிக முக்கியமான பங்காற்றியது.
வருணன் என்றழைக்கப்டும் நீரை உருவாக்கும் கடவுள் மூன்றாவது முக்கியமான கடவுளாக பார்க்கப்படுகிறது. இயற்கை ஒழுங்குகளை முறைப்படுத்துபவன் என்றும் உலகில் என்ன நடந்தாலும் வருணனின் செயல்தான் என்றும் கருதப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சோமன் மிக முக்கியமான கடவுள். குறிப்பிட்ட ஒரு தாவரத்தில் இருந்து செய்யப்படும் மதுவகையே சோமம். குடிவெறியூட்டும் இந்த பானம் கடவுளாகக் கருதப்படுகிறது. இந்த மதுவை தயாரிக்கும் வழிமுறை குறித்து விளக்க ரிக் வேதத்தில் பல பாசுரங்கள் இடம் பெற்றுள்ளன.
அதிதி, உஷை போன்ற சில பெண் கடவுள்களையும் வழிபட்டுள்ளனர். ரிக் வேத கால ஆரியர்களின் வழிபாட்டின் மையம் குழந்தைகள், கால்நடைகள், உணவு, செல்வம் போன்றவற்றை வேண்டுவதாகவே அமைந்துள்ளது.
தொடரும்…
இக்கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த பாகத்தில் வெளிவரும்.