இக்கட்டுரை ”ஆதிக்க வேதமரபையும் அவைதிகக் குறளற மரபையும் காலனியாதிக்கம் கையாண்ட கதை” என்ற தலைப்பில் ஆய்வாளர் வே.மு.பொதியவெற்பன் அவர்கள் எழுதி Madras Radicals இணையத்தில் 3-10-2020 அன்று வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சியாகும்.
காலனிய காலத்தில் இந்திய வரலாறு வைதீக மரபினையும், வட இந்தியப் பிரதேசத்தினையும் மட்டுமே மையப்படுத்திய எழுதப்பட்டதன் சிக்கல் என்ன என்ற கேள்விக்கு முதல் பாகத்தில் விரிவான பதிலினை எழுதியிருந்தார்.
அடுத்த கேள்வியாக, ”கடந்த 70 ஆண்டுகளில் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்று அறிஞர்கள் தென்னிந்திய வரலாற்றுக்கு போதிய முக்கியத்துவம் அளித்துள்ளனரா?” என்ற கேள்விக்கான விரிவான பதிலினை பல அறிஞர்கள் அளித்த சான்றுகளின் மேற்கோள்களுடன் இங்கே தொடர்கிறார்.
இல்லாமைக்கு ஏது எதுவெனவும் உடைமை அருமை இத்தகைத்தென்றும் அறியொணாமை
வரலாற்றை அறியாமல் வரலாற்றைப் படைக்க முடியாதென்பார் அண்ணல் அம்பேத்கர். ‘வரலாற்று மெய்ம்மை நாட்டமென சி.வை.தாமோதரனாரும், ‘சரித்திரக்கண்’ எனப் பரிதிமாற் கலைஞரும்,’ சரித்திர விபரங்களை அனுசரித்தல்’ எனப் பிரமிளும் வரலாற்று ஓர்மை குறித்து வலியுறுத்துவர். நம்மிடையே வரலாற்று ஓர்மை போதியஅளவு வாய்த்திலது. நம்முடைய இல்லாமைக்குக் காரணம் இவை எனும் அறிவில்லாமையும்; நம்முடைய உடைமைகளின் பெருமை இனைத்து என உணரொணா அருமை அறியாமையுமே நமைப்பீடித்த பெருங்கேடெனலாம். என்பதனாலேயே ‘தாய்மடி அறியாக் குட்டிகளாய் பூதகி முலைகளில் மோதியே கிடக்குதெம் தமிழினமே!
“எது நம் உண்மையான சொத்தென நம் தலைவர்கள் உட்பட – அறியாமல் இருப்பதே – தமிழர்தம் சோகம்.”
– இரா. குப்புசாமி (திருக்குறளுக்கு ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக ஓகஉரை நூல் வழங்கியவர்)
“தமிழர்கள் பாக்கியசாலிகள். ஆனால் தங்கள் பாக்கியத்தைத் தெரிந்து கொள்ளத்தான் அவர்களுக்குத் தன்மையோ அறிவோ போதுவதில்லை.”
– க.நா.சுப்ரமணியன்.
ஒரு பக்கம் இந்தியாவைப் பற்றி, ‘வேதங்களின் நாடு’ என ஒரு நூலே எழுதுகின்றார் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு. மறுபக்கம் சித்த பூமியாக (‘The Landof Sidh’) நூல் எழுதுகின்றார் சாத்தூர் காசிப்பாண்டியன். முன்னவர் மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர். பின்னவர் சைவசமயச் சார்பினராயிருந்து பின் இஸ்லாத்தைத் தழுவியவர். முன்னாள் மாவட்ட ஆட்சியர். இத்தகு இருமை எதிர்விற்கு ஊடாக மட்டுமே இந்திய இறையியல், மெய்யியல் யாவுமே பட்டடங்கி விடுமா என்ன? நம் பெருமைக்குரிய உடைமைகள் பற்றிய அருமை அறியமாட்டாதாராய் இருப்போர் நம் தலைவர்கள் மட்டுமே அல்லர், நம் மதிப்பிற்குரிய அறிவாண்மையர்களும் கூடத்தாம்:
“நமது மரபு பற்றிய அறியாமையை நமது அறிவுஜீவிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர். இதில் அவர்களுக்கு வெட்கம் இல்லை” “நமது மரபு முழுக்க ‘இந்துமத’ச் சார்பானது, என்பது ராதாகிருஷ்ணன் போன்றோர் செய்த புரட்டு. அதை மதவாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதைப் பெருவாரியோனோர் நம்பும்படிச் செய்வதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களை எதிர்ப்பவர்களும் கூட அதை நம்புகின்றர்.உண்மையில் நம்மரபு சிக்கலானது. பல்வேறுபட்ட உள்ளோட்டங்களும் முரண்களும் உள்ளது. பல்வேறு கருத்துநிலைகள் பின்னி முயங்கி உருவானது. அதை ஒற்றைப்படை ஆக்குவது அதை மறுப்பதற்குச் சமம்தான்.”
– நித்ய சைதன்ய யதி.
இத்தகைய புரிதல்கள் சரிவர வாய்க்கப் பெறாதவரை நாம் நம்முடைய மெய்யியல், இறையியல் வரலாற்றை நம்மால் புரிந்துகொள்ளவே இயலாது. ஆதிக்க சக்திகளையும், விடுவிக்கும் சக்திகளையும் புரிந்துகொண்டாலன்றி எந்த வரலாற்றையும் உள்வாங்கிக் கொள்ள இயலாது.
எங்கிருந்து தொடங்குவது?
எனை வகையான பயில்வு என்னும் போதும் எங்கிருந்து தொடங்குவது என்னும் பாலபாடமே மூலபாடமாம் எனில் ஏன் வரலாற்றெழுதியல் தொடர்பான வினாவிற்கிவர் மெய்யியலில் இருந்தே தொடங்கிட வேண்டும் எனும் வினா இங்கு எழக்கூடுந்தானே? ஏனெனில் அறிவுத்துறையின் பல்வேறு வடிவங்களும் மெய்யியலோடு சங்கமித்திடக் கூடியனவேயாம்.
இத்தொடர்பில் சில எடுத்துரைப்புகள்:
“இருக்குகை விளக்குநூல் தத்துவம் என்ப
இயக்கநூல் சக்திநூல் எனப்பெயர் பெறுமே
உளநூல் தத்துவ நூலோடு ஒக்கும்.”
– சுந்தரனார் (‘நூற்றொகை விளக்கம்’)
“ஐயத்தின் நீங்கித் தெளிதல் என்பது குறித்துப் பொதுஅறிவு வளர்ச்சிக்குப் பொருந்துவதாயினும் சிறப்பாக அது மெய்யியலுக்கே மிகவும் உரியது என்பது தெளிவு. எனவே தொகாப்பியர் தேர்வு- துணிவு எனக் குறிப்பது அறிவுத்துறைக்கும் மெய்யியல் துறைக்கும் ஒரு பொதுத்துறை எனலாம்.”
– க.நெடுஞ்செழியன் (‘தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சாரக சம்ஹிதையும்’)
ஒற்றைப்படையாக்கிவிடும் சாராம்சவாதத்தாலேயே மதவாதிகள் மத்தியிலிருந்து மட்டுமேயன்று ‘பகுத்தறிவின் பயங்கரவாத’த் தரப்புகளுக்கூடாகவும் பிறழ்திரிபான பிழைபாடுகள் நேரவேநேரலாகும் என்பதை இங்கு நான் வலியுறுத்தியே தீரவேண்டியுள்ளது. (இங்கொரு சேதி ‘பகுத்தறிவின் பயங்கரவாதம் ‘எனல் தகுமா? எனுமோர் வினாவும் இங்கெழக் கூடும். ஈதோர் பின்னைநவீனத்துவச் சொல்லாடலே. இதனை தமது அறிதல் முறை மட்டுமே சரியெனும் தத்துவ வழிபாட்டின் வன்முறை எனப் புரிந்துகொள்க.)
இப்பதிவை என்னையே முன்னுறுத்தி நானே சாட்சிபூதமாக எடுத்தாளும் பாங்கிற் தொடுத்துரைக்க இங்கே எத்தனிக்கின்றேன். ‘தமிழில் சிந்தனைமரபு கிடையாது’ எனக் ‘கணையாழி’யில் எழுதினார் இந்திரா பார்த்தசாரதி. அதற்கு எதிர்வினையாகத்தான் ‘இந்திய மெய்ப்பொருளியலும் சமயஞ்சாரா சிந்தனை மரபும்’ என்னும் ஆய்வுத் தொடரை நான் ‘சுந்தரசுகன்’ இதழில் எழுதினேன். அப்புறம் அவைதிகச் சித்தர்மரபு குறித்து மற்றோர் ஆய்வுத் தொடரையும் எழுதினேன்.
என் மதிப்பிற்குரிய பேராசிரியரும் தமிழ் மெய்யியல் ஆய்வு முன்னோடியுமான க.நெடுஞ்செழியனார், “மகிழ்ச்சி பொதியவெற்பன். ஒன்றை மட்டும் நினைவிலிருத்துங்கள், இத்தொடர்பில் தமிழ்மெய்யியலில் இருந்து தொடங்கித் தொடர்வது தானே முறையானதாக இருக்கமுடியும்” என வினாத்தொடு்த்தார்.
அப்போதுதான் ஓருண்மை எனக்குப் பிடிபடலாயிற்று. ஆம் அவ்வாறு தொடங்கப்படாவிடில் அது, திராவிட மொழிநூல் மூதறிஞர் தேவநேயப்பாவாணர் சொல்லுமாப்போலே ” பேரன் பாட்டனைப் பெற்றான் என்றாற்போலும் “எனவாங்கே அன்றோ முடியநேருமென. நான் ‘அவைதிகச்சித்தர்மரபு’ குறித்தும் சுகனில் ஆய்வுத் தொடரை முன்வைத்தேன்.
பின்னர் கீழ்க்காணும் என் ஆய்வு முன்னோடியர் கூற்றுக்கள் எனை அதற்கான ஆய்வில் ஆற்றுப்படுத்தின:
“வைதிகத்திற்கு எதிரான சிந்தனைப் போக்கின் அடிப்படைகளை ஆராய வேண்டுமானால் தொல்காப்பியம் திருக்குறள் ஆகிய இருநூல்களில் இருந்துதான் தொடங்கமுடியும்.”
– க.நெடுஞ்செழியன்
இந்திய பொதுப்பண்பாட்டிற்கு தமிழகம் வழங்கிய கொடைகள்
“தமிழை இந்தியப்புலத்தில் பார்க்கும் பொழுது தமிழில் ஒன்றுமில்லை என்று சொல்கிற ஒரு செல்நெறி குறிப்பாக இடைக்காலத்தின் பின்னர் வளர்வதை நாம் காண்கின்றோம். இத்தகைய ஒரு பின்புலத்தில் தொல்காப்பியத்திற் கூறப்படுவன அதற்கு ஒர் அசாதரண பலத்தைத் தருகின்றன. தொல்காப்பியம் தமிழுக்கான சுட்டுப்புள்ளியாகி (Reference point) விடுகிறது.”
– கா.சிவத்தம்பி(‘ தொல்காப்பியம் பன்முக வாசிப்பு’)
இத்தொடர்பில் தொல்காப்பியம், திருக்குறள்; உரையியல் அகப்படுத்திய. பல்கலைவளாகப் பயிலரங்கில் நான் முன்வைத்த ஆய்வுகளின் தொகுப்பே ‘தமிழின் நிறமும் ஆரியவர்ணமும்’ (2016- ‘விஜயா பதிப்பகம்’). இவ்வாறே சித்த மெய்யியல், மணிமேகலை மெய்யியல் இறையியல்; வேதாந்த , சித்தாந்த இறையியல்; ஆறுமுக நாவலர் ஆகமச்சைவவெறி, இராமலிங்கர் ஆன்மநேயநெறி ஆகிய ஆய்வுகளும்; இதழியல், பதிப்பியல் ஆய்வுகளும் அடங்கிய NCBH வெளியீடாக ‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து..'(2015) எனும் ஆய்வுநூலையும் முன்வைத்துள்ளேன். அவையும் பெரும்பாலும் பல்கலை வளாகப் பயிலரங்கு, புத்தொளி வகுப்புக்கான ஆய்வுகளே.
இவற்றிற்கு ஊடாக இந்தியப் பொதுப்பண்பாட்டிற்கும் இறையியல்,மெய்யியல்களுக்கும் தமிழகம் வழங்கிய கொடைகளும்: தமிழ்ப்பண்பாடு, இறையியல், மெய்யியல் ஆகியவற்றின் தனிச்சிறப்புகளும் விதந்தோதியே என்னால் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பௌத்த ஆய்வு முன்னோடி பேரா. சோ.ந.கந்தசாமியால் இந்தியாவின் முதல் ‘சர்வதர்சன சங்கிரகம்’ எனப் போற்றப்படும் மணிமேகலையின் சமயக்கணக்கர் திறம் கேட்டகாததைப் பற்றிய என் ஆய்வைக் காண்க.
சிற்றிதழ்சார் இலக்கிய நவீனத்துவத்தின் திரிபுகள்
சமூக மறுமலர்ச்சி அசைவியக்கத்தின் துணைவிளைவாகவே தமிழில் நவீன இலக்கிய வடிவங்களும் தோன்றலாயின. தமிழைப் பொறுத்தவரையில் நவீனத்துவம் உள்வாங்கப்பட்டதன் வரலாறு என்பதும் பத்திரிக்கை, சிறுகதை, கவிதை, விமர்சனம் ஆகியவற்றின் வரலாறும் ஒன்றோடொன்று ஊடாடிக் கிடக்கக் கூடியனவே. மேலை அறிவொளிமரபும் தமிழற மரபும் திராவிடஇயக்க வரலாற்றில் தம்முள் சங்கமித்தன.
இத்தொடர்பில் சில எடுத்துரைப்புகள்:
“வள்ளுவர் விதைத்த விதை(தமிழறம்) கபிலரகவலாக, பதினெண் சித்தர்களின் பாட்டுமரபாக, வள்ளலாராக வளர்ந்து பின் பெரியாரியலாகச் செழித்துள்ளது.”
– க.நெடுஞ்செழியன் (‘தமிழர் இயங்கியல் – தொல்காப்பியமும் சாரக சம்ஹிதையும்’)
“பெரியாரின் வெற்றிக்கு ஒரு நீண்ட பிராமண எதிர்ப்புப் பாரம்பரியம் தமிழ் மொழிக்குள் இருந்தது காரணமாகும். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வரி ஒரு நீண்ட பாரம்பரியத்தின் அனுபவ பிரதிவயமாக்கமாகும் (Texualization).”
– தமிழவன் (‘தமிழுணர்வின் வரைபடம்’)
சிற்றிதழ்சார் இலக்கிய நவீனத்துவம் என்பது மேட்டிமை மனோபாவம், சனாதன பீடிப்பு, திராவிடஇயக்க ஒவ்வாமை, இடதுசாரி எதிர்ப்பு இத்தகு அம்சங்கள் ஊடாடியே முகிழ்த்தது. பருக்கைப் பதமாகப் பார்ப்போமே:
“ஒழிக கடவுள்
அழிக சாதி
புரட்சி ஓங்குக
புதுமை தோன்றுக எனக் கூவினாய்
நீயோ, நானோ
மரபான பழைமையும்
முதிர்ந்த நெறியும்
வாய்ந்த நம் வீடு
அந்நியம் ஆவதா
எனக் குமைகின்றேன்.”
– இது தான் சி.சு.செல்லப்பாவின் ‘மாடர்னிட்டி’ கவிதை.
இன்னொரு கவிதை:
“சிவப்பின் மிரட்டல்
பச்சையின் விரட்டல்
வெண்மைக்கு வைத்த உலை
ஆன்மிகத் தூய்மைக்கு விழுந்துள்ள வேர்ப்புழு
நிலைப்பின் ஆட்டம்
மீட்புக்குத் தடுமாற்றம்..”
எனத் தொடரும். இதில் சிவப்பு மார்க்சியம், பச்சை ஃப்ராய்டியம், வெண்மை காந்தியம் குறித்தன.
இத்தொடர்பில் சிற்றிதழ் வரலாறு, திராவிட இயக்க வரலாற்றைத் திரிபு செய்தும் இருட்டடித்தும் குறுக்குச் சாலோட்டியோர் தரப்புகளுக்கு ஆதாரபூர்வமான மறுப்பு என இரு வகைமையிலும் எழுதினேன். சிற்றிதழ் வரலாறு பதிப்பரசியல் தொகுப்பரசியல் குறித்த கட்டுரைகள் ஏலவே சுட்டிய ‘கருமை செம்மை வெண்மையைக் கடந்து’ நூலில் இடம்பெற்றுள்ளன (NCBH வெளியீடு).
“தமிழகத்தில் உருவான திராவிட இயக்கம் குறித்து மாற்றுச் சிந்தனையாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்துவோர் எவ்வாறு பதிவுசெய்கின்றனர், அப்பதிவுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே பொதியவெற்பன் அக்கறையாக இருக்கிறது. இதற்கான உரையாடலை ‘திராவிட இயக்க ஒவ்வாமை நோயிலிருத்த’லில் நிகழ்த்தியுள்ளார்.”
“இந்நூல் வழி இரண்டு துயரங்களைப் பொதியவெற்பன் முன்னிலைப்படுத்துகிறார். அதில் ஒன்று தமிழில், நவீனத்துவ மரபோடு செயல்படுகிறோம் என்று கூறும் சிற்றிதழ்க்காரர்கள் சிலர் திராவிட இயக்கத்தை விமர்சனம் செய்யும் முறைமை: பிறிதொன்று இந்தியமத மரபை எவ்வாறு நாம் எதிர்கொள்வது என்பது குறித்த உரையாடல்”
– வீ.அரசு (‘தோழர் பொதியவெற்பனின் அரைநூற்றாண்டுப் பயணம்’. (NCBH)
இவ்வாறு தனது விரிவான பதிலினை தொகுத்தளித்தார்.