கடலூர்
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகில் உள்ள தெற்கு திட்டை கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமரவைத்து சாதிய ரீதியாக அவமானப்படுத்தியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதன் பின் ஊராட்சி மன்ற செயலாளர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
இரண்டு தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகில் உள்ள ஓலைகுளம் கிராமத்தில் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவரை காலில் விழச் சொல்லி கட்டாயப்படுத்தி காலில் விழச் செய்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏழு பேர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.
மயிலாடுதுறை
இதற்கிடையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஊராட்சித் தலைவராக இருக்கும் பிரியா பெரியசாமி, சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாகக் கூறி மயிலாடுதுறை ஒன்றிய அலுவலகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிரியா பெரியசாமி ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். மன்னம்பந்தல் ஊராட்சி தெற்கு திட்டை ஊராட்சியைப் போல ஆதி திராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்ட தனி ஊராட்சி ஆகும்.
இந்த மாதம் 5-ம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் பிரியா தலைமையில் நடந்த கூட்டத்தில் துணைத் தலைவர் அமலா மற்றும் அவரது கணவர் ராஜகோபால் ஆகியோர் சுழல் நாற்காலியில் அமரக் கூடாது என்று திட்டியதாவும், 1-வது வார்டு உறுப்பினர் மைதிலியின் கணவர் முருகானந்தம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நுழைந்து சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும் போரட்டத்தில் ஈடுபட்டார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் மைதிலியின் கணவர் முருகானந்தம் ஆகியோர் தொடர்ந்து அவரை அவமானப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சரவணன் மற்றும் அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் பிரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் ஊராட்சி செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்வது, சாதி ரீதியாக திட்டி அவமானப்படுத்தியது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பது என்று உறுதி செய்யப்பட்டது.
திருவள்ளூர்
ஹத்ராஸ் சம்பவம் போல ஒரு பழங்குடிப் பெண்ணின் கொலை தமிழகத்தில் நடந்திருப்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அக்கரப்பாக்கம் கிராமத்தில் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த கௌரியின் குடும்பம் பன்றி மேய்க்கும் வேலையை தலைமுறை தலைமுறையாக செய்து வருகின்றனர். 11.10.2020 அன்று மாலை 3 மணிக்கு கன்னிகைபேர் ஏரிக்குள் பன்றிகளை மேய்க்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
அடையாளம் தெரியாத சமூகவிரோதிகளால் கௌரி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் தெரிவித்துள்ளார்.
கௌரியின் கை, கால்கள் உடைக்கப்பட்டுள்ளன. உடலெங்கும் பற்களால் கடித்துக் குதறிய காயங்கள் இருக்கின்றன. இறப்பதற்கு முன் கௌரி எத்தனை கொடூரத்தை எதிர்கொண்டிருப்பார். அவர் அணிந்த்திருந்த தாலியையும் கம்மலையும் கொள்ளையடித்துள்ளனர். கம்மலை களவாட கௌரியின் காதை அறுத்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து நாட்களுக்குள் தமிழகத்தில் நான்கு சாதிய வன்கொடுமை நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் குறுகிய காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தோற்று காலத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் 50-க்கும் மேற்பட்ட வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன.