மதுரைக்கு அருகே கிண்ணிமங்கலத்தில் 2000 வருடங்களுக்கு முந்தைய தமிழி (தமிழ் பிராமி) எழுத்துப் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான ஆய்வுக்குழு இதனைக் கண்டுபிடித்துள்ளது. கூடவே இதற்கு தொடர்புடைய 8 முதல் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டும் இக்குழுவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு தொடர்பான மிக முக்கியமான முடிவுகளுக்கு கிண்ணிமங்கல தொல்லியல் கண்டுபிடிப்பு இட்டுச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை கிண்ணிமங்கலம் சித்தர் மடம்
மதுரைக்கு மேற்கே செக்கானூரணிக்கு அருகிலுள்ளது கிண்ணிமங்கலம். இக்கிராமத்திலுள்ள ஏகநாதர் கோயில் மிகப் பழமையானதாகும். இது இறந்து போனவர்களின் நினைவாக எழுப்பப்படும் நடுகல் மரபைச் சேர்ந்த பள்ளிப்படை கோயிலாகும். இக்கோயிலையொட்டி பழைமையான சித்தர் மடமும் உள்ளது.
’ஏகன் ஆதன் கோட்டம்’ என்று பொறிக்கப்பட்ட விளக்குத் தூண்
பழங்காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானையோடுகள் இப்பகுதிகளில் அதிகம் காணப்படுவதால், காந்திராஜன் தலைமையிலான தொல்லியல் ஆய்வுக் குழுவினர் இப்பகுதிகளில் ஆய்வை மேற்கொண்டனர். தங்களின் ஆய்வின் போது ஏகநாதர் கோயிலில் பயன்படுத்தப்பட்ட பழைய விளக்குத் தூணை கண்டெடுத்தனர். கல்லினாலான இவ்விளக்குத் தூணில் கல்வெட்டு பொறிப்பாக தமிழி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. ”ஏகன் ஆதன் கோட்டம்” என்ற சொற்றொடரே தமிழி எழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டிருக்கிறது என தெரிய வந்துள்ளது.
கீழடி ஓடுகளுடனான தொடர்பு
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானையோடுகளிலும் ஆதன் என்ற சொல் என்ற பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது. கிண்ணிமங்கலமானது கீழடியிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ளது.
இக்கல்வெட்டின் காலம் கி.மு 6-ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 2-ம் நூற்றாண்டிற்குள்ளாக இருக்கலாம் என கூறுகின்றனர். 2000 ஆண்டு பழமையுடைய இக்கல்வெட்டில் தொல்லியல் வரலாற்றில் முதல்முறையாக ’கோட்டம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரம் மற்றும் சங்க இலக்கியங்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ள ’கோட்டம்’ என்ற சொல்லுக்கான முதல் தொல்லியல் சான்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
’இறையிலி’ என்ற வட்டெழுத்து பொறிக்கப்பட்ட சதுரக்கல்
அதற்கடுத்த சில நாட்களிலே அதே பகுதியில் வட்டெழுத்து பொறித்த சதுரக்கல்லையும் இக்குழுவினர் கண்டெடுத்தனர். இக்கல்லில் “இறையிலியாக ஏகநாதர் பள்ளிப்படை மண்டளி ஈந்தார்” என்று வட்டெழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் கி.பி 8 முதல் 9-ம் நூற்றாண்டு வரை இருக்கலாம் என கணக்கிடப்படுகிறது. கிண்ணிமங்கல வட்டெழுத்து கல்வெட்டில் தான் முதன்முறையாக வட்டெழுத்து கல்வெட்டொன்றில் ’இறையிலி’ என்ற வார்த்தை இடம்பெறுகிறது. வட்டெழுத்து கல்வெட்டொன்றில் இறை சிந்தனை தொடர்பாக இடம்பெற்றிருக்கும் ’இறையிலி’ என்ற வார்த்தை சில முக்கியமான வரலாற்று கருதுகோளுக்கு வழிவகுப்பதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழி கல்வெட்டில் குறிப்பிடப்படும் ’ஏகன் ஆதன் (கோட்டம்)’ என்பதனுடைய ஆயிரமாண்டு கால தொடர்ச்சியாக வட்டெழுத்து கல்வெட்டில் ’ஏகநாதர்’ இருக்கிறார் என கூறும் காந்திராஜன், 2000 ஆண்டுளுக்குப் பிறகு இன்றும் அக்கோயில் ஏகநாதர் கோயிலென்றே குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார்.
சித்தர் மரபின் அடையாளமான கிண்ண உருவம்
வட்டெழுத்து கல்வெட்டில் ’மீன் சின்னம்’ மற்றும் ’கிண்ணம்’ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. ”கிண்ணிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட பானையோட்டிலும்’ கிண்ண’ உருவம் பொறிக்கப்பட்டுள்ளது; அதேபோல் மடத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பாத்திரமொன்றிலும் ’கிண்ண’ உருவம் இருக்கிறது; இன்றும் கூட “கிண்ண” அடையாளங்கள் மடத்தின் குறியீடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது; அதன் காரணமாகவே இவ்வூருக்கு கிண்ணிமங்கலம் என பெயர் வந்ததென மடத்தின் குருமார் கூறும் வாய்மொழி வரலாற்றினைக் குறிப்பிடும் காந்திராஜன், கிண்ணிமங்கல மடத்தின் தற்போதைய குருமார் கூறும் வாய்மொழி வரலாற்றின் அடிப்படையில், “’கிண்ணம்’ உருவப் பொறிப்பானது தமிழர் சித்த மருத்துவ மரபு தொடர்பான வரலாற்று கருதுகோளை தருவதாக அமையும் என கூறுகிறார்.
நோய்களைப் போக்கும் இடமாய் செயல்பட்டிருந்த கிண்ணிமங்கல மடம்
தற்போதைய மடத்தின் குருமார் மடத்தினுடைய குருப் பரம்பரையின் 67-வது தலைமுறையைச் சேர்ந்தவராவர். ”கிண்ணிமங்கல மடமானது கலைகள் பயிற்றுவிக்கும் மடமாக செயல்பட்டிருக்கிறது; மிக முக்கியமாக மருத்துவத்தை பயிற்றுவித்து, நோயாளிகளுக்கு மருத்துவம் செய்த இடமாக இருந்திருக்கிறது” என்ற மடத்து குருமாரினுடைய வாய்மொழி வரலாற்றின் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் விதத்தில் கள ஆய்வின் மூலமும் சில சான்றுகளை காந்திராஜன் குழுவினர் கண்டுப்பிடித்திருக்கின்றனர்.
கிண்ணிமங்கலத்திற்கு அருகேயுள்ள நாகமலையில் வாழ்ந்த ஏகநாதரே கிண்ணிமங்கலம் வந்து தங்கி அப்பகுதி மக்களின் பிணியைப் போக்கியதாக கூறப்படுகிறது. ”தங்களின் துன்பங்களை தீர்க்க மக்களெல்லாம் சென்று அங்கு வாழ்ந்த மூத்த சித்தரான ஏகநாதனை கேட்ட பொழுது, மலையில் ஓடிய ஒடையில் தான் வைத்திருந்த கிண்ணத்தை தூக்கி வீசியதாகவும், அந்த கிண்ணம் சேருமிடத்தில் தான் வந்து தங்கி மக்களின் துன்பத்தை போக்குவேன் என்று ஏகநாதர் கூறியதாகவும், அவரின் கிண்ணம் வந்தடைந்த இடமே கிண்ணிமங்கலம்” என்பது மடம் ஆரம்பிக்கப்பட்டதற்கான வாய்மொழி வரலாறாக உள்ளது.
கிண்ணிமங்கல மடத்தோடு வரலாற்றுத் தொடர்புடைய பல மடங்கள்
இன்றும் ஏகநாதரை நாகமலை சாமியாக வழிபடும் மக்கள், நாகமலைசாமிக்கு விளக்குத் தூண் வைத்து ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். இதை நேரில் சென்று களஆய்வு செய்த காந்திராஜன் குழுவினர் கிண்ணிமங்கலத்திற்கும், நாகமலைக்கும் நெருங்கிய தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
கிண்ணிமங்கல மடத்தோடு பல தொடர்புடைய மடங்கள் இருந்ததாகக் கூறும் காந்திராஜன், அப்படியான மடத்தோடு தொடர்புடைய தெங்கல்பட்டி காமாட்சி அம்மன் கோயிலில் ஏகநாதர் தொடர்புடைய சான்றைக் கண்டுபிடித்துள்ளார். கிண்ணிமங்கலத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலிருக்கும் தெங்கல்பட்டியிலுள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வெண்பிறைக் கொண்டையார் சிலையில் “கிண்ணம்” இடம்பெற்றிருக்கிறது. கையில் பேரியாழுடன் உள்ள வெண்பிறைக் கொண்டையாரின் தலையில் சிறிய லிங்க வடிவக் கல்லும் இடம்பெற்றுள்ளது. ”சித்தர் மரபில் இறந்தவர்களின் தலையில் படிகக் கல்லை வைக்கும் வழக்கமுண்டு” எனக் கூறும் காந்திராஜன், ”இச்சிலையை ஏகநாதரின் தொடர்ச்சியாக பார்ப்பதற்கு வாய்ப்பிருப்பதாக” கூறுகிறார்.
ஏகநாதரும் ஐயனாரும் – சித்த மற்றும் ஆசிவக மரபுகள்
அதேபோல அக்கோயிலின் வாயிலில் இரு சிற்பங்கள் உள்ளது. அதில் ஒரு சிற்பத்தினுடைய தலையில் சிறு லிங்க வடிவ கல் உருவமும், கையிலும் அதேப்போன்றதொரு வடிவ கல் உருவமும் இடம்பெற்றிருப்பதையும் காந்திராஜன் குழு கண்டடைந்துள்ளது. இச்சிற்பத்தினை ஏகநாதரென்று மக்கள் அழைக்கின்றனர். மற்றொரு சிற்பம் ஐயனார் சிற்பமாகும்.
ஐயனார் தான் இந்த மடத்திற்கு தலைமை வகித்தவராகவும், ஏகநாதர் அவரின் தலைமையில் செயல்பட்ட ஒருவர் எனவும் கருதுவதாக காந்திராஜன் குறிப்பிடுகிறார்.
வைதீக மரபையும், அதனை வலியுறுத்திய ஆரிய பார்ப்பனர்களையும் தமிழ் சித்தர்கள் தங்களது பாடல்களில் கடுமையாகச் சாடுகின்றனர். தமிழர்களினுடைய ஐயனார் வழிபாடு ஆசிவகம் எனும் அவைதீக தமிழர் மெய்யியல் மரபைச் சேர்ந்ததென பேராசிரியர் நெடுஞ்செழியன் போன்றோர் ஏற்கனவே தங்கள் ஆய்வுகளை முன்வைத்திருக்கின்றனர். இந்நிலையில் சித்த மருத்துவம், சித்த மரபு தொடர்பான பழமையான தொல்லியல் சான்றோடு, ஐயனார் தொடர்புடைய கள ஆய்வையும் காந்திராஜன் குழுவினர் மேற்கொண்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
தொடர்ந்து மறுக்கப்படும் தொல்தமிழ் சமூகத்தின் அறிவு மரபு
தமிழர்களுடைய அறிவுப்புலத்தை வைதீக மரபு சார்ந்ததாக முன்னிறுத்தும் வேலை காலந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழ் மொழி, இலக்கிய, தமிழர் சமூகப் பண்பாட்டுச் சான்றுகள் அடிப்படையில் வைதீக மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட அதற்கு நேரெதிர் மரபே தமிழர் மரபு என்று தமிழர் தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமிழர் மரபு அதன் இயல்பை தாங்கி நிற்கும் சொற்பதங் கொண்டு அமையாமல், வைதீக மரபுத் திணிப்பை மறுக்கும் அதன் எதிர்பதமான ‘அவைதீக’ மரபு என்பதாக அழைக்கப்படுவதிலிருந்தே, தமிழர் மரபை அடையாளப்படுத்துவதிலுள்ள போராட்டத்தை நாம் அறியலாம்.
மேலும் பிரிட்டீஷ் காலனிய அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய தொல்லியல் கல்விப் புலமானது, தமிழ்நாட்டின் அறிவு மரபை வடநாட்டு சமண, பெளத்த அறிவு மரபிலிருந்து தருவிக்கப்பட்டதாக கூறி வருகிறது. இந்திய தொல்லியல் கல்விப் புலத்தின் வழிநின்று, தொல்தமிழ்ச் சமூகத்தின் சுயாதீனமான அறிவு மரபை மறுக்கும் போக்கு இருந்து வருகிறது. தமிழர் மெய்யியல் மரபானது ஆசீவக மரபு போன்ற சுயாதீனமான அறிவு மரபு என பேராசிரியர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை முன் வைக்கின்றனர். இந்திய தொல்லியல் அறிவுப் புலத்தின் வழிவந்த ஆய்வாளர்களோ அதனை சமண மரபு என கூறுகின்றனர். தமிழ் ஆய்வுலகத்தின் ஒரு பகுதியினர் அதனை மறுக்கின்ற போதும், தொல்லியல் கல்விப்புல மதிப்பீட்டோடு அதனை நிறுவுவதற்குரிய வாய்ப்புகள் அமையவில்லை.
ஆசிவக மற்றும் சித்தர் மரபுகளுக்கிடையிலான ஒருங்கமைவை வெளிப்படுத்தும் கிண்ணிமங்கலம்
தற்போது கிண்னிமங்கலத்தில், ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான ஆய்வுக் குழுவினரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள், ஆய்வுலகில் தமிழர்களினுடைய சுயாதீனமான அறிவு மரபு குறித்த விவாதத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்குரியதாக அமைந்திருக்கிறது. தன் ஆய்வினுடைய கருதுகோளின் அடிப்படையில், ‘சமணப்படுகைகளாக அழைக்கப்படுபவை எதிர்காலத்தில் சித்தர் படுகைகளாக அழைக்கின்ற சூழல் உருவாகும்’ என காந்திராஜன் குறிப்பிடுகிறார்.
தமிழர் மெய்யியலுக்குள்ளாகவே நிறுவனமயமான ஆசிவக மற்றும் நிறுவனமயமற்ற சித்தர் மரபுகளுக்கிடையேயுள்ள ஒருங்கமைவுகளை கிண்ணிமங்கல ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தக்கூடும். தமிழர்களுடைய பழைமையான நகர நாகரீகத்தை வெளிக்கொணருதல் என்ற அடிப்படையில் கீழடியில் நடைபெறும் அகழாய்வுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுபோல தமிழர்களினுடைய அறிவு மரபு, தமிழர் மெய்யியல் மரபு தொடர்பான தொல்லியல் சான்றுகளை வெளிக்கொணரும் தொல்லியல் ஆய்வாக கிண்ணிமங்கல ஆய்வு அமைய வாய்ப்பிருக்கிறது.
மிக சிறப்பான இடுகைகள் . தொடரட்டும் உங்கள் பணி.
மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருங்கள்.