தொலைக்காட்சி டி.ஆர்.பி ரேட்டிங் (TRP – Television Rating Point) -ல் முதல் இடத்தில் வருவதற்காக ரிபப்ளிக் டிவி மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு வெளிவந்திருக்கிறது. BARC எனப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சில் இந்தியா நிறுவனம் ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
டி.ஆர்.பி ரேட்டிங் என்பது என்ன?
டி.ஆர்.பி என்பது ஒவ்வொரு தொலைக்காட்சி சேனலையும் எவ்வளவு நேரம், எந்தெந்த சமூக மற்றும் பொருளாதார பின்புலம் கொண்ட மக்கள் பார்க்கிறார்கள் என்பதன் அடிப்படையில் வழங்கப்படும் புள்ளிகளின் மதிப்பாகும். இந்தியா முழுவதும் 30,000 வீடுகளில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு இந்த ரேட்டிங்கிற்கான புள்ளிகள் கணக்கிடப்படுகின்றன. இந்த தரவரிசைப் பட்டியலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருக்கும் சேனல்தான் மக்களின் ஆதரவினை அதிகம் பெற்ற சேனலாக கருதப்படும்.
இந்த பட்டியலில் ரிபப்ளிக் டிவியே தொடர்ச்சியாக முதலிடத்தில் இருந்து வருகிறது. மும்பையில் BARC நிறுவனம் பயன்படுத்தும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் ரிபப்ளிக் டி.வியை அதிக டி.ஆர்.பி பெற்றதாக காட்டும் வேலை நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
BARC நிறுவனம் ரேட்டிங் மதிப்பீடு செய்வதற்கு என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. BARC நிறுவனத்தின் இந்த ரேட்டிங் மதிப்பீட்டின் அடிப்படையில்தான் பல சேனல்கள் தங்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை திட்டமிடுகின்றன. மேலும் இந்த ரேட்டிங் அடிப்படையில்தான் ஒரு சேனலுக்கு விளம்பரம் அளிப்பதா இல்லையா என்பதை பல நிறுவனங்கள் முடிவெடுக்கின்றன. விளம்பரத்திற்கான பணத்தின் அளவு என்பதும் இந்த ரேட்டிங் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படும்.
டி.ஆர்.பி மோசடி எப்படி நடத்தப்பட்டது?
டி.ஆர்.பி புள்ளிகள் கணக்கிடும் மீட்டர்கள் பொருத்தப்பட்ட வீடுகளைக் கண்டறிந்து அவர்களிடம் பணம் கொடுத்து தொடர்ச்சியாக ரிபப்ளிக் சேனலை ஆன் செய்து வைத்திருக்கும்படி சொல்லி அதன் மூலம் தனது ரேட்டிங்கை உயர்த்திக் காட்டும் மோசடியை ரிபப்ளிக் சேனல் செய்திருப்பதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. யாருமே பார்க்காதபோதும் டிவியை ஆன் செய்து வைத்திருக்கச் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவுகளை வைத்து பார்க்கும்போது, படிக்கத் தெரியாத ஏழை மக்களின் வீடுகளில் தொடர்ச்சியாக ஆங்கில செய்தி சேனல் ஓடிக் கொண்டிருந்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் இப்படி தொலைக்காட்சியை ஆன் செய்து வைத்திருக்க மாதந்தோறும் 400 முதல் 500 ரூபாய் வழங்கியிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தொலைக்காட்சி நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஆங்கில செய்தி சேனல்களின் ரேட்டிங்
ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பொதுவாக தேசிய அளவில் குறைவான பார்வையாளர்களையே கொண்டிருக்கின்றன. 1.5% சதவீதம் மக்கள் மட்டுமே இவற்றின் பார்வையாளர்களாக உள்ளனர். அதாவது மொத்தமுள்ள மீட்டர் பொருத்தப்பட்ட வீடுகளில் 700 வீடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆங்கில செய்தி சேனல்களை பார்ப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களும் தினமும் பார்க்கக் கூடியவர்களாக இல்லை. மீட்டர்கள் பொருத்தப்பட்ட வீடுகளில் ஏறக்குறைய 350 வீடுகளில் மட்டுமே ஆங்கில செய்தி சேனல்கள் பார்க்கப்படுகின்றன. இந்த எண்ணிக்கையில் ஒரு சிறிய அளவிலான வீடுகளில் ஒரு சேனலை தொடர்ச்சியாக பார்க்கும்படி செய்தாலே ரேட்டிங்கில் பெரிய அளவிலான மாற்றத்தினைக் காட்ட முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
ரிபப்ளிக் சேனலின் பொறுப்பாளர் விரைவில் கைது செய்யப்படுவார் என மும்பை காவல்துறை அறிவிப்பு
இந்த சாதனங்களை நிர்வகிப்பதற்காக BARC நிறுவனம் ஹன்சா ரிசர்ச் எனும் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தினை வழங்கி நியமித்திருந்தது. BARC நிறுவனமும், ஹன்சா ரிசர்ச் நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட விசாரணை ஒன்றில் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் இப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது என ஹன்சா ரிசர்ச் நிறுவனத்தின் CEO பிரவீன் நிஜாரா தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து கருத்து தெரிவித்துள்ள மும்பை காவல்துறை, ரிபப்ளிக் டிவி மற்றும் இரண்டு மராத்தி சேனல்கள் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக இரண்டு மராத்தி சேனல்களின் அதிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரிபப்ளிக் சேனலைச் சேர்ந்த ஒருவரும் விரைவில் கைது செய்யப்படுவார் என்று மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ரிபப்ளிக் டிவியின் எடிட்டரான அர்னாப் கோஸ்வாமி, நடிகர் சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை காவல்துறையை நோக்கி கேள்விகளை எழுப்பியதற்காக காவல்துறை தங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளை வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மும்பை காவல்துறை ஆணையர் மீது அவதூறு வழக்கு தொடருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ரிபப்ளிக் மீதான குற்றச்சாட்டை அடுத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஊடக சுதந்திரத்தின் மீது காங்கிரஸ் கட்சி தாக்குதல் நடத்துவதாக தெரிவித்துள்ளார்.
என்.டி.டி.வி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த காவல்துறை ஆணையர், ஹன்சா ரிசர்ச் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது காவல்துறை தானாக பதிந்த வழக்கல்ல. ரேட்டிங் புள்ளிகளில் சந்தேகத்திற்குரிய உயர்வுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தான் விவரங்களுடன் புகாரினை அளித்தனர். விசாரணையின் போது பலரும் ரிபப்ளிக் சேனலின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதால் தான் அந்த நிறுவனத்தை நோக்கி விசாரணைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.