சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புப் பதிவு – Madras Review
சிவகங்கை இராமச்சந்திரன் 1884 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று பிறந்தார். திருவனந்தபுரம் உயர்நிலைப் பள்ளியில் பயின்று மெட்ரிக்குலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். மதுரையிலும் பின்னர் திருச்சியிலும் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார்.
1913 இல் சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டம் படித்தார். இரண்டு ஆண்டுகள் கல்விக்குப்பின் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். மதுரையில் தம் வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். 1916இல் தம் சொந்த ஊரான சிவகங்கைக்கு திரும்பி அங்கேயே வழக்குரைஞராகப் பணியாற்றினார்.
சுயமரியாதை மாநாடுகளில்
சுயமரியாதை இயக்கத்தின் 1929 செங்கற்பட்டு மாநில மாநாட்டில் பங்குபெற்று, பெரியாரின் பாதையில் தம் சாதிப் பெயரை நீக்கி, “சிவகங்கை இராமச்சந்திரன் சேர்வை ஆகிய நான், இன்றுமுதல் சிவகங்கை இராமச்சந்திரன் என்றே அழைக்கப்படுவேன்” என்று சூளுரைத்து சாதியைத் துறந்தவர்.
1929-ம் ஆண்டு திருநெல்வேலி மாநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டிற்கு இராமச்சந்தினார் தாம் தலைமை தாங்கினார். 1930 இல் விருதுநகரில் நடைபெற்ற மூன்றாவது சுயமரியாதை மாநாட்டிலும் இராமச்சந்திரனார் சாதி ஒழிப்பிற்காக பேருரை ஆற்றி மக்களை சாதியில்லா பாதையில் நடைபோடச் செய்தார்.
தேடிவந்த அமைச்சர் பதவியை மறுத்தார்
1930 ஆம் ஆண்டு அக்டோபரில் முனுசாமி நாயுடு தலைமையில் அமைந்த நீதிக்கட்சி அமைச்சரவையில் பங்கேற்க வருமாறு சிவகங்கை இராமச்சந்திரனுக்கு அழைப்பு வந்தபோதிலும் தந்தை பெரியாரின் அறிவுரையின்படி அப்பதவியை அவர் நாடிச் செல்லவில்லை. சுயமரியாதை இயக்கத்துக்கு தன் வாழ்வை முழுவதும் ஒப்படைத்துக் கொண்டார்.
சாதி வேறுபாடுகளை எதிர்த்து போராடினார்
அவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த காலத்தில் குடிநீர் பானைகளிலும் சாதி வேறுபாடுகள் காட்டப்பட்டன. அவ்வழக்கத்தை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார்.
இரவுநேரப் பள்ளிகளைத் தொடங்கி, உழைக்கும் மக்களுக்குக் கல்வியறிவு புகட்டியவர். தம் சொந்த வருவாயில் பெரும்பகுதியை இந்தப் பணிக்காகச் செலவிட்ட வள்ளல்.
தேவகோட்டைக்குப் பக்கத்தில் இரவுசேரிநாடு பகுதியில் ஆதிக்க சாதி அம்பலக்காரர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கும் கடும் மோதல் அக்காலத்தில் உருவாகிவிட்டது. ஆதிதிராவிட ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து நடந்த கிளர்ச்சி மோதலாக வளர்ந்துவிட்ட நிலையில், சிவகங்கை இராமச்சந்திரன் உயிரைத் துச்சமெனக் கருதி, கலவரப் பகுதிக்குச் சென்று இரு தரப்பினரிடமும் பேசி, சுமூக நிலையை உருவாக்கினார். சட்டப்பிரிவு 144 இன் கீழ் தடை ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலும், எந்த மோதலும் நடக்காமல் தீர்த்து வைத்த பெருமைக்கு உரியவர்.
மாணவர் விடுதிகளில் பார்ப்பனரல்லதா மாணவர்களை சேர்க்கும் உரிமையை பெற்றுத்தந்தார்
சிவகங்கை மன்னரின் சத்திரம் மாணவர் விடுதியிலும், பிற நகரங்களில் உள்ள மாணவர் விடுதிகளிலும் பார்ப்பன மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். இராமச்சந்திரனார், தமிழர்கள் தமிழ்நாட்டில் கட்டும் விடுதிகளில் தமிழின மாணவர்கள் சேர்க்கப்படாமை கொடுமை என இதனை எதிர்த்துப் போராடினார். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பிற நகரங்களில் உள்ள மாணாக்கர் விடுதிகளிலும் தாழ்த்தப்பட்ட மாணாக்கர்களும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களும் சேர்க்கப்பட்டனர். திராவிட இயக்கத்தின் சமத்துவ சமூகத்திற்கான இப்பணி இல்லையேல் பிற வகுப்பினர் கல்வி வாய்ப்பையும் அதன் அடிப்படையில் வேலைவாய்ப்பையும் தொழில் வாய்ப்பையும் இழந்திருப்பர்.
வழக்கறிஞராகவும், தந்தை பெரியாரின் தோழராகவும், சாதி ஒழிப்பில் முனைப்பாளராகவும், தென்தமிழ்நாட்டில் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்கியவர். ஆதி திராவிடத் தமிழர்களும் தாழ்த்தப்பட்டோரும் கோவில்களில் தடையின்றி சென்று வழிபட பாடுபட்டார். தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற இரவுப் பள்ளிகளைத் தம் சொந்தச் செலவில் கட்டி அவர்கள் கல்வியறிவு பெற உதவினார்..
ஆதிதிராவிட மாநாடு நடத்தி சொந்தசாதியினரால் வன்முறைக்கு ஆளானார்
சாதிய நம்பிக்கைகள் புரையோடிக் கிடந்த இராமநாதபுரத்தில் “ஆதிதிராவிட மகாநாடு” நடத்தி தன் சொந்த சாதி மக்களால் கல்லெறி வாங்கி வன்முறைக்கு ஆளானார் இராமச்சந்திரன்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக துப்பாக்கியுடன் களத்திற்கு சென்றார்
தேவகோட்டையில் ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டோரைத் தாக்கினால், அதே பகுதியில் வாழ்ந்த சிவகங்கை இராமச்சந்திரன் துப்பாக்கியுடன் களத்திற்குச் சென்று தாழ்த்தப்பட்டோர் பக்கம் நிற்பார். சுயமரியாதை இயக்கத்தையும் அதன் ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கைகளையும் ஆதிக்க சாதிகள் கடுமையாக எதிர்த்தனர். தடைகள் போட்டுக்கொண்டிருந்தனர். அதேநேரத்தில் எந்தப் பகுதியில் எந்த ஜாதி ஆதிக்கத்தில் இருக்குமோ, அந்த ஜாதியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கத் தோழர்களே அந்த எதிர்ப்புகளை முன்னின்று தாங்கிக் கொண்டனர்.
சிவகங்கை இராமச்சந்திரனார் 49 ஆண்டுகள் வாழ்ந்து 1933-ம் ஆண்டு பிப்பிரவரி 26-ம் தேதி அன்று காலமானார். சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.