கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் நாட்டு மாக்களுக்கு அரசு பொது மருத்துவமனைகள் பாதுகாப்பு அரணாக விழங்கியுள்ளது . பொது சுகாதார கட்டமைப்பில் இந்திய அளவில் தமிழகம் முன்னனியில் இருக்கிறது. மக்களுக்கு சேவையாற்றுவதில் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு மருத்துவமனைகள் செய்துள்ளன.
அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா காலத்தில் 28,000 ஸ்கேன் எடுத்திருக்கிறார்கள்.அதாவது சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 5 ஸ்கேன்.அதாவது 24 மணி நேரமும் ஸ்கேன் எடுத்துள்ளனர்.
இதே போல சென்னையில் உள்ள ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய் தொற்று காலத்தில் மட்டும் கிட்ட தட்ட 17,000 CT ஸ்கேன் மற்றும் 16,000 X-ray ஸ்கேன் என மொத்தம் 33,000 ஸ்கேன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையின் சாதனைகள்
ஐந்து மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அதில் 22 சுகப்பிரசவமும் 78 அறுவை சிகிச்சை பிரசவங்களும் அடங்கும்.
பிறந்த 100 குழந்தைகளில் இருவருக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டது. மீதமுள்ள 98 குழந்தைகளுக்கும் கொரோனா நோய்த்தொற்று இல்லை.
அதுமட்டுமல்லாமல், பிற மருத்துவமனைகளில் பிரசவம் முடிந்த பிறகு குழந்தைகளுடன் கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்ட 44 தாய்மார்களும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.
இந்த 44 பேரில் ஒரு குழந்தைக்கு மட்டுமே கொரோனா நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் அக்குழந்தையும் நலமுடன் உள்ளது.
ஊரடங்கு அறிவிக்கபட்டது முதல் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 144 தாய்மார்களுக்கும் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. என்று செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் 64 பிரசவங்கள்
இதே பெருந்தொற்று காலத்தில் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து சாதனை படைத்துள்ளது.
சென்னை எழும்பூரில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை 1,075 படுக்கைகளுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவசர சிகிச்சைக்காக தினசரி ஆயிரக்கணக்கான தாய்மார்கள் இங்கு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த மருத்துவமனையில் 27.10.2020 நள்ளிரவு 12மணி முதல் 28.10.2020 நள்ளிரவு 12மணி வரை 24 மணி நேரத்தில் மட்டும் 64 தாய்மார்களுக்கு பிரசவம் பார்த்து மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.
24 பெண் குழந்தைகளும், 40 ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளனர். இதில் ஒரு இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 34 பிரசவங்கள் அறுவை சிகிச்சை முறையிலும், மற்றவை சுகப்பிரசவமாகவும் நடைபெற்றது. தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக நலமுடன் உள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 4 தாய்மார்களும் எவ்வித சிக்கல்களும் இல்லாமல் குழந்தையை பெற்றுள்ளனர்.
ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அரசு மருத்துவமனை.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாலை ஓரங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட 30 ஆதரவற்றவர்களுக்கு வீடாகவே மாறி அடைக்கலம் கொடுத்து சிகிச்சை அளித்தது.
இவர்களில் பலர் சாலை ஓரங்களில் சுயநினைவின்றி கிடந்தவர்கள் மற்றும் காவல்துறை மற்றும் நண்பர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் ஆவர். ஆனால் இதில் பெரும்பாலானோருக்கு குடும்பங்கள், நெருங்கியவர்கள் என யாரும் இல்லாத ஆதரவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
பெரும்பாலானோர் 55 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், 50% மேற்பட்டவர்கள் வயது மூப்பு தொடர்பான பிரச்சனைகளான மூட்டு வீக்கம்,எலும்பு முறிவு, நீரிழிவு மற்றும் பாக்டீரியாவில் ஏற்படும் ரத்ததொற்று போன்ற நோய்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதய சிகிச்சையில் சாதனை
இந்தப் பேரிடர்க் காலத்தில் கோவை அரசு மருத்துவமனையின் இதயவியல் துறையில் 17 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களுக்கு 2 மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 614 மாரடைப்பு நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
214 பேருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
49 நபர்களுக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட்டி ஸ்டென்ட் பொருத்துதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயத் துடிப்பு குறைபாடு உள்ள 2 பேருக்கு நிரந்தர பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
2,956 பேருக்கு எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பல தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை அனுமதிக்காத காலகட்டத்தில் இந்த சேவையை அரசு மருத்துவமனைகள் செய்துள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவமனையின் சேவை
நெல்லை தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இங்கு உள்ள தனி பிரசவ வார்டில் நாள் தோறும் சராசரியாக 20 பிரசவங்கள் நடைபெற்று வந்தன. பல ஆண்டுகளாக இந்த சராசரி நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி 144 தடை உத்தரவுக்கு பின்னர் கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக பல தனியார் மருத்துவமனைகள் புதிதாக நோயாளிகளை சேர்க்கவில்லை. இதனால் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பினிகள் எண்ணிக்கை அதிகமானது .
மே மாதத்தில் மட்டும் 837 பிரசவங்கள் நடந்துள்ளன. இது இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்தில் நடந்த அதிகபட்ச பிரசவ எண்ணிக்கையாகும்.
இதற்கு முன்னர் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 600 முதல் 700க்கு உள்பட்ட எண்ணிக்கையிலேயே பிரசவங்கள் நடந்துள்ளன.
மே மாதம் தினமும் சராசரியாக 25 பிரசவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பிரசவங்கள் பெண் மருத்துவ சிகிச்சை நிபுணர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
837 பிரசவங்களில் 354 பிரசவங்கள் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளன. மற்ற அனைத்து குழந்தைகளுமே சுகப்பிரசவமாக பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
நாளொன்றுக்கு சராசரியாக 10 அறுவை சிகிச்சை பிரசவங்கள் டாக்டர்களால் கவனிக்கப்பட்டுள்ளன. இதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இங்கு மே மாதம் பிரசவசம் நடந்த பெண்களில் கொரோனா பாதிப்பு அல்லது கொரோனா அறிகுறியுள்ள ஆறு பெண்களுக்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டது.
இங்கு குறிப்பிட்டுள்ளவை சில உதாரணங்கள் மட்டுமே. பெருந்தொற்றிலும், நெருக்கடியான நேரங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு மருத்துவமனைகளுமே துணைக்கு நின்றுள்ளன என்பது நிருபனமாகிறது.