ஏறத்தாழ 93 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் எரிக்கப்பட்டது. 1927-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் பகுதியில் உள்ள மஹாத் எனும் இடத்தில் மனிதகுலத்திற்கு விரோதமான மனுநீதியை அம்பேத்கர் எரித்தார். அந்த நாள் “மனுஸ்மிருதி தஹான் தின்” என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு தலித் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த நாளில் மனுதர்ம நூலை எரித்து சாதிய ஏற்றத்தாழ்விற்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் தலித்துகள் குளத்தைப் பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கனில் உள்ள மஹாத் பகுதியில் சித்பவன் பார்ப்பனர்கள் அதிகமாக வசிக்கின்றனர். காந்தியைக் கொன்ற கோட்சே, அதற்கு திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சாவர்க்கர் ஆகியோர் இந்த சித்பவன் பார்ப்பன சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மகத் நகரின் சவுதார் குளத்தை தலித்துகள் பயன்படுத்த தடை செய்யப்பட்டிருந்தது. அந்த தடையை நீக்குவதற்காக 1924-ம் ஆண்டு நகர சபை முடிவெடுத்தது. அதை நிறைவேற்ற சித்பவன் பார்ப்பனர்களும் மற்ற சாதிய இந்துக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
அம்பேத்கர் தலைமையில் குளத்தில் தண்ணீர் அருந்தும் போராட்டம்
பெரும் போராட்டத்திற்குப் பிறகு 1927-ம் ஆண்டு மார்ச் மாதம் 20-ம் தேதி அம்பேத்கர் தலைமையிலான குழு சவுதார் குளத்தில் நீர் அருந்தி தடையை முறித்தனர். அந்த குளம் தீட்டுபட்டு விட்டது என்று கூறி பார்ப்பனர்கள் தலைமையில் சாதிய இந்துக்கள் ஒன்றுகூடி பால், தயிர், மாட்டு சாணம் மற்றும் மாட்டு மூத்திரத்தை குளத்தில் ஊற்றி பரிகாரம் செய்து தீட்டைக் கழித்ததாகக் கூறிக்கொண்டனர்.
தலித்துகள் தண்ணீர் எடுக்க மீண்டும் தடை பெற்ற பார்ப்பனர்கள்
தலித்துகள் பயன்படுத்த உத்தரவிடப்பட்ட தீர்மானத்தை 1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி நகரசபை ரத்து செய்தது. பொது குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பதை எதிர்த்து பார்ப்பனர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் தடையாணையைப் பெற்றிருந்தனர். இதனை எதிர்த்து டிசம்பர் மாதம் 25 மற்றும் 26 அன்று அமைதிவழியில் ஒரு போராட்டம் நடத்த தலித் அமைப்புகளால் திட்டமிடப்பட்டது. அந்த மாநாடு நடத்த இடம் தராமல் பல தடைகளை சாதிய சக்திகள் உருவாக்கியது.
இரண்டு நாள் போராட்டம்
போராட்டம் நடத்த இடம் கிடைக்காத அந்த சூழ்நிலையில் ஃபத்தேகன் என்ற இஸ்லாமியர் தனது இடத்தை வழங்கி போராட்டத்தை நடத்த உதவி செய்தார். மேலும் போராட்டம் நடத்த தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்க தடை செய்தனர். அதையும் தாண்டி அந்த போராட்டத்தைத் துவங்கினார்கள்.
“இருண்ட காலத்தில் இயற்றப்பட்ட சாஸ்திரங்களுக்கும், ஸ்மிருதிகளுக்கும் நாம் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை!” என்ற அம்பேத்கரின் முழக்கம் மக்களை ஆர்ப்பரிக்கச் செய்தது. பின்வரும் உறுதிமொழியுடன் அந்தப் போராட்டம் வெற்றிகரமாக துவங்கியது.
போராட்டத்தின் உறுதிமொழிகள்
- பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சதுர்வர்ணத்தை நான் நம்பவில்லை.
- சாதி வேறுபாடுகளை நான் நம்பவில்லை.
- தீண்டாமை என்பது இந்து மதத்திற்கு ஒரு களங்கம் என்று நான் நம்புகிறேன். அதை முற்றிலுமாக அழிக்க நான் நேர்மையாக முயற்சிப்பேன்.
- உணவு மற்றும் குடிநீர் குறித்து யாரிடமும் எந்த வேறுபாட்டையும் நான் பின்பற்ற மாட்டேன்.
- கோயில்கள், நீர் நிலைகள், பள்ளிகள் மற்றும் அனைத்து வசதிகளையும் பெற தீண்டத்தகாதவர்களுக்கு சம உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.
எரிக்கப்பட்ட மனுதர்மம்
மாநாட்டு பந்தலின் முன்புறம் மனுதர்ம நூலை எரிப்பதற்காக வேள்வியைப் போன்ற ஒரு பெரிய நெருப்பு குண்டம் உருவாக்கப்பட்டது. அதற்கு பக்கத்தில் தட்டிகளில் மனுஸ்மிருதி சி தஹான் பூமி (மனு ஸ்மிருதிக்கான தகனம்) என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு பக்கத்தில் தீண்டாமையை அழியுங்கள், பார்ப்பனியத்தை புதைத்துவிடுங்கள் என்ற வாசம் பொறித்த தட்டிகளும் இருந்தன. டிசம்பர் 25-ம் தேதி மாலை மாநாட்டில் மனுதர்மத்தை எரிப்பதற்கான தீர்மானத்தை நீல்காந்த் சஹஸ்த்ரபுதே, பி.என்.ராஜபோஜ் ஆகியோர் முன்மொழிந்தனர். அதை ஏற்றுக்கொண்டு டாக்டர் அம்பேத்கர் தலைமையில் மனுதர்ம நூல் வேள்வியில் போட்டு எரிக்கப்பட்டது.
ஏன் மனுதர்மத்தை எரிக்க வேண்டும் என்பது குறித்து டாக்டர் அம்பேத்கரின் முக்கிய குறிப்புகள்
- சமபந்தி உணவு, கோயில் நுழைவு மற்றும் குடிநீர் எடுக்கும் உரிமையைப் பெறுவது மட்டுமல்ல நமது நோக்கம் சமூகத்தில் சமத்துவமின்மையை போதிக்கும் வர்ணக் கோட்பாடுகளை உடைத்து நொறுக்குவதுதான் நமது முக்கிய நோக்கம்.
- மனுதர்மத்தை எரித்தது முற்றிலும் திட்டமிட்ட ஒரு நிகழ்வே. நூற்றாண்டுகளாக எங்களுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதியின் சின்னமாக மனுதர்மத்தை கருதியதாலேயே நாங்கள் எரித்தோம். அதன் போதனையின் காரணமாகவே நாங்கள் கொடுமைக்கு, உள்ளாகியுள்ளோம்.
- சாதிகளுக்கு இடையிலான திருமணங்களைத் தடை செய்வதில் தான் தீண்டாமையின் வேர் உள்ளது. அதை நாம் உடைக்க வேண்டும்.
- சமூகத்தில் அமைதியாக புரட்சி ஏற்பட வேண்டும் என்றால் பிரிவினையை போதிக்கும் சாஸ்திரங்களை கைவிட்டு உயர்சாதியினர் சமூகநீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- வர்ண அமைப்பு இருக்கும்வரை பார்ப்பன ஆதிக்கம் உறுதி பெரும். எனவே வர்ணத்தை ஒழித்தால்தான் சமத்துவம் பேணமுடியும்.
- மனுதர்மத்தைப் போற்றும் எவரும் தீண்டத்தகாதவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்ட முடியும் என்று நம்புவது பயனற்றது
டாக்டர் அம்பேத்கர் மகாத் குளத்தில் நீர் எடுக்கும் உரிமையை ஒரு அடையாளப் போராட்டமாக ஏற்றார். உண்மையில் அவர் வர்ண முறையை ஒழித்து சுயமரியாதையை பேணுவதற்குமான ஒரு தொடக்கப் புள்ளியாகவே அந்த போராட்டத்தைத் துவக்கினார்.
தீண்டத்தகாதவர்களாக வைக்கப்பட்ட மக்களின் நீண்டகால இலக்குகளை அடைவதற்கான தொடக்கப் புள்ளியின் குறியீடாகவே அந்த போராட்டத்தை வடிவமைத்தார். அந்த இலக்கும் இன்னும் எட்டப்படாமலே இருக்கிறது என்பதுதான் இன்றைய எதார்த்தம்.