தையல் தொழிலாளியான தாய்க்கும், மெக்கானிக் தந்தைக்கும் பிறந்து பள்ளி இறுதி வகுப்பில் மாநிலத்திலேயே மூன்றாவது மாணவியாக வந்தவர் ஐஸ்வர்யா. இவர் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்” அறிவியல் பயிலும் இளம்பெண்களுக்கான INSPIRE ஊக்கத்தொகையை வென்று திறமையான மாணவியாக தேர்தெடுக்கப்பட்டவர். மோடி அரசின் தவறான நடவடிக்கையால் இன்று தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ஐஸ்வர்யாவின் பெற்றோரான சுமதி ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் ஊரடங்கு உருவாக்கிய கடுமையான ஏழ்மையினால் ஒரு முக்கிய முடிவை எடுக்கின்றனர். குடும்பத்தின் மோசமான நிலையை சீராக்க தங்கள் இரண்டே அறைகளைக் கொண்ட வீட்டினை விற்கவும், சுமதியின் நகைகளை அடகு வைக்கவும் எடுத்த முடிவே அது.
இந்த முடிவு மூத்த மகளான ஐஸ்வர்யாவை வேதனைக்குள்ளாக்கியுள்ளது. புதுடெல்லியின் புகழ்பெற்ற லேடி ஸ்ரீராம் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதம் பயிலும் மாணவியான ஐஸ்வர்யா தன்னுடயை கல்வி தன் குடும்பத்திற்கு ஒரு பொருளாதாரச் சுமையாக இருப்பதாகக் கருதியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து நவம்பர் இரண்டாம் நாள் ஏறத்தாழ 8 மணி அளவில் தன் அறையில் கதவை மூடிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.
நிதிச் சுமையாக மாறிய கல்வி
தன் மரணத்திற்கு யாரும் பொறுப்பல்ல என்று கூறியுள்ள ஐஸ்வர்யா, தெலுங்கில் எழுதப்பட்ட தன் தற்கொலைக் குறிப்பில், “என் குடும்பம் எனக்காக நிறைய பணம் செலவு செய்துள்ளது. நான் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கிறேன். என் படிப்பும் அவர்களுக்கு ஒரு சுமையாக இருக்கிறது. ஆனால் படிப்பை விடுத்து என்னால் வாழ இயலாது. இந்த முடிவை நான் நீண்ட நாளாக பரிசீலித்து வருகிறேன். இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு தற்கொலைதான்” என்று எழுதியுள்ளார்.
ஐஸ்வர்யாவின் இறப்பு மோசமாக நிகழ்ந்ததற்கு பொது முடக்கத்தோடு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது மோடி அரசின் கல்விக் கொள்கை. பல இந்திய இளைஞர்கள் தங்களின் ஏழ்மையைப் போக்க ஒரே நம்பிக்கையாகக் கருதும் அரசின் கல்வி உதவித் தொகையை மோடி அரசு பல காலமாக திட்டமிட்டு குறைத்தும், பொதுக் கல்வியைத் தனியார்மயப்படுத்தியும் வருகிறது.
இது குறித்து எல்.எஸ்.ஆர் கல்லூரி மாணவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில், “ஐஸ்வர்யாவின் தற்கொலை இந்தியாவின் மிக முக்கிய கல்லூரிகள் விளிம்பு நிலையில் உள்ள தன் மாணவர்களை, இந்த பதட்டமான சூழ்நிலையில் எவ்வாறு காப்பாற்றத் தவறுகிறது என்பதை பிரதிபலிக்கிறது. மேலும் LSR கல்லூரி பல்வேறுபட்ட சூழலில் இருந்து படிக்க வரும் மாணவர்களின் நலன்களை கவனத்தில் கொள்ளாமல் சென்ற வருடம் மோசமான ஒரு புதிய விடுதித் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது” என்றுள்ளனர்.
ஐஸ்வர்யாவின் தற்கொலைக் குறிப்பு சமூக அழுத்தம் நிறைந்த பல பின்தங்கிய மாணவர்களின் மனநிலையையே பிரதிபலிப்பதாகக் கூறினர். குடும்ப, பொருளாதார சூழ்நிலையைக் குறித்து வருந்திய பிறகு தனது தற்கொலைக் குறிப்பில் ஐஸ்வர்யா கூறியுள்ளது,
“எனது இன்ஸ்பயர் ஊக்கத்தொகையை மேலும் ஒரு வருடத்திற்கு என் குடும்பத்தாருக்குக் கிடைக்கும் படி செய்யுங்கள் என்பதே”
சிறந்த மாணவியாக விளங்கிய ஐஸ்வர்யா
தனது பள்ளிக் காலத்திலும் ஐஸ்வர்யா ஒரு சிறந்த மாணவியாக விளங்கியுள்ளார். அவர் தனது +2 தேர்வில் 98.5% மதிப்பெண்கள் பெற்று தெலுங்கானா மாநில அளவில் மூன்றாவது மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மதிப்பெண்கள் LSR கல்லூரியில் அவருக்கு இளங்கலை அறிவியல் படிப்புக்கு வாய்ப்பளித்தது மட்டுமல்லாமல் INSPIRE ஊக்கத்தொகையையும் பெற்றுத் தந்தது.
கல்லூரியின் முதல் இரண்டு செமஸ்டரிலும் 8 GPA பெற்ற ஐஸ்வர்யாவைப் பற்றி அவரது தோழி கூறுகையில், “அவளது GPA முதல் செமஸ்டரில் 7.4-ல் இருந்து இரண்டாவது செமஸ்டரில் 7.8-ஆக உயர்ந்தது என்றும், அவள் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி மாவட்ட ஆட்சியராக விரும்பினாள்” என்றும் கூறினார். மாவட்ட ஆட்சியராக வந்திருக்க வேண்டிய மாணவி இன்று மரணத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஐஸ்வர்யாவின் குடும்பத்தை முடக்கிய ஊரடங்கு
இந்த வருடம் மார்ச் மாதம், மோடி அரசு முழுஅடைப்பு அறிவித்த சில நாட்களுக்கு முன்னரே விடுதியில் இருந்து ஐதராபாத் சத் நகரில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பியுள்ளார் ஐஸ்வர்யா. முழுஅடைப்பு காலம் முழுவதிலும் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவுக்கு தனது குடும்ப சூழ்நிலையை நேரடியாக சந்திக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் இயங்காததால் மெக்கானிக் வேலை செய்யும் அவரது அப்பாவிற்கும் வேலை கிடைக்கவில்லை. தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டதால் அம்மாவிற்கும் வேலை இல்லை.
பறிக்கப்பட்ட விடுதி வசதி
இந்த நேரத்தில்தான் அக்டோபர் மாதம் எல்.எஸ்.ஆர் கல்லூரி, ஐஸ்வர்யாவுக்கு விடுதியில் இடம் பறிக்கப்படுவதாகவும், முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டுமே விடுதி தரப்பட இருப்பதாகவும் அறிவிக்கிறது.
“தன் குடும்ப சூழ்நிலையையும் மீறி ஆன்லைன் வகுப்புகளில் ஐஸ்வர்யா தவறாமல் கலந்து கொண்டுதான் இருந்தாள், விடுதி குறித்த அறிவிப்பு வந்த பின்னரே அவளது பிரச்சனை அதிகமாகத் தொடங்கியது” என்கிறார் ஐஸ்வர்யாவின் தோழி.
விடுதிக்கு வெளியே தங்குவதற்கு மாதம் சராசரியாக 12,000 முதல் 14,000 வரை செலவாகும். இந்த உண்மையே ஐஸ்வர்யாவை கலங்க வைத்திருக்கிறது. மேலும் கல்லூரியில் கொடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் “தன்னிடம் மடிக்கணினி இல்லை என்றும், தனது கைபேசி சரியாக இயங்காததால் பிராக்டிகல் பேப்பர் சமர்பித்தலில் சிக்கல் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
இண்ஸ்பயர் ஊக்கத்தொகை பெறுவதிலும் உள்ள சிக்கல்
ஐஸ்வர்யா வென்ற ’இன்ஸ்பயர்’ ஊக்கத்தொகை பெறுவதிலும் பல சிக்கல் இருந்துள்ளது. இந்த ஊக்கத் தொகையான ரூ.80,000 பணமானது மாணவர்கள் இரண்டாம் ஆண்டுக்கு சென்ற பின்னரே தரப்படுகிறது. முதலாம் ஆண்டிலேயே கல்லூரியை விட்டு நீங்கும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை சென்று சேர்வதைத் தடுக்கவே இந்த முறை பயன்படுத்தப்படுவதாக கல்லூரி நிர்வாகம் கூறுகின்றது. ஐஸ்வர்யா ஊக்கத்தொகைக்காக விண்ணப்பிக்கும் முன்னரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பற்றி JNU கல்லூரி மாணவர் ஜோஸ் Huffington Post ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், “முழு ஊரடங்கு செயல்பட்டதால் மாணவர்கள் ஊக்கத்தொகைக்காக விண்ணப்பிப்பது சிரமமாயிருந்தது. மேலும் அரசு மனிதாபிமானம் கொண்டு இதைக் கவனித்து பாதி தொகையையாவது மாணவர்களுக்கு வழங்கி இருக்கலாம்” என்றார்.
நவம்பர் 2 அன்று இரவு 7.30 மணியளவில், தோழிக்கு தனது இறுதி அழைப்பை செய்து, எல்.எஸ்.ஆர் கல்லூரியில் தனது நண்பர் ஒருவருக்கு இடம் கிடைக்க உதவி செய்யவேண்டும் என்று கூறிவிட்டு, மீண்டும் காலையில் அழைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதற்கு ஒரு மணி நேரம் கழித்து தான் தற்கொலை செய்துகொண்டுள்ளார் ஐஸ்வர்யா. உடனேயே அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டும் மருத்துவர்களால் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
“அவள் அறிவானவள். அவளது எதிர்காலமே எங்களது எதிர்காலம்” என்றார் சுமதி. மேலும் ஐஸ்வர்யாவின் விருப்பத்தின்படி INSPIRE ஊக்கத் தொகையை அரசு தங்களுக்கு வழங்கும் என்று நம்பிக்கைக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
ஊரடங்கை அரசு கையாண்ட விதம்
உலக நாடுகள் அத்தனையும் கொரோனா வைரஸ் நோய் தொற்றினாலும், கடுமையான பொருளாதார வீழ்ச்சியினாலும் மிகவும் பாதிப்படைந்தது உண்மையே. ஆனால் மோடி தலைமையிலான இந்திய அரசு இப்பிரச்சனையை மிகவும் மோசமாகக் கையாண்டது. நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் “எதுவெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்தார்” என்று இப்பிரச்சனையை மோடி கையாண்ட விதத்தைப் பற்றி கூறியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் ஜூன் 2020 காலாண்டில் 25% வரை குறைந்துள்ளது. மற்ற உலகப் பொருளாதாரங்களை ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய வீழ்ச்சியாகும்.
இத்தகைய பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்களின் இழப்புகளில் ஐஸ்வர்யாவின் இழப்பு பேரிழப்பு.