மூன்று கட்டங்களாக நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய கூட்டணியே ஆட்சி அமைக்க முடியும்.
மூன்று முக்கிய அணிகள் இந்த தேர்தலை சந்தித்தன.
- நிதிஷ் குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் (JD(U)) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) உள்ளிட்ட கட்சிகள் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி,
- ராஷ்ட்ரிய ஜனதா தளம்(RJD), இந்திய தேசிய காங்கிரஸ் (INC) மற்றும் இடதுசாரி கட்சிகள் இணைந்த மெகா கூட்டணி,
- சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பலவும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தன.
மூன்று முறை தொடர்ச்சியாக பீகாரின் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் நான்காவது முறையாக காத்திருக்கிறார். ஒருவேளை தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெற்றாலும் நிதிஷ் குமார்தான் முதலமைச்சராவாரா அல்லது பாஜக தலைமையில் ஆட்சி அமையுமா என்ற கேள்வியும் இருக்கிறது. லல்லு பிரசாத் யாதவ் சிறையில் உள்ள நிலையில் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் நிதிஷ் குமாரை தனது எதிரியாக முன்வைத்தும், பாஜகவை நட்பு சக்தியாக சொல்லியும் தனியாக தேர்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
நேரலை அப்டேட்ஸ்
முடிவு: தேசிய ஜனநாயகக் கூட்டணி 125 இடங்களிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 110 இடங்களிலும், AIMIM கட்சி 5 இடங்களிலும், லோக்ஜன சக்தி கட்சி 1 இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இழுபறிகளுக்கு மத்தியில் 125 இடங்களுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
கட்சி வாரியாக 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 74 இடங்களிலும், 115 இடங்களில் போட்டியிட்ட ஜே.டி.யூ 43 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கூட்டணி கட்சிகள் 8 இடங்களில் வென்றுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 70 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இடது சாரிகள் முக்கியமான வளர்ச்சியைப் பெற்றுள்ளனர். 19 இடங்களில் போட்டியிட்ட CPI(ML) 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. CPI மற்றும் CPM கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
அதிகாலை 12:05 மணி: தேர்தல் ஆணையத்தினால் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் மோடியின் ட்விட்டர் பதிவுகளை ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் தெரிவித்திருக்கிறார் குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி. வாக்கு எண்ணிக்கை முடிவடையும் முன்பே டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதாக அறிவித்த போது அதை ட்விட்டர் நிறுவனம் தடை செய்தது. மோடியின் ட்வீட்டும் அதைப் போன்றதே என்று மேவானி தெரிவித்துள்ளார்.
இரவு 11:55 மணி: போரே, அர்ரா, தாராஉந்தா ஆகிய 3 தொகுதிகளில் 200 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் வெற்றி அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த மூன்று தொகுதிகளிலும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த CPI(ML) கோரியுள்ளது.
இரவு 11:50 மணி: பீகார் மக்கள் வளர்ச்சியை ஆதரித்திருப்பதாக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.
இரவு 11:40 மணி: 191 தொகுதிகளில் வெற்றி நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 93 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 90 தொகுதிகளிலும், AIMIM கட்சி 4 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 1 இடத்திலும், லோக் ஜனசக்தி 1 இடத்திலும், சுயேட்சை 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மீதமுள்ள 52 இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 31 இடங்களிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 20 தொகுதிகளிலும், AIMIM ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.
இரவு 11:30 மணி: அதிகாலை 1 மணியளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இரவு 11:25 மணி: பல தொகுதிகளில் மறுவாக்கெடுப்பிற்கு CPI(ML) கோரிக்கை
எந்த தொகுதிகளிலெல்லாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் மறுவாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும் என்று CPI(ML) கட்சியின் திபாங்கர் தெரிவித்துள்ளார். பல இடங்களில் வாக்கு எண்ணிக்கையில் சிக்கல்கள் இருப்பதால் மறு வாக்கு எண்ணிக்கை தேவை என்று தெரிவித்துள்ளார்.
இரவு 11:10 மணி: 183 தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. 90 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், 86 தொகுதிகளில் ஆர்.ஜே.டி கூட்டணியும், 4 தொகுதிகளில் AIMIM கட்சியும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சியும், ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இரவு 10:50 மணி: சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10:20 மணி: 153 தொகுதிகளுக்கான வெற்றி விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரவு 10:15 மணி: ஹில்சா சட்டமன்றத் தொகுதியில் 547 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.ஜே.டி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்த பிறகு 13 வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறோம் என்று ஆர்.ஜே.டி குற்றம் சாட்டியுள்ளது.
இரவு 10:00 மணி: ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நிதிஷ் குமார் வாக்கு எண்ணிக்கையில் தலையிட்டு மாற்றுவதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
இரவு 9:55 மணி: அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகா கூட்டணியுடன் AIMIM ஒரு கூட்டணியில் செல்லுமா என்ற கேள்விக்கு முழு முடிவுகள் வெளியான பிறகே எந்த முடிவுக்கும் வர முடியும் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.
இரவு 9:50 மணி: மகா கூட்டணியின் 119 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக தேர்தல் ஆணையர் பாராட்டியதாகவும், ஆனால் வெற்றி சான்றிதழை வழங்க மறுப்பதாகவும் ஆர்.ஜே.டி குற்றம் சாட்டியுள்ளது. தற்போது நீங்கள் தோற்று விட்டதாக சொல்வதாக சொல்வதாக குற்றம் சாட்டி தேர்தல் ஆணையத்தின் ஆவணத்தையும் வெளியிட்டுள்ளது.
இரவு 9:40 மணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி 122 இடங்களிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 114 இடங்களிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது. ஆட்சியமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது.
இரவு 9:00 மணி: மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 74 இடங்களுக்கான வெற்றி விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மற்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இரவு 8:45 மணி: கட்சி வாரியாக வெற்றி மற்றும் முன்னிலை விவரங்கள்
இரவு 8:30 மணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி 124 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 111 இடங்களிலும், லோக் ஜனசக்தி 1 இடத்திலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
இரவு 8:25 மணி: 10 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையை தாமதப்படுத்துவதாக நிதிஷ் குமார் மீது ஆர்.ஜே.டி குற்றச்சாட்டினை வைத்திருக்கிறது.
இழுபறியாக இருக்கும் இடங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக முடிவுகளை அறிவிக்குமாறு நிதிஷ் குமாரும், சுஷில் மோடியும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஆர்.ஜே.டி கட்சி தெரிவித்துள்ளது.
இரவு 8:15 மணி: இதுவரை மொத்தமுள்ள 4.2 கோடி வாக்குகளில் 3.4 கோடி வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இரவு 8:00 மணி: வாக்கு சதவீதங்கள் கட்சி வாரியாக.
அதிகபட்சமாக ஆர்.ஜே.டி 23.43% வாக்குகளையும், பாஜக 19.4% வாக்குகளையும், ஜே.டி.யூ 15.11% வாக்குகளையும், காங்கிரஸ் 9.2% வாக்குகளையும், லோக் ஜனசக்தி 5.63% வாக்குகளையும் பெற்றுள்ளது.
இரவு 7:30 மணி: வெறும் 4 தொகுதிகள் முன்னிலையில் பாஜக கூட்டணி
தேசிய ஜனநாயகக் கூட்டணி 120 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 116 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. காலையிலிருந்து பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்போது ஆர்.ஜேடி சில தொகுதிகளில் முன்னிலை பெற்று போட்டி தீவிரமடைந்திருக்கிறது. யார் ஆட்சி அமைக்கப் போவது என்பதைக் கண்காணிப்பதில் இழுபறி நிலவி வருகிறது.
மெகா கூட்டணி (கட்சி) | முன்னிலை |
ராஷ்டிரிய ஜனதா தளம் | 76 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 20 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) | 13 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 3 |
மற்றவை | 0 |
தேசிய ஜனநாயகக் கூட்டணி (கட்சி) | முன்னிலை |
ஒருங்கிணைந்த ஜனதா தளம் | 43 |
பாரதிய ஜனதா கட்சி | 72 |
மற்றவை | 7 |
பகல் 03:00 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முன்னிலை நிலவரங்கள் கட்சி வாரியாக.
பகல் 02:15 மணி: குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இழுபறியில் உள்ள தொகுதிகள்
கீழே உள்ள படத்தில் மஞ்சள் நிறத்தில் குறிக்கப்பட்டுள்ள தொகுதிகள் 5% வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் இழுபறியில் உள்ளன.
பகல் 02:05 மணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி 127 இடங்களில் முன்னிலை பெற்று தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. மெகா கூட்டணி 103 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி 3 இடங்களிலும், பிற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 10 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
பகல் 02:00 மணி: அசாதுதின் ஓவைசியின் AIMIM கட்சி மூன்று இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சைகள் 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.
பகல் 01:55 மணி: ஆர்.ஜே.டி வெற்றி இருட்டடிப்பு செய்யப்படுகிறது – மனோஜ் ஜா எம்.பி ஆவேசப் பேட்டி.
இதுவரையில் ஆர்.ஜே.டி கட்சி மட்டுமே தனியாக 86 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் அது மறைக்கப்படுவதாக மனோஜ் ஜா எம்.பி தெரிவித்துள்ளார்.
பகல் 01:30 மணி: இரவும் வாக்கு எண்ணிக்கை தொடரும் – தேர்தல் ஆணையம்!
மொத்தமுள்ள 4.1 கோடி வாக்குகளில் 92 லட்சம் வாக்குகள் மட்டுமே எண்ணி முடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இரவும் வாக்கு எண்ணிக்கை தொடரலாம் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
பகல் 01:05 மணி: இடதுசாரி கட்சிகள் முக்கியமான முன்னேற்றத்தினை இத்தேர்தலில் கண்டுள்ளன. CPI(ML) கட்சி தனக்கு வழங்கப்பட்ட 19 இடங்களில் 13 இடங்களிலும், CPI(M) கட்சி தனக்கு வழங்கப்பட்ட 4 இடங்களில் 3 இடங்களிலும், CPI கட்சி 6 தொகுதிகளில் 3 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. மொத்தமாக 19 தொகுதிகளில் இடதுசாரி கட்சிகள் முன்னிலையில் உள்ளன.
பகல் 12:55 மணி: இதுவரை 8 சுற்று வாக்கு எண்ணிக்கைகள் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கின்றன. இன்னும் 20 சுற்று வாக்கு எண்ணிக்கை நிலுவையில் இருக்கிறது. கொரோனா காரணாமாக வாக்கு எண்ணிக்கை மெதுவாக நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகல் 12:50 மணி: 72 தொகுதிகளில் வெறும் 1000 வாக்குகள் வித்தியாசத்திலும், 42 தொகுதிகளில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்திலும் இழுபறி நீடிக்கிறது.
பகல் 12:30 மணி: சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பகல் 12:25 மணி: கட்சி வாரியாக பதிவாகியுள்ள வாக்குகளில் ஆர்.ஜே.டி 23.35% வாக்குகளையும், பாஜக 19.97% வாக்குகளையும், ஜே.டி.யூ 15.5% வாக்குகளையும், காங்கிரஸ் 9.31% வாக்குகளையும், லோக் ஜனசக்தி 6.24% வாக்குகளையும் பெற்றுள்ளது.
பகல் 12:20 மணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றால் முன்னர் அறிவித்தபடியே, நிதிஷ் குமாரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்று பாஜக தலைவர்கள் அருண் சிங் மற்றும் கைலாஸ் விஜய்வர்கியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பகல் 12:10 மணி: தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 100 இடங்களிலும், லோக் ஜனசக்தி 2 இடங்களிலும், மற்றவை 9 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.
மெகா கூட்டணி (கட்சி) | முன்னிலை |
ராஷ்டிரிய ஜனதா தளம் | 60 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 21 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) | 13 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | 3 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 3 |
மற்றவை | 0 |
தேசிய ஜனநாயகக் கூட்டணி (கட்சி) | முன்னிலை |
ஒருங்கிணைந்த ஜனதா தளம் | 74 |
பாரதிய ஜனதா கட்சி | 49 |
மற்றவை | 8 |
பகல் 12 மணி: தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள முன்னிலை நிலவரங்கள்.
காலை 11:55 மணி: தற்போது வரை 10% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி 38.22% வாக்குகளையும், மெகா கூட்டணி 36.12% வாக்குகளையும் பெற்றுள்ளது. 43 லட்சம் வாக்குகள் வரையில் இதுவரை எண்ணப்பட்டுள்ளன.
காலை 11:50 மணி: ஆர்.ஜே.டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) CPI(ML) மொத்தம் போட்டியிட்ட 19 இடங்களில் 13 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காலை 11:45 மணி: 5 சுயேட்சை வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள். சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
காலை 11:40 மணி: 23 தொகுதிகளில் 500-க்கும் குறைவான வாக்கு வித்தியாசங்களில் போட்டி நிலவுவதாக NDTV தெரிவித்திருக்கிறது.
காலை 11:20 மணி: 68 தொகுதிகளில் முன்னிலை பெற்று பீகாரின் கட்சிகளில் தனிப்பெரும் முன்னிலை பெற்ற கட்சியாக பாஜக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
தற்போதைய நிலவரப்படி ஜே.டி.யூ கூட்டணி 129 இடங்களிலும், ஆர்.ஜே.டி கூட்டணி 103 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி 5 இடங்களிலும் முன்னிலையில் இருக்கிறது.
காலை 10:45 மணி – இதுவரை 4.14% வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
காலை 10:30 மணி – வாக்கெடுப்பு துவங்கியதிலிருந்து ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி இடையே கடுமையான போட்டி நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜக கூட்டணி தற்போது முன்னணியில் சென்று கொண்டிருக்கிறது. சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தியும், இதர சிறிய கட்சிகளும் ஆட்சியை தீர்மானிக்கக் கூடியவர்களாய் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி ஆர்.ஜே.டி கூட்டணி 101இடங்களிலும், ஜே.டி.யூ கூட்டணி 125 இடங்களிலும், லோக் ஜனசக்தி 7 இடங்களிலும், இதர கட்சிகள் 10 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. இதர கட்சிகளில் அசாதுதின் ஓவைசியின் கட்சி 2 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
மெகா கூட்டணி (கட்சி) | முன்னிலை |
ராஷ்டிரிய ஜனதா தளம் | 67 |
இந்திய தேசிய காங்கிரஸ் | 21 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) | 9 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | 2 |
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 2 |
மற்றவை | 0 |
தேசிய ஜனநாயகக் கூட்டணி (கட்சி) | முன்னிலை |
ஒருங்கிணைந்த ஜனதா தளம் | 48 |
பாரதிய ஜனதா கட்சி | 71 |
மற்றவை | 6 |