டிஜிட்டல் மீடியா & ஓ.டி.டி சட்டம்

டிஜிட்டல் செய்தி தளங்கள் மற்றும் OTT-ஐக் கட்டுப்படுத்த புதிய சட்டம்; என்னவாகும் கருத்து சுதந்திரம்?

ஆன்லைன் செய்தி தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டப் பிரிவை இந்திய ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கிறது.

இதற்கான முதல் நகர்வாக ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை  அமைச்சகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னணி OTT தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் மற்றும் ஆன்லைன் செய்தி நிறுவனங்களையும் முறைப்படுத்தி அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இருக்கிறது.

பிரிட்டிஷ் காலத்து சட்டமான “பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவு சட்டம் 1867”-இல் திருத்தம் கொண்டுவரும் வகையில், ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் புதிய சட்டத்தை அமல்படுத்த இருக்கிறது. இதற்குப் பின் அச்சு ஊடகங்கள் மட்டுமின்றி டிஜிட்டல் செய்தி ஊடகங்களையும் இந்திய செய்தித்தாள்களின் பதிவாளர் (RNI- Registrar of Newspapers of India) கீழ் கட்டாயமாக பதிவு செய்திடும் சட்டம் உருவாகயிருக்கிறது. மிக விரைவில் இந்த சட்டம் இன்றைய அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கில், வீடியோ திரையிடும் தளங்களை கண்காணிக்கவும், நிர்வகிக்கவும் மற்றும் ஒழுங்குபடுத்தவும் ஒரு நிர்வாகத்தை அமைக்குமாறு ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரத்தில் திருத்தம் செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஆன்-லைனில் வெளியிடப்படும் திரைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடும் ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆன்லைன் ஊடகங்கள் அனைத்தும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்படும். மேலும் சர்வதேச OTT தளங்களான நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் சேவைகள் கூட அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டு இந்திய அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகுவதாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீதிமன்றம் சொல்வதற்கு முன்பே அரசு தயாரித்த மசோதா

இந்த மசோதா குறித்து நெருக்கமான பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்திற்கு கருத்து தெரிவித்த போது, ”இந்த நடவடிக்கையானது உச்சநீதிமன்றம் தற்போது தெரிவித்துள்ள நெறிமுறைகளுக்கு முன்பாகவே  அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கை, உச்சநீதிமன்ற மனு தொடர்பான நடவடிக்கை அல்ல” என தெரிவித்துள்ளார்.

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் சட்ட அதிகாரங்களை மாற்றம் செய்யுமாறு மே 30 அன்றே பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர். மேலும் அவர் பல்வேறு OTT தளங்களில் பாலியல் ரீதியான, மோசமான மற்றும் சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் வருவதாக தெரிவித்தார்.

இதுமட்டுமன்றி, பல ஆண்டுகளாக தயாராகி வந்த ஊடக மற்றும் பத்திரிக்கை பதிவு (ஆர்.பி.பி) மசோதாவையும் அரசாங்கம் இறுதி செய்துள்ளது. இச்சட்டப்படி செய்தி வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் சேனல்கள் இந்திய அரசாங்கத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.

இந்தியாவில் அச்சு ஊடகங்கள் தொடர்பான புகார்களைத் தீர்ப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் இந்திய பத்திரிகை சங்கம்( Press Council of India) செயல்பட்டு வருகிறது. மேலும் செய்தி ஒளிபரப்பு சங்கம் (NBA- News Broadcasters Association) தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பாளர்களை முறைபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் ஆன்லைன் ஊடகங்களையும் ஒரு முக்கியமான கருவியாக கருதி அச்சு ஊடகங்களுக்கு இணையாக இந்த முயற்சியை அரசு எடுப்பதாக சிலர் கருத்து தெரிவித்தாலும், இது ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

கருத்து சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கும் அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2019

1857-ல் நடைபெற்ற சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, பத்திரிக்கைகளின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த சட்டமே ’அச்சகங்கள் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம்’ (Press and Registration of Books Act, 1867). இச்சட்டம் முதலில் ஆங்கில பத்திரிக்கைகளை மட்டுமே குறிவைத்து நிறைவேற்றப்பட்டது.

அதன் பிறகு 1878-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பிரதேச மொழி பத்திரிக்கை சட்டம் (Vernacular Press Act 1878) தேசியவாத பத்திரிக்கைகளை குறிவைத்தது. 

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசு பின்பற்றிய அதே வழியைப் பின்பற்றி ”அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு சட்ட மசோதா 2019” (Registration of Press and Periodicals Bill 2019) எனும் வரைவினை அறிமுகப்படுத்தியது.

1867-ம் ஆண்டின் சட்டத்தினை மாற்றுவதற்காக இம்மசோதா என்று சொல்லப்பட்டாலும் பிரிட்டிஷ் காலத்து சட்டத்திலிருந்து பெரிதாக எந்த மாற்றத்திற்கும் உட்படவில்லை. பழைய சட்டத்திற்கும் மேலாக இந்த மசோதா டிஜிட்டல் மீடியாக்களையும் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டுவருகிறது. 

UAPA சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படும் ஒருவருக்கு பத்திரிக்கை நடத்தும் உரிமையை மறுக்கிறது. சமீப காலங்களில் ஊபா சட்டமானது மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இப்படிப்பட்ட ஒரு சட்டம் பத்திரிக்கை சுதந்திரத்தை முற்றிலும் குலைக்கக் கூடியதாக அமையும். 

டிஜிட்டல் ஊடக செய்தி என்பதை பின்வருமாறு இந்த மசோதா வரையறுக்கிறது. “டிஜிட்டல் ஊடகத்தில் செய்திகள்” என்பது இணையதளங்கள், கணினிகள் அல்லது செல்பேசிகள் மூலம் எழுத்து வடிவிலோ, ஒலி வடிவிலோ, காணொளி வடிவிலோ அல்லது வரைபடங்களாகவோ வெளியிடப்படும் டிஜிட்டல் வடிவிலான செய்திகள் ஆகும். இதன் மூலம் கருத்து சுதந்திரந்திற்கான அனைத்து தடங்களையும் கட்டுப்படுத்தும் வேலையை அரசு செய்ய முடியும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *