புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020-னை அமல்படுத்த இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதனையொட்டி பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. ஒரு புறம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான பிரச்சாரங்களும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் ஓரணியில் நின்று புதிய கல்விக் கொள்கை குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவருவதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்கள் தொடர்ந்து ஒரு கருத்தை முன்வைக்கிறார்கள். அதாவது 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியை புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள். தாய்மொழியில் படிப்பது படிக்கும் விடயங்களை திறம்பட உள்வாங்கி படிப்பதற்கு உதவும் என்றும், இது ஒரு முக்கியமான மாற்றம் என்றும் தெரிவிக்கின்றனர். இது பல்வேறு ஊடகங்களில் செய்தியாகவும் வெளிவந்துள்ளது.
ஆனால் தேசிய கல்விக் கொள்கையின் இறுதி ஆவணத்தில் 5-ம் வகுப்பு வரையில் அனைவருக்கும் பயிற்று மொழியாக தாய்மொழியே இருக்கும் என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.
மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணத்தின் 13வது பக்கத்தில் 4.11 என்ற பகுதியில் பயிற்று மொழிகள் மற்றும் தாய்மொழி குறித்த பகுதி இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பின்வருமாறு,
”Wherever possible, the medium of instruction until at least Grade 5, but preferably till Grade 8 and beyond, will be the home language/mother tongue/local language/regional language. Thereafter, the home/local language shall continue to be taught as a language wherever possible.”
இந்த பத்தியில் ‘Wherever possible’ என்ற வார்த்தை முக்கியமானது. அதாவது எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ, அங்கு 5-ம் வகுப்பு வரையிலாவது பயிற்று மொழியாக தாய்மொழி அல்லது பிராந்திய மொழி இருக்கும். இது தேவைப்படும் இடத்தில் 8-ம் வகுப்பு அல்லது அதற்குப் பிறகும் கூட நீட்டித்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகு தாய்மொழி என்பது ஒரு பாடமாக ’எங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ’ அங்கு கற்றுத் தரப்படும்.
எனவே தாய்மொழி வழி கல்வி கட்டாயமாக புதிய கல்விக் கொள்கையில் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதோ, இனி தமிழைப் படிக்காமல் தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கூட இருக்க முடியாது என்பதோ உண்மை இல்லை. அப்பிரச்சாரம் தவறானது. இங்கு ஏற்கனவே அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தாய்மொழி வழிக் கல்வி தான் நடைமுறையில் இருக்கிறது. தாய்மொழி வழிக் கல்வி கட்டாயம் என்று சொல்லாமல் ’Wherever possible’ என்று சொல்லும் போது அதிலிருந்து தனியார் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ பள்ளிகளும் விலகிக் கொள்ள முடியும். அவர்கள் தாய்மொழி வழிக் கல்வியை பயிற்றுவிக்க வேண்டிய கட்டாயமில்லை. எனவே தாய் மொழிக் கல்வியைப் பொறுத்த வரை ஏற்கனவே இத்தனை ஆண்டுகளாக இங்கு என்ன நடைமுறையில் இருக்கிறதோ, அதுவேதான் புதிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாய்மொழிக் கல்விக்கான சிறப்பு சலுகைகளாக எதுவும் கொண்டுவரப்படவில்லை.
மும்மொழிக் கொள்கையினைக் கொண்டுவந்து இந்தி மற்றும் சமஸ்கிருதத்துக்கான பிரதானத்தினை இக்கொள்கை உருவாக்கியிருக்கிறதே தவிர, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க எந்த திட்டமும் இல்லை என்பதே உண்மை.
இதையும் படிக்க: எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?