New Education policy 2020

எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமலாகும் புதிய கல்விக் கொள்கை; எதிர்ப்பவர்கள் சொல்வது என்ன?

புதிய தேசியக் கொள்கை வரைவு 2016 அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பினை சந்தித்து வருகிறது. மாநிலங்களின் கல்வி அதிகாரம் முற்றிலுமாக பறிக்கப்படுவதாக பல மாநிலங்கள் குற்றச்சாட்டுகளை எழுப்பின. தமிழ்நாட்டில் கட்சிப் பாகுபாடின்றி ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பட்சத்திலும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் பாஜக அரசின் அமைச்சரவை புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளித்திருக்கிறது.

கடந்த ஆண்டு புதிய கல்விக் கொள்கை 2019 என்ற பெயரில் 484 பக்கங்களைக் கொண்ட முழுமையான வரைவினை கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வெளியிட்டது. இந்த அறிக்கை வெளியான பிறகு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும், கல்வியாளர்களும் கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்தனர். இந்த வரைவு குலக் கல்வி முறையினை மீண்டும் அமல்படுத்துவதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இந்த வரைவிற்கு எதிராக திரைப்பட நடிகர் சூர்யா பேசிய பேச்சு பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. 

ஏன் இந்த புதிய கல்விக் கொள்கை எதிர்க்கப்படுகிறது? எதிர்ப்பாளர்கள் சொல்வது என்ன? ஒரு சிறிய அறிமுகம்

  • இந்தியாவின் பன்முகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில், தேசிய அளவிலான ஒற்றைக் கல்வி முறை புகுத்தப்படுகிறது. ஒற்றைக் கல்வி முறை என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கக் கூடிய வகையில் இருக்கிறது.
  • இந்தி மற்றும் சமஸ்கிருதத்தினை மாநிலங்களின் மேல் திணிப்பதாக இந்த கல்விக் கொள்கை இருக்கிறது.
  • 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி எனும் முறையினை நீக்கி, மாணவர்களை சிறிய வயதிலேயே தேர்ச்சி இழக்கச் செய்ய அனுமதிக்கிறது.
  • 8-ம் வகுப்பு முடித்த உடனேயே தொழிற்கல்வியை தேர்வு செய்யும் முறையினை உருவாக்குவதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளில் கலை, அறிவியல், பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளை தேர்வு செய்வது சிறு வயதிலேயே தடுக்கப்படுகிறது.
  • 3ம் வகுப்பு, 5ம் வகுப்பு, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவிலான பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவருவது மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநிற்றலை அதிகப்படுத்தும்.
  • 10+2 என்று இருந்த பள்ளிக்கல்வி முறையானது 5+3+3+4 என்று மாற்றப்படுவது ஒவ்வொரு இடைவெளியிலும் மாணவர்கள் இடைநிற்றலை அதிகப்படுத்தும். (5 – மழலையர் பள்ளி துவங்கி இரண்டாம் வகுப்பு வரை, 3 – மூன்றாம் வகுப்பு துவங்கி ஐந்தாம் வகுப்பு வரை, 3-ஆறாம் வகுப்பு துவங்கி எட்டாம் வகுப்பு வரை, 4-ஒன்பதாம் வகுப்பு துவங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரை. இதில் 9 மற்றும் 10 ஒரு படிநிலையாகவும், 11 மற்றும் 12 மற்றொரு படிநிலையாகவும் இருக்கும்)
  • மேலும் பள்ளிகளில் செமஸ்டர் வடிவிலான ஆண்டுக்கு இரு முறை பொதுத்தேர்வு முறையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
  • அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நீட் மாதிரியான தேசிய நுழைவுத் தேர்வு முறை கொண்டுவரப்படுகிறது. இதனால் ஏழை, பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவது தடைபடும். 
  • வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க அனுமதிப்பதன் மூலம் கல்வி என்பது பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரப் பொருளாக மாறும்.
  • இட ஒதுக்கீடு என்ற வார்த்தை இந்த கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படாத காரணத்தினால் பிற்படுத்தப்பட்ட(BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட(MBC), பட்டியல் சமூக (SC/ST) மாணவர்களின் வாய்ப்புகள் கேள்விக்குள்ளாகும். இதனால இக்கல்விக் கொள்கை சமூக நீதிக்கு எதிரானதாக இருக்கிறது.
  • மதம் சார்ந்த மதவாத கோட்பாடுகளை கல்விக்குள் புகுத்துவதற்கு வழிவகை செய்கிறது.
  • தன்னார்வலர்களை கல்வி நிறுவனங்களுக்குள் கல்விப் பணிகளில் அனுமதிப்பது என்பது மதவாத அரசியல் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்கும் வழியாக மாறிவிடும்.
  • சிறிய எண்ணிக்கையிலான மாணவர்கள் பயிலும் பள்ளிகள் மூடப்படுவதற்கு வழிவகை செய்கிறது.
  • மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் பணி உயர்வுக்கான தகுதித் தேர்வுகள் என்று பல்வேறு புதிய முறைகள் புகுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் ஆசிரியர் பணிகளில் நிகழ்த்தப்பட்ட சமூக நீதி பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.
  • பல்கலைக்கழக மானியக்குழு (UGC) கலைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஒழுங்குமுறை ஆணையம் என்ற பெயரில் புதிய ஆணையம் அமைக்கப்பட உள்ளது. 
  • எம்.பில் எனும் இளங்கலை ஆராய்ச்சிப் பட்டம் கைவிடப்பட்டு பி.எச்.டி மட்டுமே ஆராய்ச்சி படிப்பாக இருக்கும்.

இப்படி பல்வேறு காரணங்களைத் தெரிவித்து கல்வியாளர்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கை வரைவு-2019 க்கு எதிராக ஏராளமான கருத்துகள் தமிழ்நாட்டிலிருந்து மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட போதும், அவை பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாமல் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர். WTO எனும் உலக வர்த்தகக் கழகத்தில் கல்வியை வியாபாரமாக்கும் வகையிலான் GATT ஒப்பந்தத்தில் இந்தியா ஒப்புதல் அளித்ததன் காரணமாகவே இந்த மசோதா கொண்டுவரப்படுவதாகவும், இது கல்வியில் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டுவராது என்றும், ஏழை மக்கள் கல்வி பெறுவதை தடுக்கும் வகையிலேயே இது அமையும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள் தற்போது ஒன்றிய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *