தமிழ்நாட்டிலிருந்து ட்விட்டரில் #LandOfRavanan, #TamilsPrideRavanaa ஆகிய ஹேஷ்டேக்-கள் இன்று ட்ரெண்ட் ஆகியுள்ளன.
பாபர் மசூதியை இடித்த இடத்தில் ராமர் கோயிலைக் கட்டிக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு பல்வேறு சமூக ஆர்வலர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் அத்தீர்ப்பினை மறுஆய்வு செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தின.
இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் சார்பில், இன்று அக்கோயில் கட்டமைப்பிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ராமர் கோயிலின் அடிக்கல் நாட்டு விழா நடத்துவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தேதியான ஆகஸ்ட் 5 என்பதும் பல்வேறு சர்ச்சைக்குரிய விவாதங்களை உருவாக்கியிருந்தது. காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவான 370 நீக்கப்பட்ட தேதி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தெரிவு செய்யப்பட்டதே இந்த சர்ச்சைக்கான காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இன்று ஊடகங்கள் முழுவதும் ராமர் கோயில் அடிக்கட்டு விழாவினை ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கையில், ட்விட்டரில் தமிழ்நாட்டில் #LandOfRavanan, #TamilsPrideRavanaa ஆகிய ஹேஷ்டேக்-கள் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தன.
முதலில் தமிழ்நாடு அளவில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருந்தது, பின்னர் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தது. ராமாயணம் குறித்தும், அதில் தமிழர்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்தும், சாதியும் வர்ணமும் ராமாயணத்தில் எவ்வாறு கையாளப்பட்டிருக்கின்றன என்றெல்லாம் பல்வேறு விவாதங்கள் அந்த ஹேஷ்டேக்-களின் கீழ் நடைபெற்றன.
ராவணன் தமிழ்ப் பேரரசன் என்று ட்விட்டரில் இன்று முழுதும் பெருமையுடன் வர்ணிக்கப்பட்டார். ராமனுக்கும், ராவணனுக்கும் நடைபெற்றதாக சொல்லப்படும் போர், ஆரியர்கள் திராவிடர்கள் மீது நடத்திய போர் என்ற திராவிட இயக்கத்தின் கருத்துக்களும் பலரால் பகிரப்பட்டன.
ராமாயணம் குறித்து பெரியார், அண்ணா உள்ளிட்டோர் எழுப்பிய விமர்சனங்களும், தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட ராவண லீலா போன்ற நிகழ்வுகளின் படங்களும் பகிரப்பட்டன. வட இந்தியாவில் ராம்லீலா என்ற பெயரில் ராவணனை எரித்துக் கொண்டாடும் நிகழ்வு தமிழர்களின் மனதினை புண்படுத்துவதாக சொல்லி, நீங்கள் ராவணனை எரித்தால், நாங்கள் ராமன் உருவத்தை எரிப்போம் என்றும் சொல்லி பெரியாரின் திராவிடர் கழகம் அறிவித்து ராவண லீலா நிகழ்வினை தமிழ்நாட்டில் நடத்தியது.
மேலும் ராமாயணத்தில் ராவணன் எனும் தமிழன் கொச்சைப்படுத்தப்படுவதாக சொல்லி, ராவணனின் பார்வையில் இருந்து ராமாயணத்தை திருத்தி எழுதி ராவண காவியம் தமிழ்நாட்டில் புலவர் குழந்தை அவர்களால் வெளியிடப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பின் இந்த புத்தகம் வெளிவந்தது. அந்த புத்தகம் குறித்த செய்திகளும் பலரால் பகிரப்பட்டன.
ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் வரும் பகுதியான சம்பூகன் கதையும் பலராலும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது. தவமிருந்த சம்பூகனை, சூத்திரன் தவம் இருப்பதற்கு அனுமதியில்லை என்று அவன் தலையை ராமன் வெட்டியதான கதை பலராலும் விமர்சிக்கப்பட்டது.
ராவணனைப் பெருமைப்படுத்திப் பேசும் ரஜினிகாந்த் நடித்த திரைப்பட வசனக் காட்சியும் பலராலும் பகிரப்பட்டது.
முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன், முண்டாசுப்பட்டி திரைப்பட இயக்குநர் ராம்குமார், எழுத்தாளர் மதிமாறன், பத்திரிக்கையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், இணையதள ஆர்வலர்கள் என பலரும் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பதிவிட்டனர்.