மருத்துவர் ஜீவானந்தம்

எளியோருக்கு மருத்துவம் கிடைக்க கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய மருத்துவர் வெ.ஜீவானந்தம் இயற்கையை அடைந்தார்!

மருத்துவர் திரு.ஜீவானந்தம் அவர்கள் வேளாண்மையில் கூட்டுப் பண்ணைகளைப் பற்றி சிந்தித்த காலக்கட்டத்தில் கூட்டுறவு மருத்துவமனைகளை உருவாக்கியவர். மக்கள் பங்களிப்போடு மருத்துவமனைகளை உருவாக்கி  மருத்துவத்தை  எளிய மக்களுக்கும் கிடைக்க உழைத்தவர்.

தமிழகம் சூழலியல் விழிப்புணர்வு அடைவதற்கு தொடக்க காலத்திலேயே வலுவாகப் பணியாற்றியவர். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத பெருந்தகை மருத்துவர் வெ.ஜீவானந்தம். சூழலியல், நுகர்வு குறித்து பேசுவதோடு நிற்காமல் தான் பேசுவதற்கு ஏற்ப அதனை சரியாகக் கடைபிடித்தவர். எழுதுகிற தாள்கள் முதற்கொண்டு சூழலியல் சிந்தனையோடு அணுகியவர் என்பதே இதற்கு சான்றாகும்.

காந்திய வழியில் பயணித்தாலும் பொதுவுடமைப் பாதையை கைவிடவில்லை

இந்திய ஒன்றிய விடுதலைக்கு பாடுபட்ட வெங்கடாசலம் என்பவரின் மகனான மருத்துவர் ஜீவா காந்திய வழியில் பயணித்தவர். இருந்தபோதிலும் பொதுவுடைமைப் பாதையை ஒரு போதும் கைவிட்டதில்லை. சூழலியல், நுகர்வு, இயற்கை வழி வேளாண்மை, பொதுவுடைமை, நிலைத்த வளர்ச்சி , மனித உரிமை, பழங்குடிகளின் உரிமை  என பல தளங்களில் பெரும்பங்காற்றியவர்.

மருத்துவர் ஜீவானந்தம்/ புகைப்படம்: Facebook

இயற்கை வழி வேளாண் விஞ்ஞானி மசானபு புகோகா என்பவரின்  இயற்கை குறித்த நூல்களை தமிழுக்கு  மொழிபெயர்த்தவர்.

பல முக்கிய நூல்களை தமிழ் மொழியில் பெயர்த்து தமிழர் சிந்தனையை உரமேற்றியவர். அதுபோலவே பல நூல்களை அவர் எழுதவும் செய்திருந்தார்.

மரு.வெ.ஜீவானந்தம் எழுதிய நூல்கள்  சில

1. மருத்துவம் நலமா?

2. அற்றைக் கனவின் இற்றை ஓசை

3. வியட்நாம் காந்தியும் ஹனாய் வார்தாவும்

4. மூச்சுத்திணறுது பூமி

5. திப்பு விடுதலைப் போரின் முன்னோடி

மரு.வெ.ஜீவானந்தம் தமிழுக்கு மொழிப்பெயர்த்த நூல்கள் :

1. இந்துத்துவாவா? இந்திய சுயராஜ்யமா?

2. தாய்மண்

3. கையா: பூமித்தாயின் மரண சாசனம்

4. இளையோர்க்கான இந்தியத் தொன்மக் கதைகள்

5. உலகம் நமது ஒரே வீடு: அதை காப்பது நமது கடமை

6. திப்புவின் வாள்

7. நிலமெனும் நல்லாள் நகும்

8. பூமிக்கான பிரார்த்தனை

9. தாய்மைப் பொருளாதாரம்

10. இயற்கைக்குத் திரும்பும் பாதை

11. இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட் அறிக்கை

12. அவரை வாசு என்றே அழைக்கலாம்

13. கபீர் சொல்கிறான்

14. இஸ்லாமில் அகிம்சையும் அமைதியும்

15. சல்வா ஜுதும் சட்ட விரோதமான கூலிப்படை

16. இடதுசாரிகள் பார்வையில் விவேகானந்தர் ஆகியனவாகும்

மருத்துவர் வெ.ஜீவனந்தம் அவர்களின் மரணம் தமிழகத்தில் சமுக செயல்பாட்டாளார்களிடம்  பெரும்  அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

வெ.ஜீவானந்தம் அவர்களுக்கு அரசியல் தலைவர்கள் எழுதிய இரங்கல் குறிப்புகள்

புகைப்படம்: நன்றி- வெற்றிமாறன் இரா / Facebook

சோளகர் தொட்டி நாவல் ஆசிரியரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான திரு ச.பாலமுருகன் இரங்கல் பதிவு

ஈரோட்டில் டாக்டர்.ஜீவானந்தம் இன்று 2.3.2021 மறைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியையும் வேதனையும் தருகின்றது. மயக்கவியல் மருத்துவரான அவர் காந்திய சிந்தனையாளர். தமிழக பசுமை இயக்க தலைவர். பெரும் மனித நேயர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். எளிய மக்களுக்காக வெளிப்படையாகப் பேசும் தன்மை கொண்டவர்.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இடைவிடாது குரல் கொடுத்தவர் . பழங்குடி மக்களுக்காக பல மலை கிராமங்களில் பழங்குடி மக்கள் சங்கத்துடன் இணைந்து களம் கண்ட மாமனிதர். 

சாலையோரம் வசிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கான கூட்டங்களில் சாலையோரமே வந்து அமர்ந்து அவர்களுடன் நாமும் இருப்பதை உறுதி செய்தவர். கணக்கற்ற கூட்டங்களில் செயல்பாட்டாளர்களுடன் அவர் நம்பிக்கையின் வடிவமாக இருந்திருக்கின்றார். மறைநத நம்மாழ்வார்,விடுதலைப் போராட்ட வீரர் இலட்சுமண அய்யர் , பால் பாஸ்கர் என எல்லோரையும் எல்லோருக்கும் அவரால் இணைக்க முடிந்தது.

நவீன மருத்துவத்தை எளிய மக்களுக்கு கொண்டு செல்ல அவர் கூட்டுறவு முறையில் மருத்துவமனைகளை உருவாக்கினார். என்னேரமும் அன்பும் ,மக்கள் மீதான கரிசனம் அவரின் தனித்தன்மை..அவரின் நலம் தா மருத்துவமனை பல சமயம் நண்பர்கள் சந்திக்கும் இடமாக இருந்துள்ளது.அவரின் சித்தார்த்தா பள்ளி மனித உரிமை,சூழல் கூட்டங்களுக்கு பயன்பட்டுள்ளது.

டாக்டரை இறுதியாக கடந்த மாதம் கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த தோழர். வி.பி.குணசேகரன் ஆனந்த விகடன் விருதுக்கான பாராட்டு கூட்டத்தில் சந்தித்த போது ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அது நாவலாக இருக்குமா என கேட்டார்.எழுத்து உங்களுக்கு எளிதில் வசப்படும் ,உங்கள் எழுத்து உங்களைப்போல எளிமையானது என்றேன். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்கு முன் ஈரோட்டில் வீரப்பன் வழக்கில் சிறைப்பட்டோர் விடுதலை கருத்தரங்கின் போது நிகழ்ச்சிக்கு தன் கார் ஓட்டுனர் வந்ததும் வந்து விடுவதாகவும் நிகழ்ச்சியை துவங்கும்படி கூறினார். அவரால் மாடிப்படி ஏறுவது சிரமமான நிலையிலும் மனிதநேய பங்கை வெளிப்படுத்தினார்.

டாக்டர் ஜீவா அவர் நண்பர்களுக்கு இதயத்தை தந்த மனிதர். இது போன்ற ஆளுமைகளை இழக்கும் போது நாம் அனாதையாக விடப்படுவதாக உணர்கின்றோம்.

புகைப்படம்: நன்றி – ராஜாராம் கோமதிநாயகம் / Facebook

பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் இரங்கல்

“ஒரு மருத்துவன் சக மனிதனின் நோய் தீர்ப்பவன் மட்டுமல்ல. சக மனிதனை நேசித்து, அவன் சார்ந்த சமூகம் கொண்டிருக்கும் நோயையும் போராட அவனை தயார் செய்விப்பதும் மருத்துவனின் கடமை” என வாழ்ந்து காட்டிய மக்கள் மருத்துவர் டாக்டர் ஜீவானந்தம்.

காந்தியின் கூட்டுறவு முறையில்,  மக்களுக்கென மக்களாலேயே புற்றுனோய்க்கு மக்கள் மருத்துவமனை கட்டிய மருத்துவர். மரபணு பயிர்களுக்கு எதிராக மக்கள் குரலாய் ஒலித்தவர், சூழலுக்கு எதிரான அத்தனை விஷயங்களிலும் முழு எதிர்ப்பை தெரிவித்து, மக்களை ஒருங்கிணைத்த மருத்துவர் ஜீவானந்தம். அவரது பிரிவு சூழலியலுக்கு மருத்துவ துறைக்கு பெரும் இழப்பு.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் இரங்கல்

தமிழகப் பசுமை இயக்கத்தின் தலைவர் மரு.வெ.ஜீவானந்தம் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவம் ஏழை நடுத்தர மக்களுக்கு எட்டும் வகையில் கிடைக்க வேண்டி அதற்குச் செயல் வடிவம் தந்தவர் மரு.ஜீவா. ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை, புற்றுநோய் சிகிச்சை மருத்துவ மனை, தஞ்சை ஜீவா நினைவு புற்றுநோய் மருத்துவமனை, மற்றும் பெங்களுர் ஊத்துக்குளி புதுவை மருத்துவ மனைகள் என மருத்துவர்கள், புரவலர்கள் துணையுடன் அதைச் செயல்படுத்திய சாதனையாளர், மரு.ஜீவா.

கம்யூனிஸ்ட் கட்சியின் ஆரம்பகாலத் தோழரான ஈரோடு எஸ்.பி.வெங்கடாஜலத்தின் மகன் என்பதற்கேற்ப பொதுவுடமை லட்சியத்தில் ஈடுபாடு கொண்டவர் தனது பாதையை மேலும் விரிவுபடுத்தி சூழல் பாதுகாப்பு, மனித உரிமை, காந்திய வாழ்க்கை நெறி, மதநல்லிணக்கம், என சிந்திக்கவும் எழுவும் தொடங்கினார். அவ்வாறு ஏராளமான நுல்களை எழுதியும் மொழிபெயர்த்தும் இலக்கியப் பணியாற்றியவர். மக்களுக்கான தத்துவமாக சோசலிசம் மலர வேண்டி அரிய கருத்துகளை தமிழில் வழங்கிய “இடது” காலாண்டிதழைத் துவங்கியவர். அவரது ” திப்புவின் வாள்” (என்.சி.பி.எச். வெளியீடு) மொழிபெயர்ப்பு நூல் தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றது.

சில ஆண்டுகளுக்கு முன் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் நலமுடன் இயங்கி வந்தார். கலை இலக்கியப் பெருமன்றத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வந்தார்.

எந்த நேரமும் ஏதாவதொரு திட்டத்தை வகுத்துச் செயல்படுத்திக் கொண்டிருப்பதை தனது இயல்பாகக் கொண்டிருந்த மருத்துவர் ஜீவாவின் மறைவு ஈடு செய்யமுடியாத இழப்பு. ஏழை நடுத்தர மக்களுக்கான மருத்துவ சேவையை வழங்கிய மறக்கமுடியாத மனிதநேயரான மருத்துவர் ஜீவாவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். கலை இலக்கியப் பெருமன்றம் மறைந்த மரு.ஜீவாவிற்கு செவ்வணக்கம் செய்து, அஞ்சலி செலுத்துகிறது.

சி. சொக்கலிங்கம், தலைவர்

இரா. காமராசு, பொதுச்செயலர்

ப.பா. ரமணி, பொருளாளர்

தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன் இரங்கல் பதிவு 

ஈரோட்டின் இடதுசாரி + காந்திய அடையாளம்! சுற்றுச்சூழல் ஆர்வலர்! ஜேசி குமரப்பா பொருளாதாரக் கொள்கைகளின் தீவிரப் பரப்புரையாளர்! காந்தி அறம் பல்கலைக்கழக சிறப்பு விருந்தினர் உரையாளர்! பல்வேறு இடதுசாரி இயக்கத் தோழமைகளுடனும் ஐக்கியம் ஒற்றுமையை தோழமையைப் பேணிய பண்பாளர்! ஈரோடு நகருக்கு  நான் செல்லும்போதெல்லாம் என்னை ஒரு சிறப்பு விருந்திணனாக நடத்தும் தமிழுணர்வு கொண்ட பண்பாளர்!

ஏழை மக்களுக்கான குறைந்த அளவு மருத்துவ சிகிச்சைக்கான கூட்டுறவு மருத்துவமனையை உருவாக்கிய  பெருந்தகையாளர்!  ஆழ்ந்த மார்க்சிய பற்றாளர்! நம்பிக்கையாளர்  தமிழினம் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பெட்டகம் தோழர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்களின் மறைவு தமிழுலகுக்கு பேரிழப்பு!

சனநாயகப் பண்பு என்ன என்பதை அவரிடம்தான் கற்க வேண்டும்! அத்தகைய தோழரின் இறப்பில் அவரது குடும்பம் மட்டுமல்ல தமிழுலகமே அவரை இழந்தது பெரும் வேதனை! அவரது முதுமை இயற்கை அவரை தன்னோட இணைத்துக் கொண்டது! அவரது வாழ்வு நமக்குரிய பாடம்!படிப்பினை! தோழருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் புகழ் அஞ்சலியிடம் தெரிவித்துக் கொள்கிறோம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *