small scale labours

ஊரடங்கால் முடங்கிய தமிழ்நாட்டு சிறுதொழில்களைப் பற்றிய பார்வை

உலக வரலாற்றில் ஒரு உன்னதமான நாளான தொழிலாளர் தினம் இன்று. உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் கொரோனா பெருந்தொற்றின் ஊரடங்கு காரணமாக சிறு குறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.

தமிழகம் அடைந்த பெரும் வளர்ச்சியும், தமிழக மக்களின் வாழ்வாதாரமும்  பெருநிறுவனங்கள் கொண்டுவந்த முதலீட்டாலோ வேலைவாய்ப்பாலோ  மட்டுமல்ல நிகழ்ந்தது அல்ல. தமிழக வாழ்வாதாரத்தில் பெரும்பகுதி  ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதி சார்ந்து நடைபெறும் சிறு குறு தொழில்களின் பங்களிப்பால்தான் பூர்த்தியாகிக் கொண்டிருந்தது. இந்த ஊரடங்கில் அந்த தொழில்களை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் நிலை பேரவலமாக  இருக்கிறது.

நெசவுத் தொழில்

காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், கும்பகோணம் என்று தனிச்சிறப்பு வாய்ந்த பட்டு உற்பத்தியை மட்டும்  நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன. உதாரணமாக,

கும்பகோணத்த்தில் மட்டும் 30 ஆயிரம் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் ஒரே வருமானம் நெசவு மட்டும்தான்.

இவர்கள் குடும்பத்துடன் இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாதத்திற்கு 2 புடவையில் இருந்து 5 புடவை வரை நெசவு செய்து வியாபாரியிடம் கொடுப்பார்கள்.

அதற்கு வியாபாரி கொடுக்கும் கூலியை வைத்து தங்களது குடும்பத்தினை நடத்தி வந்தனர்.

கொரோனா ஊரடங்கால் இந்த குடும்பங்கள் அனைத்தும் கடந்த 36 நாட்களாக வேலையில்லாமல், வருமானத்திற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றன. பட்டு உற்பத்தியில் இருக்கும் காஞ்சிபுரம், ஆரணி மற்றும் திருபுவனம் என இந்த தொழிலில்  ஈடுபடுபவர்கள் அனைவர்களின் நிலையும் இதுதான்.

நெசவு மற்றும் கைத்தறி லுங்கிகள் தயாரிக்கும் தொழில் நாமக்கல், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், வேலூர் மாவட்டத்தின் காங்கேயநல்லூர் என பல பகுதிகளில் நடைபெறுகிறது.

இங்கு தயாரிக்கப்படும் லுங்கி உள்ளிட்டவை மராட்டியம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்பொழுது உற்பத்தியும் நடைபெறவில்லை. ஏற்கனவே தாயரித்த லுங்கிகளும் போக்குவரத்து  இல்லாமல்  தேங்கிக் கிடக்கிறது. இதனால்  ஆயிரக்கணக்கான தறி உரிமையாளர்ளும், தொழிலார்களும் வேலையின்றி வருமானமின்றி இருக்கிறார்கள்.

பாத்திர உற்பத்தி

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மட்டும் பித்தளைப் பாத்திரங்கள் தயாரிப்பு தொழிலில் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வேலை செய்தால் நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை வருமானம் கிடைக்கும். 

நெல்லை டவுன், பழையபேட்டை, தச்சநல்லூர் பகுதிகளில் அதிக அளவில் பித்தளைப் பட்டறைகள் இருக்கின்றன.  இங்கு உற்பத்தியாகும் பாத்திரங்கள் தென்மாவட்டங்கள் முழுவதும் விற்பனையாகும். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கின் காரணமாக பித்தளைப் பாத்திரங்கள் உற்பத்தியை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த தொழிலை கும்பகோணம், தாராசுரம், எலுமிச்சங்காபாளையம், சுவாமிமலை, மாங்குடி, வலையப்பேட்டை, திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், அண்ணலக்ரஹாரம் பகுதிகளிலும் ஏராளமான குடும்பங்கள் செய்து வருகின்றனர். அவர்களின் நிலையும் இக்கட்டானது தான். 

மதுரை, சேலம், ஈரோடு, திருப்பூர், சிவகங்கை மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் எவர்சில்வர் பாத்திர உற்பத்து நிகழ்ந்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் மட்டும்  அனுப்பானடி, வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், ஒத்தக்கடை, ஐராவதநல்லூர், செல்லூர், சோலைஅழகுபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எவர்சில்வர் பட்டரைகள் இயங்குகின்றன. இவற்றை நம்பி ஐயாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதுவரை அவர்களுக்கு அரசு அறிவுத்த  1000 ரூபாயைத் தவிர, வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. மேலும் அனைத்தும் சிறு குறு உற்பத்தி என்பதால், பட்டறை வைத்திருப்பவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக இருப்பதால் அவர்களாலும் எந்த உதவியும் செய்ய இயலவில்லை.  

பீடி தொழில்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெண்கள் நம்பியிருக்கும் மிக முக்கியமான தொழில் பீடி சுற்றும் தொழில். அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி நெல்லை பகுதியில் 53 ஆயிரம் பேர், மேலப்பாளையத்தில் 55 ஆயிரம் பேர், ஏர்வாடியில் 16,514 பேர், அம்பை பகுதியில் 3,604 பேர், சேரன்மாதேவி பகுதியில் 38 ஆயிரம் பேர் உள்பட 12 ஆயிரம் ஆண்கள், 2 லட்சத்து 39 ஆயிரம் பெண்கள் என மொத்தம் 2.51 லட்சம் பீடி சுற்றும் தொழிலாளர்கள். இருக்கிறார்கள் இந்த ஊராடங்கின் காரணமாக மிகப் பெரிய  நெருக்கடிக்கு உள்ளானது இவர்கள் தான். பெரும்பாலும் பெண்களின் உழைப்பை நம்பி மட்டும் இருக்கும் ஆயிரக்கணக்கான இந்த குடும்பங்கள் எந்த சேமிப்பும் இல்லாத அன்றாட வருமானத்தை நம்பி மட்டுமே வாழ்பவர்கள். இப்பொழுது அரசின் உதவியை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

சிற்பக் கூடங்கள்

இதேபோல, திருவண்ணாமலை மாவட்டம் முடையூரில் பல சிற்பக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் உள்ளனர்.

ஊரடங்கு  காரணமாக சிற்பத் தொழில் முற்றிலும் முடங்கிவிட்டது. சிற்பத் தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உதவித் தொகைக்கு விண்ணப்பித்தும், அவர்களுக்கு இன்னும் உதவித்தொகை கிடைக்கவில்லை. இன்னும் எத்தனை நாள் இந்த சோகம் என்று காத்திருக்கின்றனர்.

இதேபோல, ஒவ்வொரு மாவட்டத்திலும் தேன் மிட்டாய், கடலை மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்கள் செய்யும் குடிசைத் தொழிலை நம்பி ஏராளமானோர் இருக்கிறார்கள். இப்பொழுது அனைவரின் வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளது. அனைவரின் வாழ்வையும் மீட்க அரசு உடனடியாக  செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *