ஜெய்பூரிலுள்ள நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட பணம் பெற்றதற்கான ஒப்புகைச் சீட்டு (ரசீது), கொரொனா பெருந்தொற்று பேரிடரை நிர்வகிப்பதில் அரசின் தவறான அணுகுமுறையை வெளிப்படுத்தியிருக்கிறது.
நாராயணா பல்நோக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளி ஒருவரிடம், டயாலிசிஸ் செய்துகொண்ட போது மருத்துவர் உடுத்தியிருந்த சுயபாதுகாப்பு கவச உடைக்கான (PPE) தொகையென்று ரூ.170 பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
மருத்துவத்திற்கு செலவு செய்ய வழியில்லாத ஏழை மக்கள்தான் அரசு மருத்துவ காப்பீடுகள் மூலம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைகளைப் பெறுகின்றனர். கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில் அரசின் மருத்துவக் காப்பீடை கொண்டுள்ள வருமானமில்லாத ஏழையொருவர், தனக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரின் சுயபாதுகாப்பு கவச உடைக்காக ரூ.170 செலவு செய்ய வைத்திருப்பதன் மூலம் அவர் மீது பெருஞ்சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. இது அநீதியாகும்.
ஒரு பெருந்தொற்று பேரிடர் கால நெருக்கடியில் ஒருவர் தனது மருத்துவத்திற்காக ரூ.170 செலவு செய்ய நேர்ந்ததற்கு அரசு என்ன செய்ய முடியும் என நீங்கள் கேட்கலாம்; அதென்ன அவ்வளவு பெரிய குற்றமா என வினவலாம்.
சிகிச்சையளித்த மருத்துவரின் சுய பாதுகாப்பு கவச உடைக்கு ரூ.170 செலவு செய்ய நேர்ந்திருக்கும் அந்த குறிப்பிட்ட நபர், ஜன் தன் யோஜனா திட்டத்தின் பயனாளர்களான 20.4 கோடிகளில் ஒருவராக மற்றும் வயது முதிர்ந்த 3 கோடி விதவைகளுக்கான திவ்யாங்க் திட்டத்தின் பயனாளர்களில் ஒருவராக இருந்திருந்தால் மட்டுமே இந்திய அரசின் ஊரடங்கு கால அதிகபட்ச நிவாரண நிதியான ரூ.1500-ஐ மாதமொன்றுக்கு பெற்றிருக்க முடியும்.
அரசின் மருத்துவக் காப்பீட்டைக் கொண்டிருக்கும், ஊரடங்கு கால அதிகபட்ச நிவாரண நிதியான ரூ.1500 பெற்ற பயனாளர் ஒருவர், ஊரடங்கு காலத்தில் தனது மருத்துவ சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும் ரூ.170 செலவு செய்ய நேர்ந்திருப்பது அநீதிதான். அவர் வாரம் இருமுறை டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நோயாளியாக இருக்கும் பட்சத்தில் மாதமொன்றிற்கு ரூ.1360 செலவழிக்க வேண்டிய அவரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
உலகெங்கும் கொரோனா பெருந்தொற்று தீவிர நிலையுள்ள காலத்தில், மருத்துவர்களுக்கான கையுறைகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட சுய பாதுகாப்பு கவச உடைகளின் உள்நாட்டு உற்பத்தியை ஏற்றுமதி செய்துவிட்டு, உள்நாட்டின் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் சுயபாதுகாப்பு கவச உடைகள் பற்றாக்குறையுடன் பணியாற்ற வேண்டிய நிலையை ஏற்படுத்தியது அரசினுடைய தவறுதான்! நாட்டின் மருத்துவர்களுக்கு அரசு இலவசமாக கொடுக்காத சுயபாதுகாப்பு கவச உடையின் விலையை ஏழையொருவர் மீது சுமத்துவது அநீதிதான்!
ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்கிருக்கும் சமூக-பொருளாதார தேவைகளின் பல்வேறு அம்சங்களை அரசு கண்டுகொள்ளத் தவறியதன் அடையாளமாக தனியார் மருத்துமனையினுடைய மருத்துவரின் சுய பாதுகாப்பு கவச உடைக்கு ஏழையொருவர் பணம் செலுத்தியதற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டு இருக்கிறது.