கடந்த புதன்கிழமை இந்திய உள்துறை அமைச்சகம், கொரோனா ஊரடங்கால் வெளி மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த மாநிலத்திலுள்ள தங்களின் வாழ்விடங்களுக்கு திரும்பிச் செல்ல அனுமதித்து இருக்கிறது. மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு ஆரம்பித்த 36 நாட்களுக்குப் பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப இந்திய உள்துறை அமைச்சகம் செயலாற்றியிருக்கிறது.
கடந்த மார்ச் 23ந் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அடுத்த 4 மணி நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கவிருந்த முழு ஊரடங்கை பிறப்பித்தார். அன்றாட வருமானத்திற்கு வாய்ப்பில்லாத ஊரடங்கு கால பட்டினி நிலைக்கு அஞ்சி புலம்பெயர் தொழிலாளர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப தொடங்கினர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் பச்சிளம் குழந்தைகளோடு போதிய உணவில்லாமல் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே தங்கள் ஊருக்குத் திரும்பத் தொடங்கினர்.
இது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து மார்ச் 28-ம் தேதி, ’ஊருக்குத் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்தி அவர்களுக்கான தங்கும் முகாம்களை அமைக்க’ மாநில அரசுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டுதலை வழங்கியிருந்தது. இருந்தும் மார்ச் 30 வரையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 பேர், ஊரடங்கின் போது பல நூறு கிலோமீட்டர் நடைப்பயணத்தின் மூலம் ஊர் திரும்பும் முயற்சியின் காரணமாக இறந்திருக்கிறார்கள்.
சில மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களிலிருந்து ஊர் திரும்ப வாகன வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்தன. இதன் காரணமாக ஏப்ரல் 19-ம் தேதி, ’மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர் தொழிலாளர்களின் இடப்பெயர்வுக்கு முற்றிலுமாக அனுமதி மறுத்து’ மற்றுமொரு வழிகாட்டுதலை மாநில அரசுகளுக்கு வழங்கியது.
இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட 36 நாட்களுக்குப் பிறகு, வருமானத்திற்கு வழியில்லாத பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் பசிக்கு அஞ்சி, கடும் துயரங்களுக்கும், இழப்புகளுக்கும் மத்தியில் தங்கள் சொந்த ஊரை அடைந்ததற்குப் பிறகு, நாட்டிலுள்ள 1 கோடியே 30 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் அரசு ஒரு முடிவு எடுத்திருக்கிறது.
மேலும் இம்முடிவானது சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான இடப்பெயர்வை நிர்வகிக்கும் இந்திய உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பை மாநில அரசுகளின் மீது சுமத்துவதாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே கடும் நிதி நெருக்கடியில் கொரோனா தடுப்புப் பணிகளில் களத்தில் நேரடியாக செயலாற்றிக் கொண்டிருக்கும் மாநில அரசுகளுக்கு இது மேலும் நிதி நெருக்கடியை கொடுக்கும் நடவடிக்கையாகும் என்று கேரள மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஊரடங்கு அறிவிப்பதில், செயல்படுத்துவதில் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் பெரியண்ணன் மனப்பான்மையில் எதேச்சதிகாரமாக செயல்படும் மத்திய அரசு, அதற்கான விலையினை மட்டும் மாநிலங்களின் மீது சுமத்துகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களின் உணவுத் தேவைக்கும், வாழ்வாதார தேவைக்கும் அரசு வழியேற்படுத்திக் கொடுத்திருந்தால் அவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த நகரத்தைவிட்டு வெளியேற வேண்டிய தேவையே இருந்திருக்காது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் மிக முக்கிய அங்கம் வகிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பசித்த வயிறுகளையும், வாழ்வாதார தேவைகளையும் பொருட்படுத்தியிராத அரசின் ஊரடங்கு அறிவிப்பே அவர்களை நகரத்திலிருந்து தங்கள் சொந்த ஊரை நோக்கி விரட்டியடித்தது. விரட்டியடித்த 36 நாட்களுக்குப் பின் தற்போது மிகத் தாமதமாக வழியனுப்ப கொடியசைக்கிறது அரசு.