மார்க்கண்டேய கட்ஜூ

பெரியாரை துரோகி என்று பதிவிட்ட முன்னாள் நீதிபதியை வறுத்தெடுத்த தமிழர்கள்

பெரியாரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றும், துரோகி என்றும் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜூ தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். இந்திய சுதந்திரத்தின் போது இது மக்களுக்கான சுதந்திரம் இல்லை என்று சொல்லி அதனை எதிர்த்து கருப்பு தினமாக பெரியார் அறிவித்ததை சொல்லும் ஒரு படத்தை பகிர்ந்து “ராஸ்கல்” என்று மோசமான வார்த்தைகளில் நாகரிமின்றி பதிவிட்டிருந்தார். 

ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சியினரும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பெரியார் சிலைகளை ரகசியமாக சேதப்படுத்திவிட்டு செல்வது, அவரது சிலையின் மீது காவி சாயத்தினை ஊற்றிவிட்டு செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது சமூகத்தில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த வரிசையில் மார்க்கண்டேய கட்ஜூவும் இணைந்திருப்பது தமிழர்கள் மத்தியில் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழர்கள் இணையதளத்திலும், அவரது முகநூல் பக்கத்தின் கமெண்ட் பகுதிகளிலும் மார்க்கண்டேய கட்ஜூ அவர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். வட இந்தியாவைச் சேர்ந்த முற்போக்காளர்களும் கூட மார்க்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மார்க்கண்டேய கட்ஜூவின் கமெண்ட் பகுதியில் பதியப்பட்ட சில கருத்துக்கள் இங்கு மொழிப்பெயர்த்து அளிக்கப்பட்டிருக்கிறது.

புகழ்: சங்கியாய் உருவெடுத்துள்ள திரு கட்ஜூ அவர்களே! பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் பிராமணர்களிடமும், பனியாக்களிடமும் கை மாறுவதை அவர் விரும்பவில்லை. ஆனால் அது இப்போது உண்மையாகி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-சும், அம்பானி, அதானியும் தான் இப்போது நாட்டை ஆள்கிறார். முதலில் போய் வரலாற்றைப் படியுங்கள்.

பெரியாரின் புரட்சிகரமான சிந்தனைகளால் தான் பாஜக-வாலும், ஆர்.எஸ்.எஸ்-சினாலும் தமிழ்நாட்டில் நுழைய முடியவில்லை. உங்களைப் போன்றோரால் மற்ற மாநிலத்தவரும் பெரியாரை படித்துவிட்டால், அவர்களும் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-சோடு சேர்த்து உங்களையும் தூக்கி எறிந்துவிடுவார்கள். அதனால் பெரியாரைத் தொடாதீர்கள். 

பாலசிங்: (பெரியார் அப்படி சொன்னது) ஏனென்றால் சுதந்திர இந்தியாவில் இப்படிப்பட்ட சில மூளை வீங்கிகள் தலைமை நீதிபதியாய் வருவார்கள் என்பதை அவர் முன்பே கணித்திருந்தார்.

பீமா பி.கே: ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களின் அலுவலங்களில் 2003-ம் ஆண்டு வரை இக்கொடியை ஏற்றவும் இல்லை. இந்து மகா சபா இன்னும் பிரிட்டிஷ் மகாராணிக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகா சபையினர் தான் பிரிட்டிஷ் அடிமைகளாக இருந்தார்கள்.

கண்ணகி தர்மராஜ்: ஆமாம். 1947 ஆகஸ்ட் 15-ம் தேதியை பெரியார் கருப்பு நாள் என்று அறிவித்தார். ஆனால் ஏன்? பிரிட்டிஷாரிடமிருந்து அதிகாரம் பார்ப்பனர்கள் மற்றும் பனியாக்களின் கைகளுக்கு மட்டுமே மாறுகிறது. மண்ணின் மக்களுக்கு மாறவில்லை என்றார். கட்ஜூ எனும் சாதிப்பெயரை உங்கள் பெய்ருக்குப் பின்னால் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அதுவே நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது.

கிருஷ்ணா மோகன்: எல்லோருக்கும் விமர்சிக்கும் உரிமை உண்டு. நான் சொல்வதை அப்படியே பின்பற்றாதீர்கள் என்று பெரியாரே சொன்னார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த உங்களுக்கு ஜெயலலிதாவைப் பற்றி நிறைய தெரிந்திருக்கிறது. ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பொருட்படுத்தாமல் சுதந்திரம் பெறுவதைப் பற்றி பெரியார் சொன்னவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறீர்கள். பார்ப்பனரல்லாதோருக்கு எதிராக பார்ப்பனர்கள் செய்த கொடுமைகளை அவர் தீவிரமாக எதிர்த்த காரணத்தினாலேயே அவரை புறக்கணித்திருக்கிறீர்கள். பெரியாரை விமர்சிப்பதற்கு முன் அவரைப் படியுங்கள். மேலோட்டாமாக மேய்ந்துவிட்டு பேசுவதில் அர்த்தமில்லை.

சண்முக சுந்தர்: பெரியார் எந்த அடிப்படையில் சொன்னார் என்பது முக்கியம். உங்களால் பெரியாரை புரிந்து கொள்ள முடியாது. அவருடைய உண்மையான சண்டையும், அதன் நோக்கமும் தெரியாவிட்டால், நீங்கள் அமைதியாக இருப்பதே நல்லது.

அமித் குமார்: மரியாதைக்குரிய ஐயா, நீங்கள் இதுவரை இந்திய வரலாற்றையே படித்ததில்லை போல. ஆகஸ்ட் 15 என்ற நாளை வெற்றி நாளாக ஒரு குழுவான காங்கிரஸ் கொண்டாடியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாதிரியான பிற குழுக்கள் இந்த சுதந்திரத்தைக் காட்டிலும் அதிகமான சீர்திருத்தங்களைக் கேட்டன. அதனால் அவர்கள் அதனை கருப்பு நாளாகக் கருதினர்.

கேப்ட்நோபில் பெரேரியா: பெரியாரைப் போன்ற ஒரு பெரிய மனிதரை ராஸ்கல் என்று அழைப்பதன் மூலம், நீங்கள்தான் உண்மையான ராஸ்கல் என்று அழைக்கப்படுவதற்கான தகுதியோடு இருப்பதைக் காட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கு வயதாகி விட்டது. அதனால் வடக்கு-தெற்கு பிரிவினை உருவாக்காமல் வாயினை மூடிக் கொண்டு உங்கள் வாழ்க்கையினை அமைதியாக வாழ முயலுங்கள்.

நீலகண்டன்: உங்களையெல்லாம் யார் நீதிபதியாக்கியது? நீங்கள் கடந்த காலங்களின் அர்னாப் கோஸ்வாமியாகவே இருந்திருக்கிறீர்கள். பெரியாரைப் புரிந்து கொள்ள கல்வி அறிவு தேவை. உங்களைப் பார்த்தால் பரிதாபமாகவே இருக்கிறது.

கங்வீர் ரத்தோர்: இந்தி-இந்து என்று இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றும் நோக்கத்தினை பல்வேறு கலாச்சாரங்களைக் கொண்ட தேசிய இனங்களின் மீது திணிக்க முயலும் பிராமணிய அமைப்பின் ஏஜெண்ட்களே தந்தை பெரியாரை பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்று இழிவுபடுத்துகிறார்கள். பெரியார் பிரிட்டிஷ் ஏஜெண்ட் என்றால், உங்கள் வாதத்தின்படிஜோதிபாய் புலேவும் பிரிட்டிஷ் ஏஜெண்ட் தான். சமூக நீதியில் உங்கள் பங்களிப்பு என்ன? நீங்கள் நீதிபதியாகவும், பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர். தற்போது இந்த அரசாங்கத்தில் நீங்கள் ஏதோ ஒரு பதவியை எதிர்பார்க்கிறீர்கள். அடுத்த 10 ஆண்டுகளுக்கு வேறெந்த கட்சியும் ஆட்சிக்கு வராது என்று உங்களுக்கு தெரிந்திருப்பதால் சங்கிகளுடன் ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள முயல்கிறீர்கள். இந்தி மொழி பேசாத மக்களின் மீது இந்தியைத் திணிப்பதை ஆதரித்த நீங்கள், இட ஒதுக்கீடு நீக்கத்தையும் ஆதரித்த நீங்கள், இப்போது பெரியாரை இகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

கந்த பிரகாஷ்: பெரியார் இதனை சொன்ன போது அதற்கான காரணத்தையும் சொல்லி இருந்தார். அதனை உங்களால் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அதற்குப் பிறகு நாம் விவாதிக்கலாம் பெரியார் சொன்னது சரியா தவறா என்று.

ராஜ் பன்னீர் செல்வம்: மிக்க நன்றி. உங்களின் இந்த மலிவான விளம்பரத்தின் மூலம் பெரியார் வட இந்தியாவில் பலரின் கவனத்தையும் ஈர்க்கப் போகிறார். பெரியாரை வட இந்தியாவிற்கும் கொண்டு செல்லும் முன்னெடுப்பை மேற்கொண்டிருப்பதற்கு நன்றி.

இவ்வாறு மார்க்கண்டேய கட்ஜூவை தமிழர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இணைந்து ஃபேஸ்புக்கில் வறுத்தெடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *