விவசாய சட்டங்கள்

விவசாய மசோதாக்களை ஆதரிப்பவர்கள்தான் அரசியல் செய்கிறார்கள்! மன்னார்குடி ரங்கநாதன் அரசியல் செய்கிறார்!

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பை மீறியும், மாநிலங்களவை மரபை மீறியும் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் மிகத் தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் விவசாயிகள் பல இடங்களில் போராடி வருகிறார்கள். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது விவசாயிகளின் ஒருமித்த குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் எனும் பெயரில் விவசாய சங்கத்தினை வைத்திருக்கும் மன்னார்குடி ரங்கநாதன் அவர்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் நன்மைக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். 

மன்னார்குடி ரங்கநாதன்

மன்னார்குடி ரங்கநாதன் அவர்களின் இந்த அறிக்கை குறித்து தமிழகத்தில் விவசாயிகள் சிக்கல்களுக்கு தொடர்ந்து போராடுபவரும், வேளாண் மசோதாக்களை தீவிரமாக எதிர்த்து வருபவருமான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் அவர்களிடம் கேட்டோம்.

Madras Radicals: புதிய வேளாண் சட்டங்களின் மூலம் விவசாய உற்பத்தி அதிகரிக்கும் என்றும், விவசாயிகளின் பசி போக்கப்படும் என்றும் மன்னார்குடி ரங்கநாதன் தெரிவித்துள்ளாரே. அதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

சண்முகம்

சண்முகம்: விவசாய உற்பத்திக்கும் இந்த சட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த மூன்று சட்டங்களிலும் உற்பத்தி சார்ந்தோ அல்லது உற்பத்தி பெருக வழிவகுக்கும் என்றோ ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. இதனை வர்த்தகம்/வியாபாரம் சார்ந்த சட்டம் என்றுதான் அரசே குறிப்பிடுகிறது. 

ரங்கநாதன் இது பசியைப் போக்கும் என்று வேறு சொல்கிறார். ஆனால் மத்திய அரசு அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தமானது மேலும் பட்டினியையும் பசியையும் அதிகரிப்பதற்குத் தான் வழிவகுக்கும். அத்தியாவசியப் பொருட்கள் பாதுகாப்புச் சட்டம் 1955 எதையெல்லாம் அத்தியாவசியப் பொருட்கள் என்று எதைக் குறிப்பிட்டதோ, அதையெல்லாம் இந்த புதிய சட்டத்தின் மூலம் நீக்கியிருக்கிறார்கள்.

இப்போது எவ்வளவு வேண்டுமென்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம், எவ்வளவு காலம் வேண்டுமனாலும் வைத்துக் கொள்ளலாம், இந்த சேமிப்பு வைத்திருப்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்களின் விருப்பம்போல விற்பனை செய்து கொள்ளலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ளார்கள். இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களை அதிக அளவில் பதுக்கி வைக்கும் வாய்ப்புள்ளது. 

உதாரணத்திற்கு அதானி அக்ரோ லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் என்று ஒரு நிறுவனம் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் துவங்கியிருக்கிறார்கள். ஒன்பது லட்சம் டன் வேளாண் விளைபொருட்களை தங்களால் சேமித்து வைக்க முடியும் என்று அறிவித்துள்ளார்கள். இதன் மூலம் உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து விலை உயரும்போது விற்பனை செய்வார்கள். இதுதான் அடித்தட்டு மக்களை பட்டினி சாவினை நோக்கி நகர்த்துகிறது.

Madras Radicals: வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக சொல்கிறாரே?

சண்முகம்: வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்பதாக அவர் சொல்கிறார். நாங்கள் அப்படி எதிர்க்கவில்லை. அந்த சட்டங்களின் ஒவ்வொரு சரத்து குறித்தும் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ஒரு வாதத்திற்காக அவர் சொல்கிறபடியே வைத்துக் கொண்டாலும், பாரதிய கிசான் சங்கம் எனும் சங்கம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய சங்கம். அதனுடைய அகில இந்திய பொதுச் செயளாலர் பத்ரி நாராயணன் செளத்ரி, இந்த சட்டத்தைப் பற்றி குறிப்பிடும்போது விவசாயம் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்று கூறியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் ஒரு அங்கமாக இருக்கக் கூடிய அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரே இப்படி கூறியிருக்கிறார். 

மறுநாள் அவருக்கு பதில் சொல்லும் போதுதான் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்பது நீக்கப்படாது, அது அப்படியேதான் இருக்கும் என்று கூறினார். குறைந்தபட்ச ஆதார விலை நீக்கப்படாது என்று பிரதமர் உறுதி அளித்திருப்பதாக இதைத்தான் மன்னார்குடி ரங்கநாதன் சொல்கிறார். 

ஆனால் பாரதிய கிசான் சங்கத்தின் பத்ரி நாராயணன் செளத்ரி, வெற்று உறுதிமொழிகளை நாங்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் அளித்திருக்கிறார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக 2014-ல் இருந்து பல வாக்குறுதிகளை பிரதமர் அளித்துள்ளார். சுவாமிநாதன் குழு பரிந்துரையின் படி, வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதலாக வழங்குவோம் என்று 2014-ம் ஆண்டு கூறினார்கள். அதை நடைமுறைப்படுத்தினார்களா? மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவதாக சொன்னார்களே போட்டார்களா? கருப்பு பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்றனர். கொண்டு வந்தனரா? 

ஜி.எஸ்.டி-ல் மாநில அரசுகளுகு உரிய இழப்பீட்டுப் பணத்தை வழங்குவதாக 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி இழப்பீட்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டது. இழப்பீடு கொடுக்கப்பட வேண்டும் என்பது சட்டத்திலேயே இருக்கிறது. ஆனால் இன்றுவரை அதனைக் கொடுக்கவில்லை. மாநில அரசுகளை நோக்கி நீங்கள் வேண்டுமென்றால் கடன் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்கள். முறைப்படி மாநில முதலமைச்சர்களை எல்லாம் அழைத்து ஆலோசனை நடத்தி ஒரு நிதி நெருக்கடி இருக்கிறது என்றெல்லாம் கூட கூறவில்லை. சட்டப்பூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகளையே இவர்கள் நிறைவேற்றவில்லை. சட்டத்தில் இல்லாத வாய்மொழி உறுதிமொழியினை அமல்படுத்துவார்கள் என்று எப்படி நம்பச் சொல்கிறீர்கள்? 

எனவே அரசியல் காரணங்களுக்காக நாங்கள் எதிர்ப்பதாகக் கூறி மன்னார்குடி ரங்கநாதன்தான் அரசியல் செய்கிறார். ஆளுங்கட்சியில் உள்ள விவசாயிகள் சங்கமே இந்த வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது. ஆளும் கூட்டணியில் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த சிரோன்மணி அகாலிதளம் எதிர்க்கிறது. உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்கிறார். அவர்கள் என்ன காரணத்திற்காக இதை செய்தார்கள்?  அதனால் அரசியல் காரணங்களுக்காக என்று சொல்லி ஒட்டுமொத்த சிக்கலையும் திசை திருப்புவதற்காக மன்னார்குடி ரங்கநாதன் ஒரு அரசியல் செய்கிறார். 

Madras Radicals: இந்த சட்டங்களின் காரணமாக விவசாயிகள் தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்துகொள்ளலாம் என்று சொல்கிறாரே? 

சண்முகம்: அப்படி விற்பனை செய்ய இப்போது என்ன தடை இருக்கிறது? விவசாயிகள் தங்கள் பொருட்களை வேறு மாவட்டத்திற்கோ, வேறு மாநிலத்திற்கோ கொண்டு சென்று விற்பதற்கு இப்பொழுதும் சட்ட ரீதியாகவோ, நிர்வாக ரீதியாவோ தடைகள் இல்லை. ஆனால் விவசாயிகள் ஏன் கொண்டு செல்லவில்லை? கன்னியாகுமரியில் விளையக்கூடிய செவ்வாழையை காஷ்மீரில் கொண்டுபோய் விற்பனை செய்வதற்கு இப்பொழுதும் எந்த தடையும் இல்லை. ஆனால் சாதாரண விவசாயிகள் அதனை செய்வதற்கு வலிமையற்றவர்கள். 

இப்பொழுது இந்த சட்டங்கள் மூலமாக பெரு நிறுவனங்களின் ஆன்லைன் வர்த்தகத்திற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் இடைத்தரகர்கள் அதிகரிக்கப் போகிறார்கள். பொருட்களை யாருமே பார்க்காமல், எங்கு கொடுக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல் வியாபாரம் நடக்கப் போகிறது. 

இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவதாக சொல்கிறார்கள். அதற்குப் பதிலாக யாரை வைக்கப்போகிறார்கள்? இந்தியாவில் 85% சதவீதம் சிறு குறு விவசாயிகள் தான். அவர்களுக்கு தங்கள் பொருட்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான எந்த வசதியும் இல்லை. அதனால்தான் ஏற்கனவே எந்த தடையும் இல்லாத பொழுதும் அவர்கள் கொண்டு செல்லவில்லை. 

மேலும் யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவர்களிடம் உங்கள் பொருட்களைக் கொடுக்கலாம் என்று சொல்கிறார்கள். நமது விவசாயிகள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பேரம் பேசி பொருட்களை விற்பனை செய்கிற பேர வலிமையோடெல்லாம் இல்லை. இந்தியாவில் ஒப்பந்த விவசாயம் ஏற்கனவே இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கரும்பு ஒப்பந்த விவசாயம் நடைபெறுகிறது. குஜராத்தில்   மிளகாயில் ஒப்பந்த சாகுபடி இருக்கிறது. மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளத்தில் ஒப்பந்த சாகுபடி இருக்கிறது. இவை எல்லாவற்றிலும் கசப்பான அனுபவம்தான் மிஞ்சியிருக்கிறது. 

பெப்சி கம்பெனி குஜராத்தில் உருளைக்கிழங்கு சாகுபடியினை ஒப்பந்த முறையில் மேற்கொள்கிறது. பெப்சி கம்பெனி ஒரு கிலோ உருளைக் கிழங்கை 18 ரூபாய்க்கு வாங்கி, 10 கிராம் ’லேஸ்’ சிப்சினை 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. என்ன தான் கவர் பிராசஸ் இருந்தாலும் இது பகற்கொள்ளையே. இதனைத் தடுக்க ஏதேனும்  வழி இருக்கிறதா?

கொடைக்கானலில் கடந்த சீசனில் 180 ரூபாய்க்கு ஒரு கிலோ காபி கொட்டை வாங்கினார்கள் நேஸ்லே நிறுவனத்தினர். 100 கிராம் காபி பொடிக்கு 1299 ரூபாய் என்று விலை போட்டிருக்கிறார்கள். அமேசானில் வாங்கினீர்கள் என்றால் 40 சதவீத தள்ளுபடியில் 699 ரூபாய் என்று விளம்பரம் செய்கிறார்கள். என்ன தான் காய வைத்து மணம், சுவையெல்லாம் ஏற்றி விளம்பரம்   செய்தாலும் ஒரு கிலோ 180 ரூபாய்க்கு வாங்கி 100 கிராம்1299 ரூபாய் என்று சொல்வது மிகப்பெரிய பகற்கொள்ளை. இதைத் தடுக்க இந்த சட்டத்தில் இடமில்லை. 

அடுத்து விவசாயி விலையினைப் பேசி விலை படியவில்லை என்றால் விளைபொருட்களை அப்படியே விட்டுவிட்டு வருவதற்கு விவசாயியிடம் என்ன இருக்கிறது? குடோன் இருக்கிறதா, குளிர்சாதனக் கிடங்கு இருக்கிறதா? அழுகும் பொருட்களை என்ன செய்வது? இந்த வசதிகள் எல்லாம் பெரிய நிறுவனங்களுக்குத் தான் இருக்கிறது. 

நெல் உட்பட 22 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் 25-ம் தேதியில் இருந்து அரசு கொள்முதல் நிலையங்களை மூடிவிட்டதால் பல்லாயிரக்கணக்காண நெல் மூட்டைகள் தெருவில் கிடக்கிறது. அரசு விலை ஒரு குவிண்டாலுக்கு 1988 ரூபாய். ஆனால் வியாபாரிகள் 800 ரூபாய்க்கும் 900 ரூபாய்க்கும் கேட்கிறார்கள். வேறு வழியில்லாமல் விவசாயிகளும் கொடுக்கிறார்கள்.

 அரசு விலை நிர்ணயம் செய்துவிட்டு கொள்முதல் செய்யவில்லை என்றால்  அந்த விலைக்கு என்ன மரியாதை இருக்கிறது? வியாபாரிகள் அதே விலைக்கு வாங்க வேண்டும் என்று சட்டம் ஏதேனும் இருக்கா இல்லையே! ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலையான MSP என்பது இந்த நிலையில் இருக்கும்போது, மோடி வாய்மொழியாக சொல்வதை ஏற்றுக்கொண்டு, சட்டங்களை எதிர்ப்பது தவறு என்று சொல்வதில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை.

Madras Radicals: ரங்கநாதன் இப்படிப்பட்ட ஒரு அறிக்கையை கொடுப்பதற்கு அவருக்கு என்ன தேவை இருக்கிறது?

சண்முகம்: அரசியல் நிரப்பந்தமாக இருக்கலாம். இந்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு பிரச்சரங்கள், போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே  அறிமுகமான சில பெரிய விவசாயிகளை அழைத்து இப்படி அறிக்கைகள் கொடுக்கச் சொல்லி, வீடியோக்கள் வெளியிட்டு திசைதிருப்பும் வேலையை  மத்திய ஆளும் கட்சி செய்கிறது. அதன் ஒரு பகுதிதான் இவை எல்லாம்.

மகாதானபுரம் ராஜாராமன் ஒரு பெரிய விவசாயி. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவரும் ஒரு வீடியோ கொடுத்திருக்கிறார். அரசுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள எதிர்ப்பை திசைதிருப்ப ஆளும் கட்சி இதனை செய்கிறது என்று சொல்லி முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *