பாராளுமன்றம்

50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய காவி வலதுசாரி கும்பல்

உலகில் முதல் குடியரசு ஜனநாயக நாடான அமெரிக்காவில் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த வலதுசாரி மற்றும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் செனட் சபை கட்டிடத்தை சூறையாடினர். இந்த நடவடிக்கைக்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பலைகளும் கண்டனங்களும் குவிந்தன.

ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் வலதுசாரி இந்துத்துவ கும்பல் பாராளுமன்ற வளாகத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர். 

பசுவதை தடை சட்டத்தை ஏற்காததால் கலவரத்தில் இறங்கிய வலதுசாரிகள்

1966-ம் ஆண்டு இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, பசு விவகாரத்தை ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் தீவிரமாகக் கையிலெடுத்தன. பசுவதைக்கு எதிராக உடனடியாக சட்டம் கொண்டுவரக் கோரினார்கள். அதை அப்போதைய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. எனவே, டெல்லியில் பூரி சங்கராச்சாரியார் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக  அறிவித்தார். 

நிர்வாண சாமியார்களின் அட்டகாசம்

இதைத் தொடர்ந்து 1966-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நாடு முழுவதுமிருந்து ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா, பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான பாரதிய ஜன சங்கம் மற்றும் நிர்வாண சாமியார்கள், சாதுக்கள் உட்பட இந்துத்துவா அமைப்பினர் பல்லாயிரக்கணக்கில் டெல்லியில் திரண்டு இந்தியப் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு தாக்குதலை நடத்தினர்.

பார்லிமெண்டை சுற்றி வளையுங்கள் என கட்டளையிட்ட ஜனசங்க எம்.பி

நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்பட்ட ஜனசங்க எம்.பியான ராமேசுரானந்தா மேடையிலே ஏறி ஒலிப்பெருக்கியில் “நான் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டேன். வேகமாக அணிவகுத்து முன்னேறுங்கள், பார்லிமெண்டைச் சுற்றி வளையுங்கள். ஒரு மந்திரி கூட வெளியே போகக்கூடாது” என்று ஆவேசக் கூச்சலிட்டுப் பேசினார். 

ஒரு போலிசார் கொல்லப்பட்டார்

அவர் பேசி முடிப்பதற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாண சாமியார்கள் காவல்துறையின் வளையத்தை உடைத்துக் கொண்டு பார்லிமெண்ட் வாயில்களினுள் கலவரக்காரர்கள் நுழைந்தனர். வலதுசாரி சமூகவிரோதிகளின் தாக்குதல்களினால் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மேலும் கலவரத்தில் சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஏழு நபர்கள் கொல்லப்பட்டனர்.

வாள், ஈட்டி, திரிசூலங்களுடன் வெறிகொண்டு கிளம்பிய வன்முறையாளர்கள்

கலவரத்துக்கு முன்னர் ”கௌ ராக்க்ஷா மகாபியான் குழு” நவம்பர் 7-ம் தேதி அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது. இந்தக் குழுவிற்கு பிரம்மச்சாரி என்பவர் தலைமை தாங்கினார். இவர் பசு பாதுகாப்பு மற்றும் இந்து மத சட்டங்களை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்-சின் ஆதரவோடு 1951 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ரோஷனாரா பூங்கா, செங்கோட்டை மற்றும் அஜ்மல் கான் பூங்காவில் இருந்து ஊர்வலமாக பாராளுமன்றம் நோக்கி வலதுசாரி ஆதரவாளர்கள் செல்லத் தொடங்கினர். 

‘தி ட்ரிப்யூனின் செய்தி’ அறிக்கையின்படி, மதிய வேளையில்  காவித் துணி அணிந்திருந்த சாமியார்கள் மற்றும் கலவர கும்பல்கள் வாள்கள், ஈட்டிகள் மற்றும் திரிசூலங்களுடன் வெறிகொண்டு நாடாளுமன்ற வளாகத்தை நெருங்கிச் சென்றனர். 

மருத்துவமனைய கல் வீசி தாக்கினர்

கொனாட் பிளேஸ் மற்றும் மத்திய டெல்லியினை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த இரண்டு துணை மின்நிலையங்களைத் தாக்கினர். அதோடு நில்லாமல் அருகில் இருந்த இர்வின் மருத்துவமனை மீது கல்வீசித் தாக்கி நோயாளிகள் உட்பட ஊழியர்களையும் முதியோர்களையும் வெளியேற்றினர். மேலும் இந்திய அரசு பதிப்பகம் உட்பட நிறுவனங்கள் பலவற்றை அடித்து சேதப்படுத்தினர்.

காமராசரைக் கொல்ல காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீவைப்பு

மேலும், 1966-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி  நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தில் பேசிய காமராஜர் “பசுவதைத் தடைச் சட்டம்” கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது என்றும், அது பைத்தியக்காரத்தனமானது என்றும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரானது, பெரும்பான்மை மக்கள் அசைவ உணவு உண்ணும் போது அதற்கு எதிராக அரசு முடிவெடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதானல் ஆத்திரமடைந்த சங்பரிவார கும்பல் காமராஜர் தங்கி இருந்த அகில இந்திய காங்கிரசு கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தீயிட்டு கொலை முயற்சியில் இறங்கினார். ஆனால் காமராஜர் அந்த கொலைமுயற்சியில் இருந்து உயிர்தப்பினார்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அன்று பாராளுமன்றத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தவர்கள் இன்று ஆளும் அரசாக பாராளுமன்றத்திலே அமர்ந்து அமெரிக்கா நாட்டின் ஜனநாயகம் குறித்து கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *