தற்போது கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு போராடிக் கொண்டிருப்பதைப் போல, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில், தமிழ்நாடு முழுதும் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க போராடிக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டு மே-ஜீன் மாதங்களில் சென்னை மாநகரம் கடும் தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொண்டது. மக்கள் அன்றாட பயன்பாட்டிற்கான தண்ணீர் கிடைக்காமல் கடும் நெருக்கடியை சந்தித்திருந்தனர். 2019-ம் ஆண்டு நிலவிய கடும் தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக சென்னையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டன. தற்போது போலவே அப்போதும் தகவல் தொழில்நுட்ப ஊழியகள் (IT Employees) வீட்டிலிருந்து பணிசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 20,000 ஊழியர்கள் பெங்களூருக்கு அனுப்பப்பட்டு அங்கு பணி செய்தனர். 2018-ம் ஆண்டு போதிய மழைப் பொழிவு இல்லாததன் காரணமாக சென்னையின் முக்கிய நீராதாரங்கள் வறண்டு போனதாலேயே இந்நிலை ஏற்பட்டிருந்தது.
2018-ம் ஆண்டின் நிலவரப்படி 1.03 கோடி மக்கள்தொகை உடைய சென்னை மாநகரத்தின் தண்ணீர் தேவை மட்டும் நாளொன்றுக்கு 1100 மில்லியன் லிட்டராக இருக்கிறது. தனிநபர் தண்ணீர் பயன்பாடு நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 107 லிட்டர் ஆகும். தற்போதைய கொரோனா காலத்தில் கைகளைக் கழுவ வேண்டியதும் மற்றும் அடிக்கடி குளிப்பதற்கான தேவையும் இருப்பதால் அன்றாட தண்ணீர் தேவை அதிகரித்திருக்கிறது.
தண்ணீர் பற்றாக்குறையுடைய கோடை காலத்தோடு, தனிநபர் தண்ணீர் தேவையை அதிகரித்திருக்கும் ‘கொரோனா’ காலமும் சேர்ந்திருப்பதால் தமிழ்நாடு அரசு, கோடை-கொரோனா அவசரக் காலத் தண்ணீர் தேவையை தீர்ப்பதற்குரிய செயல்திட்டங்களை உருவாக்குவது அவசியம். மேலும் சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி போன்ற பெரு நகரங்களுக்கான தண்ணீரை நீராதாரங்களிலிருந்து எடுத்து மக்களுக்கு விநியோகிக்கும் பொழுது கொரோனா பொருந்தொற்று தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதும் அவசியம்.
மிகக்குறிப்பாக வருமானமில்லாத இந்நாட்களில் அடிப்படைத் தேவைக்கான தண்ணீர் கட்டணமின்றி விநியோகிக்கப்பட வேண்டுமென்று மக்கள் தரப்பில் கோரப்படுகிறது.
எதிர்வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்குரிய சாத்தியப்பாடுகளை மனதிற் கொண்டு மக்கள் சிக்கனமாக தண்ணீரைக் கையாள வேண்டியது அவசியமாகும். தண்ணீர் சிக்கனத்துக்கான வழிமுறையாக “திறந்த தண்ணீர் குழாயிலிருந்து வழிகிற நீரை நேரடியாக பயன்படுத்தாமல், தேவைக்கேற்ற தண்ணீரை வாளிகளில்/ குவளைகளில் நிரப்பி பயன்படுத்துதல்” மூலம் தண்ணீர் செலவைக் குறைக்க இயலும்.
நீர்நிலைகளை தூர்வாருவதற்கு கிடைத்திருக்கக்கூடிய வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதுமுள்ள நீராதாரங்களை தூர் வாருவதற்கு அரசு கொரோனா ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக் கொள்வது அவசியமான ஒன்று. ஊரடங்கால் வருமானமின்றி இருக்கக்கூடிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழுள்ள மக்களுக்கு, இதன் மூலம் வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
மக்களும் தங்களின் கொரோனா கால ஒய்வு நேரத்தை தங்கள் வீடுகளில் மழைநீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் செலவிடுவது பயனுள்ளதாக அமையும். தண்ணீருக்காக குடங்களுடன் மக்கள் வீதிக்கு வர ஆரம்பித்தால் கொரோனா பரவுதலையும் தடுக்க முடியாது, தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்க முடியாது என்பதை அரசு உணர்ந்து உடனடியாக செயல்பட வேண்டும்.